மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கவும் வீட்டுப் பாடத்தை நிறுத்தவும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவு!

0

சிபிஎஸ்இ பள்ளிகள், இனி 1-வது 2-வது வகுப்பில் படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கவும், வீட்டுப்பாடத்தை ரத்து செய்யவும் சிபிஎஸ்இ இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மகராஷ்டிரா அரசு வெளியிட்ட ஆணையின்படி, புத்தகப்பை சுமை, குழந்தையின் உடல் எடையில் 10சதவீதம் வரை மட்டுமே இருக்கவேண்டும் என உத்தரவிட்டது. இதைப் பின்பற்றி சிபிஎஸ்இ இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதேப்போல் எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகப்பை சுமையை குறைக்க சிபிஎஸ்இ யோசித்து வருகிறது.   

”கனமான புத்தகப்பையை சுமந்து செல்வதால், வளரும் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, நீண்ட காலம் இதை தொடர்வதால் பெரும் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம் குழந்தைகளின் முதுகெலும்பு மிருதுவாக இருப்பதால், அதிக எடை கொண்ட பைகளால் முதுகு வலி, தசை வலி மற்றும் தோள்பட்டை வலி மற்றும் மயக்கம் போன்ற உபாதைகள் வர வாய்ப்புள்ளது,” 

என்று சிபிஎஸ்இ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எல்லா சிபிஎஸ்இ பள்ளிகளும் முறையான பாட அட்டவணையை பின்பற்றி, அதை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டு புத்தக சுமையை குறைக்க வழிவகுக்கவேண்டும் என்று சிபிஎஸ்இ இயக்ககம் கடுமையாக உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் அதற்கேற்ப தங்களது அட்டவணையை மாற்றி அமைக்கவும், தினமும் பள்ளிக்கு எடுத்துச்செல்லும் புத்தகங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தேவையான திருத்தங்களை செய்யவும் கூறியுள்ளது. அதேபோல் பள்ளிகள், மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதிகளை செய்து தரவும் உத்தரவிட்டுள்ளது. 

புத்தக சுமையை குறைக்க, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் தினமும் பேப்பர்களில் மாணவர்களை எழுத வைக்கலாம் என்றும் பாடத்திட்டத்தில் புதிய முறைகளை கையாளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், இரு மாணவர்கள் இணைந்து படிக்கும் வகையில் பிரித்து, ஒரே புத்தகத்தை பகிரும் முறையை அறிமுகப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும், குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, புத்தக பைகளை அவ்வப்போது சுத்தம் செய்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பி பழக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.  

“புத்தக பை தோளில் தொங்கி விழுமளவு இல்லாமல், இறுக்கமாக குழந்தையின் முதுகுக்கு ஏற்ப சரிசெய்து அணிவிக்கப்படவேண்டும்,” என்றும் சிபிஎஸ்இ உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அண்மையில், மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சந்திராப்பூர் என்ற ஊரைச்சேர்ந்த 12 வயது மாணவன் பத்திரிகையாளர்களை அழைத்து, தாங்கள் புத்தகப்பை சுமையால் சந்திக்க நேரிடும் இன்னல்களை பகிர்ந்து, நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார். இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் லாக்கர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, அங்கேயே புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

கட்டுரை: Think Change India