34 வயதில் உலக பிரபலம் ஆன உள்ளூர் பெண் பிரியங்கா சோப்ரா'வின் வாழ்க்கை பயணம்!    

0

பிரியங்கா சோப்ரா, இன்று உலக பிரபலம் ஆகியுள்ள இவர் ஓர் இரவில் இந்த இடத்தை அடைந்திடவில்லை. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மருத்துவ தம்பதிக்கு மகளாக பிறந்து, தனது குழந்தைப்பருவத்தை பல மாநிலங்களில் கழித்தவர் பிரியங்கா. லக்னோ, டெல்லி, சண்டிகர், பரேலி, புனே போன்ற பல நகரங்களில் தனது பள்ளி படிப்பை முடித்து அமெரிக்கா சென்றார். பின்பு இந்தியா திரும்பிய பிரியங்கா, ஒரு என்ஜினியராக அல்லது மனநல ஆலோசகராக ஆகவேண்டும் என முடிவெடுத்தார். இருப்பினும் ஒரு நடிகராக ஆவார் என அவர் நினைத்ததில்லை.

"நான் விதியை நம்புகிறேன், அதனுடன் கடுமையான உழைப்பும் இருக்கவேண்டும் என்றும் நம்புகிறேன். நான் ஒரு என்ஜினியர் ஆக வேண்டும் என்று என்னை தயார் செய்து கொண்டிருந்தேன், ஆனால் என் அம்மாவும் என் சகோதரனும் என்னுடைய புகைப்படத்தை மிஸ் இந்தியா போட்டிக்கு அனுப்பி வைத்தனர். எனக்கு அதுப்பற்றி தெரியாது. ஆனால் அதுதான் விதி அல்லவா?"

என்று பிரியங்கா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அப்போது கூறி இருந்தார். 

புகழின் முதல் படியாக பிரியங்கா பெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றிவாகை சூடி, மிஸ் வோர்ல்ட் போட்டிக்கு இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார். அங்கும் அவருக்கு வெற்றிதான்! 'உலக அழகி' ஆக 2000ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா மகுடம் சூடப்பட்டார். இந்த தருணமே, அவர் தனது வழக்கமான வாழ்க்கை பாதையில் இருந்து பிரபலமாக உருவெடுக்கக் கூடிய சினிமா துறையில் நுழைய திருப்பமாக அமைந்தது. 

"நான் விதியின் செல்லப்பிள்ளை என்று உணர்கிறேன். என் வழியில் வரக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும், முழு மனதுடன், என் இதயத்தையும், ஆத்மாவையும் செலுத்தி உழைக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால் எனது வெற்றிக்கான முழு பாராட்டுகளும் என்னையே சேரும், ஏனென்றால் நான் தானே கேமராவின் முன் நின்று ஆக்ஷன், கட் சொல்லும் வரை நடிப்பவள், அதை வேறு யாரும் செய்யவில்லையே," 

என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் கூறி இருந்தார் பிரியங்கா.  

2002 இல் பிரியங்காவின் திரையுலக பிரவேசம் 'தமிழன்' எனும் தமிழ் படத்தின் மூலம் தொடங்கியது. 2003 இல் வெளிவந்த அனில் ஷர்மாவின் 'தி ஹீரோ' எனும் ஹிந்தி படத்தில் தான் பிரியங்கா சோப்ராவுக்கு ப்ரேக் கிடைத்தது. பாலிவுட் எனும் ஒரு அடர்ந்த காட்டிற்குள் வழியும் கிடைத்தது. பின், 2004 இல், ஏதராஜ், முஜ்சே ஷாதி கரோகி என்ற இரண்டு ஹிந்தி படத்தில் நடித்து நிதானமான வளர்ச்சியை கண்டுவந்தார் பிரியங்கா. 2008 இல் பிரியங்காவின் திரை வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம் 'பேஷன்'. மதுர் பண்டர்க்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில், மேக்னா மாதுர் என்ற சிறு நகரத்து பெண், பேஷன் உலகை சவால்களோடு வென்றதை தத்ரூபமாக தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் பிரியங்கா. அவருடைய முழு திறமையும் இந்த படத்தில் வெளிவந்தது.  

பேஷனை தொடர்ந்து தோஸ்தானா, 7 கூன் மாஃப், பர்ஃபி, மேரி கோம், பாஜிராவ் மஸ்தானி  என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தனது அற்புத நடிப்பின் மூல ரசிகர்களுக்கு தந்தார் பிரியங்கா. பாலிவுட் உச்சத்தை தொட்ட பிரியங்கா சோப்ரா தன் பார்வையை உலக அளவு திருப்பினார். 2012 இல் 'இன் மை சிட்டி' எனும் சர்வதேச பாப் ஆல்பம் மூலம் பாடகராக உருவெடுத்தார். பின், 2013 இல் பிட்புல் உடன் மற்றொரு ஹிட் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். சர்வதேச அளவில், 2015 ஆம் ஆண்டு பிரியங்கா உச்சத்தை அடைந்தார் என்றே சொல்லலாம். அலெக்ஸ் பாரிஷ் என்ற எஃப்பிஐ ஏஜென்ட் கதாப்பாத்திரத்தில் 'குவான்டிகோ' எனும் திகில் தொடரில் நடித்து உலக ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து , 'பே வாட்ச்' என்ற பிரபல தொடரில் முக்கிய பாத்திரமான விக்டோரியா லீட்ஸ் ஆக நடித்துள்ளார். இத்தொடர் மே 2017 இல் உலக அளவின் வெளியாக உள்ளது. பிரபல ஆங்கில நடிகர்கள் ட்வெயின் ஜான்சன், ஜாக் எஃப்ரான் உடன் நடித்துள்ளார். 

"உலக அளவின் மக்கள் என் திறமையை அடையாளம் காண்பதை நான் ரசித்து மகிழ்கிறேன். மாண்ட்ரியலில் நான் ஷூட்டிங் செய்து கொண்டிருக்கும் போது 'இந்த பெண் யார்? இவரை பார்க்க எதற்கு இத்தனை கூட்டம்? என்று கூறிவிட்டு என்னைப் பற்றி கூகிள் செய்து தெரிந்து கொள்கின்றனர்," என்று கூறுகிறார் பிரியங்கா. 

பிரியங்கா, ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய இலக்கிலிருந்து என்றுமே அவர் விலகியது இல்லை. அதே சமயம் உலகின் பல நல்ல மாற்றங்களுக்காகவும் உதவி புரிந்துள்ளார். தன்னுடைய சமூக பணிகளை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பாத பிரியங்கா, பல முக்கிய பிரச்சாரங்களில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். மருத்துவம், கல்வி, பெண்கள் மேம்பாடு என்று பல துறைகளில் பணிகள் புரிந்துள்ளார். 2010 இல் யூனிசெஃப், பிரியங்காவை தனது விளம்பர தூதராக நியமித்தது. 'தீப்ஷிக்கா' எனும் 'டீன் ஏஜ் மற்றும் இளம் பெண்களின் கனவுகளை பலப்படுத்த வாழ்வியல் முறை, திறன் பயிற்சி மற்றும் பிணையம் ஏற்படுத்தல்' குறித்தான திட்டத்தில் பிரியங்காவின் பங்கு அதிகமாக இருந்தது. 

யூனிசெஃப் அறிக்கையின் படி 'தீப்ஷிக்கா' பிரச்சாரம், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 65000 இளம் பெண்கள், தொழில்முனைவில் ஈடுபட உதவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

இது தவிர, பிரியங்கா 'ஆவாஸ் தோ' எனும் குழந்தைகளுக்கான இலவச கல்வி பிரச்சாரம் மற்றும் 'டேர் டு கேர்' எனும் முயற்சி மூலம் ஒதுக்கப்பட்ட இளம் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். இதே போன்ற பல தன்னார்வ அமைக்களுடன் இணைந்து பல முக்கிய பிரச்சனைக்களின் பிரச்சாரத்தில் இடம் பெற்றுள்ளார் பிரியங்கா. 

"பிரபல முகமாக நான் இருப்பது இதுபோன்ற பிரச்சாரங்களில் உதவியாக இருக்கிறது. ஒரு நடிகராக எங்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதை நல்ல ஒரு முயற்சிக்கு பயன்படுத்திக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. என்னை பொருத்தவரையில், பிரபலங்கள் பலரும் இது போன்ற முக்கிய பிரச்சனைகளில் முன் நின்று செயல்படவேண்டும்." 

34 வயது ஆகும் பிரியங்கா சோப்ரா கண்டங்கள் தாண்டி பல பெண்களுக்கு உந்துதலாகவும் ஊக்கமளிப்பவராகவும் இருந்து வந்துள்ளார். தன் இளம் வயதிலேயே இத்தனை பேரையும் புகழையும் அடைந்துள்ள பிரியங்கா பலருக்கும் ரோல் மாடலாக நிச்சயம் இருப்பார்.