டெல்லி மேம்பாலம் அடியில் குடிசைவாழ் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் இளைஞர்!

0

கிழக்கு டெல்லியின் யமுனா கதர் பகுதியில் உள்ள ஒய் கே ஜக்கி முகாமில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மோசமான நிலையில் இருக்கும். கால்வாய்கள் திறந்த நிலையிலேயே இருக்கும். இது அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகும். இங்குள்ள சூழல் பார்ப்பதற்கே கவலையளிப்பதாக இருக்கும். குடிசைவாசிகளின் இருப்பிடமான இந்த முகாமில் சுமார் 8,000 குடும்பங்கள் வசிக்கின்றன. இத்தகைய மோசமான சூழலுக்கிடையேயும் இங்கு மேம்பால கட்டுமானத்திற்கான ஸ்லேப் ஒன்று மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடியதாக அமைந்துள்ளது. ஏனெனில் இங்கு சுமார் 20-க்கும் அதிகமான குழந்தைகள் எழுதிக்கொண்டும், உரக்க படித்துக்கொண்டும் இருப்பதைப் பார்க்கமுடியும்.

இந்தக் குழந்தைகள் அருகாமையில் மேம்பாலம் கட்டுவதற்கு பயன்படும் ஸ்லேப் ஒன்றின் அடியில் பரபரப்பாக படித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களது ஆசிரியர் 23 வயதான சத்யேந்திர பால் பிஎஸ்சி மாணவர். அவரும் இதே முகாமைச் சேர்ந்தவர். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சத்யேந்திரா, குடிசைப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்காக வகுப்பெடுக்கிறார். அவர்களால் இயன்ற தொகையை கட்டணமாக பெற்றுக்கொள்கிறார். 

மயூர் விஹார் ஃபேஸ் 1-ல் பாக்கெட் வி பகுதியில் நகராட்சிப் பள்ளி இருப்பினும் அதை அடைய சாலைகளைக் கடந்து இந்தக் குழாந்தைகள் நீண்ட தூரம் நடக்கவேண்டும் என, தி இண்டியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

”இங்குள்ள பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். குழந்தைகளைப் பள்ளியில் விட்டு திரும்ப அழைத்துவர இவர்களுக்கு நேரம் இருக்காது. எனக்கு கல்வியின் மதிப்பு தெரியும். எனவே இந்தக் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கலாம் என எண்ணினேன். இந்த கிராம மக்கள் வழங்கும் சிறு தொகை என்னுடைய கல்லூரிக் கட்டணத்தை செலுத்தவும் என்னுடைய செலவிற்கும் உதவுகிறது. இதற்காக என்னுடைய பெற்றோரைச் சார்ந்திருக்க முடியாது,” என்றார் சத்யேந்திரா.

இந்த குடிசைவாசிகளில் பெரும்பாலானோர் உத்திரப்பிரதேசத்தின் பதாவுன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என ’ஜீ நியூஸ்’ தெரிவிக்கிறது. கல்வி கற்கப் போதுமான ஆதரவு கிடைக்காததால் பெரும்பாலான மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பிற்குப் பிறகு படிப்பைத் தொடர்வதில்லை. இந்தச் சூழலே அவரை இவ்வாறு திட்டமிட வைத்தது. கடந்த சில ஆண்டுகளாக அவர் வகுப்பெடுப்பதைக் கண்ட உள்ளூர் மக்கள் அவருக்கு உதவினர். டேபிள், நாற்காலி, கரும்பலகை உள்ளிட்ட பொருட்களை நன்கொடை அளித்தனர்.

சத்யேந்திரா யுபிஎஸ்சி தேர்விற்குத் தயாராகி வருகிறார். இதனால் வகுப்பெடுப்பதை தொடர முடியாது என்பதே அவரது கவலை. ஆனால் அவரால் இயன்றவரை குடிசைவாசிகளின் குழந்தைகளுக்கு சேவையளிப்பேன் என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA