ஆட்டு மனிதன், லிசார்ட் என அதிரும் அரக்கன் வேடங்களில் நிதி திரட்டும் அன்பு இதயம்!

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில், ஹிட் அடித்த ஹாலிவுட் படங்களில் பேமஸ் கதாபாத்திரங்கள் போல் வேடமிட்டு ரூ15லட்சம் வரை நிதி திரட்டி நோயுற்ற குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார் கர்நாடகவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி. 

0

‘அடுத்து என்ன வேஷம் ரவி அண்ணா?’ - ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி காலத்தில் ரவி கடப்பாடியை நோக்கி அனைவரும் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது... 

ஏனெனில் ஆண்டுத்தோறும் ரவி அணிந்து கொள்ளும் வித்தியாமான அலங்காரங்கள் அப்படிப்பட்டவை. 

ஒரு முறை ஹாலிவுட் இயக்குனர் கில்லர்மோ டெல் டோரோவின் ஃபேமஸ் படமான ‘பான்ஸ் லேபிரிந்த்’-ல் இடம்பெற்ற ‘ஃபான்’ எனும் ஆட்டுக்கொம்பு, காது, கால், வால் கொண்ட மனித கதாபாத்திரம் போன்றும், 2010ம் ஆண்டில் ‘ஸ்பைடர் மேன்’ படத்தில் வரும் லிசார்ட் கதாபாத்திர அலங்காரத்திலும், மற்றொரு ஆண்டில், அரையாடு அரை பேயுருவத்திலும் தன்னை அலங்கரித்து கொண்டு, கிருஷ்ண ஜெயந்தி சமயத்தில் கடல்நகரமான உடுப்பி தெருக்களில் நம்பமுடியாத உயிரினங்களாய் ஒவ்வொரு ஆண்டும் காட்சி அளித்து வருகிறார் ரவி.  

பட உதவி : milaap
பட உதவி : milaap

ரவி மட்டுமில்லை கிருஷ்ண ஜெயந்தியை கோலாகலமாய் கொண்டாடும் கோவில்களுள் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ண கோவில் திருவிழாவில் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், சிறுத் தொகையை சேகரிக்கவும் கிருஷ்ணன் உட்பட விதவித வேஷங்களில் அலங்கரித்து கொள்வர் கலைக்கூட்டத்தார். 

இதுபோன்ற குழுவினர்களுள் ஒருவர் தான் கர்நாடக மாநிலம் உடுப்பி கடப்பாடி பகுதியைச் சேர்ந்த ரவி கடப்பாடி. விழாக்காலத்தில் பெரும் தொகையை திரட்டிவிட வேண்டும் என்பதே ரவியின் நோக்கமும், ஆனால், அத்தொகை கலையை வளர்க்கவோ, அவரை உயர்த்தவோ சேகரிக்கப்படுவதில்லை. 

நலிவுற்ற நோயுற்றோருக்கு உதவுவதற்காக அந்நிதியை சேகரித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் விதவித வேடமிட்டு ரூ 15 லட்சம் வரை நிதி திரட்டியுள்ளார்.

வறுமையின் காரணமாக 9ம் வகுப்பு மட்டுமே படித்த ரவி, பள்ளிப்படிப்பை நிறுத்திய மறு ஆண்டிலே வேலைக்கு சென்றுள்ளார். பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில், அவருடைய அண்ணன் மற்றும் அண்ணியுடன் சேர்ந்து வாழும் அவர், கட்டிடத் தொழிலாளி. அவரது ஒரு நாள் கூலி ரூ 400- 450 வரை. ஆனால், அனைத்து தினங்களிலும் பணி இருக்குமா என்றால், அது சந்தேகம் தான். வறுமையின் நுனியில் வாழ்ந்தாலும், ரவியின் முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்பே நிறைந்தேயிருக்கும். இந்நிலையில், 

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் டிவியில் செயலிழந்த கைகளைக் கொண்ட சிறுமிப் பற்றி செய்தியை பார்த்திருக்கிறார். பிஞ்சு குழந்தையின் கைகள் செயலிழந்திருப்பதை கண்டு கண்கலங்கியுள்ளார். மருத்துவர்களின் அலட்சியத்தின் காரணமாக குழந்தை அன்விதாவின் கைகள் செயலிழந்துள்ளன. குழந்தையின்  பெற்றோர்களுக்கு நிதி கொடுத்து உதவ முடியவில்லையே என்று வருந்திய அவர், அந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவில் சேகரிக்கப்படும் பணத்தை அவர்களுக்கு வழங்க எண்ணியுள்ளார். அவருடைய எண்ணமும் நிறைவேறியது.

பட உதவி : facebook
பட உதவி : facebook

“சின்ன வயதிலிருந்தே நிறைய கஷ்டங்களையும், கண்ணீர்களை பார்த்துள்ளேன். குழந்தைகள் கஷ்டப்படுவதை பார்ப்பது வேதனையை அளிக்கிறது. அதனால் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளித்து, முடிந்த உதவியை செய்ய நினைத்தேன்,” 

 என்று நியூஸ் மினிட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ரவி.

அன்று முதல், விதவித வேடமிட்டு சேகரிக்கும் பணத்தை, வறுமையால் சிகிச்சைக்கு பணமின்றி இருக்கும் நோயுற்ற குழந்தைகளின் குடும்பங்களுக்கு அளிக்க திட்டமிட்டார். அவருடைய முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்த அவருடைய நண்பர்கள், ரவியின் முயற்சிக்கு உறுதுணையாக நின்று ஒரு குழுவாக சேர்ந்தனர். 

அவர் வேடமிட்ட முதல் வேஷம் தான் ‘பான்ஸ் லேபிரிந்த்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஃபான்’ எனும் ஆட்டுக்கொம்பு, காது, கால், வால் கொண்ட மனித கெட்டப்.

வேஷம் அணியும் ரவி பட உதவி : milaap.org
வேஷம் அணியும் ரவி பட உதவி : milaap.org
“கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கவேண்டும் என்று ஆடை, அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்தினோம். ‘ஃபான்’ கதாபாத்திரத்துக்கான ஆடைத் தயாரிப்பு மட்டுமே ஒரு மாதங்களாகின. அவ்வேடமிட்டு கொள்ள 12மணி நேரமாச்சு. மறுநாள் காலையில் 11மணிக்கு வெளியில் செல்ல செப்டம்பர் 15ம் தேதி இரவு 10மணிக்கு வேஷம் அணிய ஆரம்பித்தேன். 36மணி நேரம் அவ்வேடமிட்டு இருந்து செப்டம்பர் 17ம் தேதி இரவு 11 மணிக்கு அலங்காரத்தை கலைத்தேன்.” 

அவ்வேடத்தின் மூலம் ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் திரட்டினார். தத்ரூப லுக்குகாக நேரடியாய் பெயின்ட்டை அவரது தோலில் பூசிக் கொள்வதால், கடுமையான தீக்காயங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

பட உதவி : milaap.org
பட உதவி : milaap.org

இந்த வருடமும், உதவியை எதிர்நோக்கி உள்ள நான்கு குழந்தைகளை அவர் அடையாளம் கண்டுள்ளார். 2 வயதுடைய ஒரு குழந்தை இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, 3 வயதுக்கு உட்பட்ட குழந்தை, தலசீமியா நோயாலும், 10 வயதுடைய குழந்தை கால் தொடர்புடைய நோயாலும், 13 வயதிற்குட்பட்ட மற்றொரு குழந்தை சிறுநீரக கோளாறாலும் பாதிக்கப்படுள்ளனர். உங்கள் நலனிலும் அக்கறைக் காட்டி தொடர்ந்து பிறருக்கும் உதவுங்கள் ரவி கடப்பாடி...

தகவல்கள் உதவி : The newsminute மற்றும் milaap.org