3டி தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட காது மடலை 14 வயது ஜெயந்துக்கு பொறுத்தி மருத்துவர்கள் சாதனை!

0

கடந்த மாதம் ஏற்பட்ட ஒரு விபத்தில் இடது காது மடலை இழந்தார் சென்னையைச் சேர்ந்த 14 வயது ஜெயந்த். அவர் தலையில் கேப் அணிந்து அதை காதுவரை இழுத்து மறைத்து கொள்கிறார். காது மடல் இல்லாத குறைக்கான தீர்வு அவருக்கு இப்போது கிட்டியுள்ளது. 3டி ப்ரின்ட் செய்யப்பட்ட காது, மும்பையில் இருந்து அவருக்கு வருகிறது. 

"அந்த காது பாலிஜெட் ப்ளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளது. அவரின் சரும நிறத்திற்கு ஏற்ற அதே நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது." என்று சென்னையைச் சேர்ந்த ஜெயந்துக்கு சிகிச்சை அளிக்கும் மேக்சில்லோ ஃபேசியல் அறுவை சிகிச்சை மருத்துவர் Dr.ஜான் நேசன் தெரிவித்தார்.  

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்ட செய்தியின் படி, மருத்துவத்துறையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, ஒரு உறுப்பின் மாதிரியை போலவே 3டி ப்ரின்டிங் முறையைக் கொண்டு பாதிக்கப்பட்ட உறுப்புகளை தற்போது தயாரிக்க முடியும். அதில் குறிப்பாக, காது மடல்கள் மற்றும் பற்களை சுலபமாக அச்சிட முடியும் என்பதால் இது சாத்தியமாகி உள்ளது. மேலும் அக்குழுவினர், இதே முறையின் மூலம், கல்லீரல் செல்களை உருவாக்கும் கடினமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  

பெங்களுருவில் பன்டோரம் டெக்னாலஜீஸ், அருண் சந்துரு மற்றும் அவரது குழுவினர், 3டி ப்ரின்டிங் முறையில் உயிர் செல்களை கொண்டு கல்லீரல் நச்சுத்தன்மை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.

"செல்கள் திசுக்கள் போன்று அச்சிடப்பட்டு, பிறகு மேல் ஆராய்ச்சிகளுக்காக பயோ-ரியாக்டர்ஸ் இல் வளர்க்கப்படுகிறது ," என்றார். "செல்களை அச்சிட பயோ இன்க் எனும் பொருள் பயன்படுத்துகிறோம். அது செல்கள் மற்றும் ஹைட்ரோஜெல் ஆகிய இரண்டின் கலவையாகும்," என்றார் அருண். 

"மருத்துவ ஆராய்ச்சிகளில், மனித உயிர் திசுக்களை 3டி பயோ முறையில் அச்சிடுவதற்கான செலவு மற்றும் நெறிமுறைகள்; விலங்கு மற்றும் மனிதன் மீதான மருத்துவ சோதனைகளைவிட சுலபமாக உள்ளது,' என்று கூறும் அருண், "வரும் காலங்களில் இது போன்ற தொழில்நுட்பங்கள் மனித உடல் உறுப்புகளின் தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு குறைபாடுகளை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கப்போகிறது," என்றார்.    

ஜூன் 27ஆம் தேதி, எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் இதய நோய் வல்லுனர் Dr.கோபால்முருகன், 3டி ப்ளாஸ்டிக் இதயத்தின் உதவியோடு சிக்கலான ஸ்டென்ட் பொறுத்தும் இதய அறுவை சிகிச்சையை செய்தார். அதேப்போல் சென்னையின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் Dr.கே.எம்.செரியன், 3டி மாடல் ஒன்றின் உதவியோடு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கடினமான இதய நோய்கான அறுவை சிகிச்சையை ஒரு குழந்தைக்கு நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India