சிறுதொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் கடன் வசதியில் காத்திருக்கும் பெரும் வளர்ச்சி... 

0

இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் கடன் வசதி நிதி சேவைகள் பிரிவில் பெரும் மாற்றத்தை கொண்டு வரக்கூடியது என ஒமிடியார் நெட்வொர்க் மற்றும் பிசிஜி அறிக்கை தெரிவிக்கிறது. இது ஸ்டார்ட் அப் மற்றும் வங்கிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏல இணையதளமான இ-பேவின் நிறுவனர் பியரி ஒமிடியாரின் சேவை அமைப்பான ஒமிடியார் நெட்வொர்க் மற்றும் பிசிஜி, ”கிரெடிட் டிஸ்ரப்டட்: டிஜிட்டல் எம்.எஸ்.எம்.இ லெண்டிங் இன் இந்தியா” எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் கடன், 2023 வாக்கில், 10 முதல் 15 மடங்கு அதிகரித்து ஆண்டுக்கு ஆறு முதல் ஏழு லட்சம் கோடி வரை விநியோகிக்கப்படலாம் என தெரிவிக்கிறது. இந்த துறையில் ஏற்கனவே உள்ள பெரிய நிறுவனங்கள் இல்லாதது மற்றும் புதிய நிறுவனங்கள், வர்த்தக மாதிரிகள் இந்த சந்தையை பயன்படுத்திக்கொள்ளும் நிலை உள்ளது.

“டிஜிட்டல் கடன், இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சர்வதேச அளவில் உயர்த்தக்கூடியது’ என்று ஒமிடியார் நெட்வொர்க் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் ரூபா குட்வா தெரிவித்தார். தற்போதய நிலையில் 600 பில்லியன் டாலர் அளவிலான கடன் தேவை பெரும்பாலும் அமைப்புசாரா வழிகளில் நிறைவேற்றப்படுகிறது. எனவே, இந்தியா ஒரு திரும்புமுனையை அடைய இருப்பதையும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியில் உலகிற்கு முன்னுதாரணமாக விளங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள 60 மில்லியன் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தியாவின் வேலைவாய்ப்பு மற்றும் ஜிடிபிக்கு முக்கிய பங்காற்றுகிறது. எனினும், மற்ற நாடுகளைவிட பின் தங்கியிருக்கிறது. அமெரிக்காவை விட 10 சதவீத புள்ளிகள் மற்றும் சீனாவை விட 23 சதவீத புள்ளிகள் பின் தங்கியுள்ளது.

இந்த இடைவெளிக்கு முக்கியக் காரணம், வர்த்தக நிறுவனங்களுக்கு முறையான கடன் வசதி கிடைக்காமல் இருப்பதாகும். எனவே 40 சதவீத சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைப்பு சாரா வழிகளில், வழக்கத்தைவிட அதிக வட்டிக்கு கடன் பெறுகின்றன.

இந்த நிலை வேகமாக மாறிவருவதாக அறிக்கை தெரிவிக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எல்லாம், டிஜிட்டல் கடனுக்கான வாடிக்கையாளர்கள் இல்லை என்றாலும், அவற்றில் 40 சதவீதத்திற்கு மேல் டிஜிட்டல் கடனை வரவேற்றுள்ளன. இதற்கு மூன்று அம்சங்கள் காரணமாக அமைகின்றன.

2016 க்கு பிறகு அரசு அறிமுகம் செய்த யு.பி.ஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி மற்றும் ஜி.எஸ்.டி ஆகியவை பெரும்பாலான சிறு தொழில் நிறுவனங்கள் அமைப்பு சார்ந்த பொருளாதாரத்தில் வர வைத்திருப்பது முதல் அம்சமாகும். இரண்டாவதாக, போட்டி காரணமாக மொபைல் கட்டணம் குறைந்திருப்பது இணைய வசதியை அதிகமாக்கியுள்ளது. இறுதியாக இந்தியா ஸ்டேக் மற்றும் ஏபிஐ இணைந்த தரவுகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் கடன் வசதி வழங்குவதை விரைவாக்கியிருக்கிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இணைய வசதி பெறும் நிலையில் டிஜிட்டல் தரவுகளை பகிர்ந்து கொள்கின்றன. இவற்றை அவை ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றன. இவற்றில் 60 சதவீத நிறுவனங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் கணிசமான டிஜிட்டல் பரிவர்த்தனை தகவல்களை அளிக்க உள்ளன. இந்த டிஜிட்டல் தகவல்கள் கடன் அளிக்கும் நிறுவனங்கள் விண்ணப்பிப்பபர்களின் கடன் தகுதியை எளிதாக அலச வழி செய்கின்றன.

“பல்வேறு அம்சங்கள் ஒன்றிணைந்து லட்சக்கணக்கான இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு டிஜிட்டல் கடன் வசதியை விருப்பத்தேர்வாக்கும் என அறிக்கை உணர்த்துகிறது,”

என்கிறார் ஒமிடியார் நெட்வொர்க் முதலீட்டு இயக்குனர் அனுராதா ராமசந்திரன். சந்தை தேவையை நிறைவேற்ற சரியான வர்த்தக மாதிரிகளை வங்கிகள் அல்லது நிதி நுட்ப நிறுவனங்கள் கண்டறிந்தால் போதுமானது என்கிறார் அவர்.

இத்தகைய பல வர்த்தக மாதிரிகளையும் அறிக்கை அடையாளம் காட்டுகிறது. டிஜிட்டல் கடன் சேவை நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள், இணைய திரட்டி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்கள் இடையிலான கூட்டு இந்த மேடைகளில் வர்த்தகம் செய்யும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் சென்றடைய உதவும்.

இதே போல ஆட்ட உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இடையிலாக கூட்டும் டிஜிட்டல் கடன் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். நேரடி டிஜிட்டல் கடன் மாதிரியும் பயனுள்ளதாக அமையும்.

டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதோடு, வரி தகவல்கள் அளிப்பு, ஆவணங்களை அணுகும் வசதி மற்றும் அரசு கடன் திட்டங்கள் மூலம் அரசும் இந்த மாற்றத்திற்கு உதவலாம்.

கட்டுரையாளர்: சைபர்சிம்மன்