விமான நிலைய காத்திருப்பில் தோன்றிய சிறு நகரங்களுக்கான 'பஸில் ஸ்னேக்ஸ்' பிராண்ட்

0

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பொறி எதிர்பாராத இடங்களில் இருந்து எல்லாம் வரக்கூடும். எக்ஸ்பெடைட் புட்ஸ்(Expedite Foods ) இப்படி தான் பிறந்தது. அதன் நிறுவனர் அபினவ் குப்தா ஐரோப்பிய நிறுவனத்திற்காக பணியாற்றிக்கொண்டிருந்தார். அங்கு அவர் இந்திய செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்றிருந்தார்.

ஒருமுறை அலுவல் பணியாக அபினவ் மும்பையில் இருந்து பரோடாவுக்கு விமானத்தில் செல்ல வேண்டியிருந்தது. விமான நிலையத்திற்கு சீக்கரமே சென்றுவிட்டவர், இந்திய கிராமப்புற பொருளாதாரம் பற்றிய நாளிதழ் கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது.

அந்த நிமிடத்தில் தான் அவர், இந்தியாவின் மிகப்பெரிய பலமே அதன் 100 கோடி மக்கள் தொகை தான் என்பதை புரிந்து கொண்டார். பலவார திட்டமிடல், ஆய்வு மற்றும் சிந்தனைகளுக்குப்பிறகு அவர் ஸ்னேக்ஸ் தயாரிப்பில் ஈடுபடு தீர்மானித்தார்.

இப்படி தான் எக்ஸ்பெடைட் புட் மற்றும் அதன் பிராண்டான "பஸில் ஸ்னேக்ஸ்" (Puzzle Snacks) பிறந்தது. குஜராத்தி ஸ்னேக்ஸ் முதல் பாரம்பரிய இந்திய ஸ்னேக்ஸ் வரை இந்த பிராண்ட் 24 வகைகளை கொண்டுள்ளது.

உற்பத்தியில் சிக்கல்

“எனக்கு இதில் மிகுந்த நம்பிக்கை இருந்தாலும் யாரும் எனக்கு ஆதரவு தரவில்லை. நான் பேசியவர்கள் எல்லோருமே உற்பத்தி தொழிலில் ஈடுபடுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி கூறி நான் இதில் இறங்கக்கூடாது எனத்தடுத்தனர்” என்கிறார் அபினவ். அவர் தன் கையில் உள்ள சேமிப்பை எல்லாம் போட்டிருந்தாலும் மேலும் நிதி தேவைப்பட்டது. ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.

எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டதாக தோன்றிய போது அவரது உறவினர் ஒருவர் உதவ முன்வந்தார். "எப்படி ஒரு போன் அழைப்பில் அவர் சம்மத்தித்தார் என்று தெரியவில்லை. என்னுடன் நீண்ட கால அடிப்படையில் இணைந்து செயல்பட முடியுமா என்று தெரியாவிட்டாலும் உதவ ஒப்புக்கொண்டார். இதனால் ஊக்கமடைந்து உடனே செயலில் இறங்கி வருபவற்றை எதிர்கொள்ள தீர்மானித்தேன்” என்கிறார் அவர்.

முதலீடு கிடைத்துவிட்டாலும் வர்த்தகத்தை உருவாக்குவது சவாலாக இருந்தது. முதல் ஆண்டில் இருந்து சரியான தயாரிப்பை கொண்டு வருவது முன்னுரிமையாக இருந்தது. அபினவ், ஸ்னேக்ஸ் தரத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால் அதற்கான வழியை தேடிக்கொண்டிருந்தார்.

இதற்காக அவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். "காலை ஆறு மணிக்கு விழித்துக்கொண்டு அருகே உள்ள கிராமங்களுக்குச்சென்று ஆர்டர் சேகரித்து, விநியோகிஸ்தர்களை நியமிப்பேன். இரவு 11 மணி வரை அலைவேன்" என்கிறார் அபினவ்.

ஆனால் கடின உழைப்பையும் மீறி, முதல் டெலிவரிக்குப்பிறகு வாங்குவதை சிலர் நிறுத்திக்கொண்டனர். இது தொடரவே அவர் இது குறித்து விசாரித்தார். வாடிக்கையாளர்களிடம் பேசிய போது, மாதிரியின் சுவை, விற்பனை செய்யப்பட்ட பொருளில் இல்லை என தெரிவித்தனர். மேலும் விசாரணை நடத்திய போது உற்பத்தி ஆலையில் இருந்தவர்கள் தான் புறப்பட்டு வந்த பிறகு சரியாக செயல்படவில்லை என உணர்ந்தார்.

"இது மோசமான சுழற்சியாக இருந்தது. ஒரு பக்கம் நான் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயன்று கொண்டிருந்தேன். ஆனால் அதே நேரத்தில் நான் இல்லாத போது உற்பத்தி செய்யப்பட்ட பொருள் தரமாக இல்லை. இதன் விளைவாக சில நகரங்களில் விநியோகிஸ்தரை மாற்றிய பின் தான், பிரச்சனையை கண்டறிந்து உற்பத்தி குழுவை முழுவதும் மாற்றினோம்” என்கிறார் அவர்.
எக்ஸ்பெடைட் நிறுவனர் அபினவ் குப்தா
எக்ஸ்பெடைட் நிறுவனர் அபினவ் குப்தா

இந்த சம்பவம் விலை மதிப்பில்லாத பாடத்தை கற்றுத்தந்தது என்கிறார் அவர். அதாவது, ஒரு ஸ்டார்ட் அப்பில் எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் பொறுப்பு. தயாரிப்பு முதல் விற்பனை வரை எல்லாவற்றையும் சரி செய்வது வரை எல்லாம் உரிமையாளரின் பொறுப்பு, அதிலும் குறிப்பாக ஆரம்ப நாட்களில் யாரையும் நம்ப முடியாது” என்கிறார் அவர்.

வளர்ச்சி

வேறு எந்த ஸ்டார்ட் அப் போலவே, ஒரு குழுவை அமைப்பது அதிலும் உற்பத்தியில் அமைப்பது மிகவும் சிக்கலானது என்கிறார் அவர். தனிநபர்களிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பது என்பதை அறிந்திருக்கவில்லை என்கிறார். முதலில் வேலைக்கு அமர்த்தியவர்கள் விஷயத்தில் சில தவறுகள் செய்தாலும் பின்னர் அவற்றில் இருந்து கற்றுக்கொண்டார்கள்.

சரியான விற்பனை பிரதிநிதிகளை அமர்த்துவதும் சிக்கலாக இருந்தது. சிறிய நிறுவனம் என்பதாலும், இன்னமும் நிலைபெறாத பிராண்ட் என்பதாலும் அதிகம் பேர் இதில் இணைய முன்வரவில்லை. அதோடு நிதி திரட்டுவதும் சிக்கலாக இருந்தது.

விநியோக வலைப்பின்னல் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் அமைந்துள்ளது. "விநியோக அமைப்பு தவிர வாங்கக்கூடிய விலையை உறுதி செய்துள்ளோம். நல்ல தரமான ஸ்னேக்ஸ் 5 ரூபாயில் இருந்து துவங்குகிறது” என்கிறார்.

இன்னமும் பிராண்ட்டை வளரச்செய்வதில் ஈடுபட்டுள்ளதாகவும் அடுத்த சில ஆண்டுகளுக்கு இதில் கவனம் செலுத்துவோம் என்றும் சொல்கிறார். "கற்றுக்கொண்ட சின்ன, சின்ன விஷயங்களை செயல்படுத்தி வருகிறோம், சரியான தொடர்பு செய்தி மற்றும் உத்தியை கொண்ட வலுவான பிராண்டை உருவாக்க 10-12 மாதங்கள் ஆகும்” என்கிறார் அவர்.

வருவாய்

2012 ஏப்ரல் மாதம் துவங்கியது முதல் எக்ஸ்பெடைட் புட்ஸ் ஆண்டு அடிப்படையில் 100 சதவீத வளர்ச்சி கண்டு, முதன் ஆண்டுக்கு பின் லாபம் ஈட்டி வருகிறது. இந்த வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் அடுத்த சில ஆண்டுகளில் மேலும் முன்னேற முடியும் என்றும் இந்த குழு நம்புகிறது. புதிய விற்பனைக் குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் விநியோகிஸ்தர்கள் மற்றும் ரிடைலர்களை நியமித்து, விற்பனையை பெருக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

உணவு பதப்படுத்தல் துறை அமைச்சக தகவல் படி ஸ்னேக்ஸ் தொழில் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. இந்தியாவில் 1000 க்கு மேல் ஸ்னேக்ஸ் வகைகள் மற்றும் 300 தின்பண்ட வகைகள் விற்கப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் இந்த துறை 10 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே நம்கீன்வாலா, பகுமானியா மற்றும் இந்துபென் காககர்வாலே(ஹால்டிராம் மற்றும் ஆனந்த் தவிர) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

எக்ஸ்பெடைட் புட்ஸ் தங்கள் பஸில் ஸ்னேக்சிற்காக பெரிய திட்டங்கள் வைத்துள்ளது. புதிய உற்பத்தி ஆலைக்கான நிலத்தை கையகப்படுத்த உள்ளனர்.

"விற்பனை பிரிவில், தீவிர இலக்குகளை கொடுத்து, தகுந்த எண்ணிக்கைகளை பெற உழைத்து வருகிறோம். நகர்ப்புற இந்தியாவுக்கு ஏற்ற வகையில் பிராண்டை நிலை நிறுத்த ஆலோசகர்கள் உதவியை நாடியுள்ளோம். வரும் காலத்தில் நவீன தயாரிப்புகளை அறிமுகம் செய்து முக்கிய நகரங்களுக்கு முன்னேற இருக்கிறோம்”என்கிறார் அபினவ்.

இணையதள முகவரி: Puzzle Snacks