தன் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவு மேலாண்மை முறையை போராடி மாற்றிய பெங்களுரு பெண்!

1

பெங்களூருவின் கழிவு மேலாண்மையில் இருந்த குளறுபடிகள் காரணமாக நகரம் முழுவதும் பீடித்திருந்த குப்பை பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கும், தினசரி குப்பைகளை உரமாக்கல் மற்றும் வகைப்பிரித்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார் சவிதா ஹயர்மேத்.

2012-ம் ஆண்டில் கழிவுகள் தவறாக நிர்வகிக்கப்படுவதை கண்டபோதுதான் அவருக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டது. இதனால் மந்தூர் மற்றும் மாவல்லிபுரா போன்ற பகுதிகளில் குவியும் குப்பைகளின் அளவை குறைப்பதற்காக, பெங்களூருவில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கழிவுகளை அகற்ற ஒரு நிரந்தர தீர்வு காண முற்பட்டது.

சுற்றுச்சூழலை எப்போதும் பசுமையாக வைத்துக்கொள்ளும் முயற்சி 202 ப்ளாட்களைக் கொண்ட சோபா ஆல்தியா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 41 வயதான சவிதா ஹயர்மேத் அவரது வீட்டின் கழிவுகளை அகற்றும் முறையை மேம்படுத்த விரும்பினார். இதற்காக பல்வேறு பசுமை முயற்சிகளை ஆராயத் தொடங்கினார். அவரது இந்த பயணம் குறித்தும் 16 மாதகால ஆராய்ச்சி குறித்தும் அவரது ’எண்ட்லெஸ்லி க்ரீன்’ (Endlessly Green) எனும் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். 

மூன்று தொட்டிகளாக வகைப்படுத்தும் முறையை பின்பற்றுதல் மற்றும் குடியிருப்புவாசிகளால் உள்ளுக்குள்ளே ஒரு உரமாக்கும் யூனிட் போன்றவற்றை பின்பற்றி கழிவாக மாறுவதற்கு முன்பே அதைக் குறைக்கும் முயற்சியை மேற்கொள்ள ஒரு முன் மாதிரியாக மாறியுள்ளது சோபா ஆல்தியா.

அடுக்குமாடி குடியிருப்பு வெற்றிகரமாக கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி கிட்டத்தட்ட 95 சதவீத கழிவுகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் குப்பைகளை நிரப்பும் பகுதிக்கு இங்கிருந்து ஒரு நாளைக்கு 1 கிலோ கழிவு மட்டுமே அனுப்பப்படுகிறது. உதாரணத்திற்கு குப்பை மேலாண்மை ஆர்வலர் மற்றும் வலைப்பதிவாளர் சவிதா கூறுகையில்,

“குடியிருப்பில் வசிப்பவர்கள் குப்பை தொட்டிக்கு ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் மறு சுழற்சிக்கு உகந்த பேப்பர் லைனிங் பயன்படுத்துகின்றனர். இதனால் சில மாதங்களுக்குள்ளாகவே குப்பைகளை நிரப்பும் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ப்ளாஸ்டிக் பைகள் குவியாமல் இந்த குடியிருப்பு தடுத்திருக்கிறது.” 

குப்பை என்பது வெறும் தொடக்கம்தான். இதைச் சரிசெய்யத் தொடங்கினால் பல பிரச்சனைகள் தாமாகவே தீர்ந்துவிடும். வகைப்படுத்துதல், உரமாக்கல் மற்றும் மறுசுழற்சி ஆகியவை பின்பற்றப்பட்டதால் உரமாக்கப்பட்டவை அந்த குடியிருப்புவாசிகளின் தோட்டத்திற்கு பயன்பட்டதோடு மட்டமல்லாமல் மண் வளத்தை அதிகரித்து காற்று மற்றும் நீர் மாசுபடுதலை குறைத்துள்ளது. உரமாக்கலுக்கு ஏற்படும் செலவைக்காட்டிலும் உறுதியான பலன் அதிகம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஒரு மாதத்திற்கு 100 ரூபாய்க்கு மேல் செலவாகாது என்றபோதும் உரமாக்கல் மற்றும் வகைப்படுத்தலுக்கான உண்மையான செலவு மற்றும் பலன் விகிதத்தை கணக்கிடுவது கடினம் என்றார் சவிதா. 

உரமாக்கலின் உறுதியான பலன்கள் பொருளாதார ரீதியான நன்மைக்கு அப்பாற்பட்டது. இதை தோட்டத்தில் பயன்படுத்தலாம் அல்லது தோட்டம் வைத்து விற்பனை செய்பவர்களுக்கு உரத்தை விற்கலாம். மேலும் தோட்டங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களின் பயன்பாடு குறையும். தண்ணீர் பயன்பாடும் குறையும். நகராட்சி மற்றும் தனியார் குப்பை ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்படும் கட்டணமும் குறையும் என்று விவரித்தார் சவிதா.

”செலவு குறித்து கணக்கிடுகையில் குடியிருப்பில் வசிப்பவர்கள் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்வு செய்யவேண்டும். எல்லோரும் ஒன்றிணைந்து உழைத்து உரமாக்கலில் ஈடுபட்டு அவர்களுக்குள்ளாகவே முடித்துக்கொள்ள வேண்டும் அல்லது ப்ரூஹத் பெங்களூரு மஹாநகர பாலிகே (BBMP) ஒப்பந்தததாரருக்காக காத்திருக்கவேண்டும்.”

இந்தக் கழிவு பிரச்சனைக்கு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது மட்டும் தீர்வாகாது என்று நம்புகிறார் சவிதா. முழுமையான அதிகாரப் பரவலுக்கான தேவை இருப்பதால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வீட்டிலும் உரமாக்கலை நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் வகைப்படுத்துதலை நடைமுறைப்படுத்தவேண்டும். பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டாய கழிவு மேலாண்மை முறைக்கான சட்டங்களை வலுப்படுத்தி வார்ட் அளவிலான உரமாக்கல் யூனிட்களைக் கொண்டுவரவேண்டும். 

எதிர்கால நலன் கருதி கழிவுகளை அகற்றும் பிரச்சனைக்கான தீர்வு இன்று மெட்ரோ நகரங்களில்தான் அதிக கழிவு உற்பத்தியாகிறது. இதில் பெங்களூரு மட்டும் தினமும் 4,200 டன் கழிவுகளை உருவாக்குகிறது. 2031-ல் மிகவும் ஆபத்தான அளவாக 18,390 டன் கழிவுகள் ஒரு நாளில் உருவாக்கப்படலாம் என்று சமீபத்தில் பெங்களூரு வளர்ச்சி வாரியம் (BDA) மதிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டைக் கண்டு சவிதா ஆச்சரியமடையாமல்,

”மக்களின் உந்துதலால் உருவாக்கப்படும் சீரான இயக்கம்தான் இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வாகும். தற்போது பெண்களின் முயற்சியால் மேற்கொள்ளப்படும் கழிவு மேலாண்மை, வகைப்பிரித்தல் மற்றும் சேனிடரி கழிவு அகற்றல் போன்ற பணிகள் மேலும் சில ஆண்டுகள் தொடரவேண்டும். ஏனெனில் ஒருவர் தன்னுடைய வீட்டின் கழிவுகளை உரமாக்குவது மறுசுழற்சிக்கு உகந்த பொருட்களை வகைப்பிரித்து அனுப்புவது போன்ற திட்டங்கள் முற்றிலும் நிறுவனமயமாக்கப்படவில்லை.”

கழிவாக மாறுவதற்கு முன்பே அதைத் குறைப்பதுதான் முக்கியமான அம்சம். ஆனால் ஆரவாரமாக அரசாங்கத்தால் துவங்கப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தில் இந்த அம்சம் இணைக்கப்படவில்லை. பிரச்சனை எங்கு துவங்குகிறதோ அங்குதான் முடிக்கப்படவேண்டும் என்று விவரித்தார் சவிதா. 

வீட்டின் மொத்த கழிவு உற்பத்தியில் சமையலறை கழிவு கிட்டத்தட்ட 60 முதல் 65 சதவீதம். எனவே குடியிருப்பு அளவில் கழிவு மேலாண்மை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். 

”இன்று நமக்கு பல உடல்நலக் குறைவுகள் ஏற்படுகிறது. நாம் எங்கே தவறு செய்கிறோம்?” 

என்று கேள்வி எழுப்புகிறார் சவிதா. ஒவ்வொரு நபரும் தெரிந்தோ தெரியாமலோ அவர்களது சுற்றுவட்டாரத்தில் காணப்படும் குழப்பத்திற்கு காரணமாக இருந்துள்ளனர். அடுத்த தலைமுறையினருக்கு சிறப்பான சுற்றுச்சூழலை விட்டுச்செல்லும் நோக்கத்துடன் கழிவுகளுக்கு எதிராக தொடர்ந்து போராட உறுதியெடுத்துள்ளார். இவரது முயற்சியில் பலரை இணைக்க நம்பிக்கையுடன் செயல்படுகிறார்.

”நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஒரு சிறந்த சூழலை உருவாக்கினால் நம் குழந்தைகள் நம்மைக் குறித்து பெருமையடைவார்கள்,” என்று சவிதா தீவிரமாக நம்பிக்கை தெரிவித்தார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கெடியா