மக்களுக்கு வெகுமதிகள் வழங்கி ப்ளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப்!

1

ஆர்விஎம் ரீசைக்கிள் என்கிற ஸ்டார்ட் அப் ரிஷப் அகர்வால், பிரதீக் மிட்டல், நிமிஷ் குப்தா ஆகிய நிறுவனர்களால் 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் மறுசுழற்சி பிரிவில் செயல்படுகிறது. மக்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் மறுசுழற்சி திட்டங்களிலும் ஈடுபடுத்தி வெகுமதி அளிக்கிறது. இந்நிறுவனம் சுயநிதியில் இயங்குகிறது.

க்ரீன்ஹவுஸ் கேஸ் எமிஷன் ஃப்ரம் லேண்ட்ஃபில்ஸ் : ஏ கேஸ் ஆஃப் என்சிடி ஆஃப் டெல்லி, இந்தியா-வின் அறிக்கைப்படி டெல்லியில் நாள் ஒன்றிற்கு 8360 டன் நகராட்சி திடக்கழிவுகள் உற்பத்தியாகிறது. இந்த அளவானது 2021-ம் ஆண்டில் நாள் ஒன்றிற்கு 18,000 டன்னாக அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. இந்த அதிகரிப்பு தற்போதைய கட்டமைப்பின்மீது அதிக அழுத்தத்தை கொடுத்து கழிவு மேலாண்மைக்கு பொறுப்பேற்றுள்ள உள்ளூர் மற்றும் நகராட்சி அமைப்பிற்கு சவாலாக மாறிவிடும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

டெல்லியில் அதிகரித்து வரும் ப்ளாஸ்டிக் கழிவுகளைக் கண்டு மனம் வருந்திய ஐஎஸ்பி ஹைதராபாத் முன்னாள் மாணவர் ஒருவர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தீர்மானித்தார். இதை சாத்தியப்படுத்த நடத்தை மாற்றத்தை கொண்டு வர வேண்டியிருந்தது. பெட் பாட்டில்கள் மற்றும் அலுமினியம் கேன்களை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளை பணவெகுமதிகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கி எடுத்துரைக்கவேண்டியிருந்தது.

ஆர்விஎம் ரீசைக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான பிரதீக் மிட்டல் கூறுகையில், 

“மக்களிடையே ஊக்கத்தொகை வழங்கும் வழக்கத்தை ஏற்படுத்தினால் ஒழிய மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் என்று நாங்கள் திடமாக நம்பியதால் இந்த முயற்சியை மேற்கொண்டோம். இது மனித இயல்புதான். மக்கள் ஒரு தயாரிப்பை பயன்படுத்துவன் மூலம் சமூகத்திற்கு உதவுகிறோம் என்கிற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தயாரிப்பை உருவாக்க விரும்பினோம். அப்படிப்பட்ட எங்களது தயாரிப்புதான் பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம்,” என்றார்.

ஆர்விஎம் ரீசைக்கிள் அரசு ஏஜென்சிக்களின் ஆதரவுடன் பொதுமக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி மறு சுழற்சி விநியோக சங்கிலியை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

2016-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு Zelene ஸ்மார்ட் பின்களை அறிமுகப்படுத்தியதில் இருந்து இந்நிறுவனம் அரசாங்கத்தின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வந்ததாகவும் அது முதல் அவர்களது பயணம் எளிதாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார் பிரதீக். இந்நிறுவனத்தின் முதல் திட்டம் என்டிஎம்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இங்கு 9 ஸ்மார்ட் தொட்டிகள் (சிபி, கான் மார்கெட், சரோஜினி நகர்) நிறுவப்பட்டது. இதுவரை இக்குழுவினர் டெல்லி என்சிஆர், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் 30 இயந்திரங்களை நிறுவியுள்ளனர். மேலும் 20 இயந்திரங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரதீக் சுட்டிக்காட்டினார்.

30 வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் தொட்டிகள் ஒவ்வொரு நாளும் 4,500-க்கும் அதிகமான பாட்டில்களை சேகரிக்கிறது. இதுவரை இந்நிறுவனம் 32,000 கிலோ கழிவுகளை வெற்றிகரமாக மறுசுழற்சி செய்துள்ளது.
”இது பயன்படுத்த மிகவும் எளிதாக உள்ளது. குப்பையை முறையாக அகற்றுவதற்கு வெகுமதி அளிக்கபடும் என்பதை நம்பவே முடியவில்லை. மறுசுழற்சி செய்யப்படுவது ஒரு வேடிக்கையான அனுபவமாக உள்ளது. வெறும் மூன்று செயல்களை மட்டுமே பின்பற்றயதில் 20 விநாடிகளில் எனக்குப் பிடித்தமான ரெஸ்டாரண்டில் எனக்கு தள்ளுபடி கிடைக்கிறது,” என்றார் தொழில்முனைவோர் மற்றும் Zeleno பயனரான ரசித் மிட்டல்.

Zeleno ஸ்மார்ட் தொட்டிகள் எவ்வாறு செயல்படுகிறது?

ஆர்விஎம் ரீசைக்கிளின் Zeleno காலியான ப்ளாஸ்டிக் பெட் பாட்டில்கள் மற்றும் அலுமினியம் கேன்களை ஸ்மார்ட் தொட்டிகளைப் பயன்படுத்தி சேகரிக்கிறது. இதற்காக பயனருக்கு பணமோ அல்லது தள்ளுபடிக்கான கூப்பனோ வழங்கப்படுகிறது. இதைக் குறிப்பிட்ட கடைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு Zeleno அல்லது ஆர்விஎம்-மிலும் ஒரு டிஜிட்டல் திரை காணப்படும். பயனர் தொடுதிரையில் காணப்படும் எளிய கட்டளைகளைப் பின்பற்றி ஸ்மார்ட் தொட்டியின் கதவைத் திறந்து பாட்டிலை போடலாம். உணர்கருவி அலுமினியத்தைக் கண்டறிந்து பாட்டில்களை ஸ்கேன் செய்யும். பெட் மற்றும் அலுமினியம் பாட்டில்கள் குறித்த விவரங்கள் தரவுதளத்துடன் இணைக்கப்பட்டு கன்வேயர் பெல்ட் வழியாக அனுப்பப்படும். 

இந்த முயற்சி நகரத்தை சுத்தமாக்குவதுடன் மக்களின் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என திடமாக நம்புவதாக தெரிவித்தார் ஆர்விஎம் ரீசைக்கிள் இணை நிறுவனர் நிமிஷ் குப்தா.

Zeleno இயந்திரங்களில் மறுசுழற்சி செய்து பெட் பாட்டில்களைப் பயன்படுத்துவோர் மட்டுமல்லாது குப்பை சேகரிப்பவர்கள்கூட பாட்டில்களை ஸ்மார்ட் தொட்டியில் போடுவதற்காக டோக்கனை எடுத்துச் செல்லலாம். குப்பை சேகரிக்கபவர்கள் நடைபாதைகளிலும் தெரு முனைகளிலும் வீசப்படும் பாட்டில்களை சேகரித்து தொட்டியில் போடலாம். 

விநியோக சங்கிலியை வலுப்படுத்தவும் செயல்முறைகளை எளிதாக்கவும் இந்நிறுவனர் மொபைல் வாலட் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன் செயலியிலும் கவனம் செலுத்தி வருகிறது. இது மொபைல் வாலட், பேடிஎம், ஆதார் வாலட் போன்றவற்றுடன் இணைக்கப்படும். இந்த புதுமையான ஸ்டார்ட் அப் இ-வாலட் பணம் மற்றும் இயந்திரத்தில் இலவச வைஃபை வசதி ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.

சுமார் 2,000 பாட்டில்களையும் அலுமினியம் கேன்களையும் ஒரு ஸ்மார்ட் தொட்டியில் மறுசுழற்சி செய்யலாம். இந்நிறுவனம் விஎல்எஸ் இகோடெக் உள்ளிட்ட பல்வேறு மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. ப்ளாஸ்டிக் பாட்டில்கள் நூல் தயாரிப்பிற்காக மறுசுழற்சி செய்யப்படும். இவை பல்வேறு பொருட்களை தயாரிக்க துணியாக பயன்படுத்தப்படும்.

விளம்பரம் செய்வோர் தங்களது பிரச்சாரத்தை காட்சிப்படுத்தும் தளமாகவும் இந்த ஸ்மார்ட் தொட்டி செயல்படுகிறது. ஆர்விஎம்-ல் உள்ள எல்சிடி டிஸ்ப்ளே பேனல் சுழலும் விதத்திலோ அல்லது நிலையாகவோ அல்லது வீடியோ வடிவிலோ விளம்பரம் செய்ய இடம் ஒதுக்குகிறது. இது பாரம்பரியமாக விளம்பரம் செய்யும் முறையினால் அதிகரிக்கும் கார்பன் அடிச்சுவடை பெருமளவு குறைக்கிறது. அத்துடன் விலை மலிவாகவும் மக்கள் பார்வையில் அதிகம் படும் விதத்திலும் அமைந்துள்ளது.

ஸ்டார்ட் அப்பிற்கான உந்துதல்

ரிஷப் அகர்வால், பிரதீக், நிமீஷ் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள ஐஎஸ்பி-யில் மேலாண்மை பாடம் படித்துக்கொண்டிருந்த நாட்களில் இருந்தே இந்தப் பயணம் துவங்கப்பட்டது. மூன்று நிறுவனர்களுமே வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அது மட்டுமல்லாது மூவருமே சொந்தமாக வணிக முயற்சியில் ஈடுபட விரும்பியது இவர்களிடையே காணப்பட்ட மற்றொரு பொதுவான விஷயமாகும்.

மேலாண்மை பாடதிட்டத்தின் ஒரு பகுதியாக மூவரும் சிகாகோவில் உள்ள கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை பார்வையிடச் சென்றபோது அங்கிருந்த பெட்ரோல் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த குப்பைகளை அகற்றுவதற்கான ஸ்மார்ட் இயந்திரம் மூவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

அந்த சமயத்தில் புதிய முயற்சியைத் துவங்குவது குறித்த தெளிவு மூவருக்குமே இல்லாதபோதும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பைகளை ஏதேனும் பயன்பாட்டிற்கு உகந்த விதத்தில் மாற்றலாம் என நினைத்தனர். சில தீவிர விவாதங்கள், ஆழமான சந்தை ஆய்வு, மாற்றத்தை சாத்தியப்படுத்தக்கூடிய தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், தொழில்நுட்ப ஜாம்பவான்கள் போன்றோருடனான பல்வேறு சந்திப்புகள் ஆகியவற்றிற்குப் பிறகு மூவரும் Zeleno-வை உருவாக்கினர்.

நிறுவனர்கள் மூவருமே பொறியாளர்கள். ஐஎஸ்பி ஹைதராபாத்திலிருந்து மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றவர்கள். சொந்த வணிக முயற்சியைத் துவங்குவதற்கு முன்பு சில காலம் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு தங்களது குடும்ப வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மூன்று பேரைத் தவிர உத்சவ் சாஹ்னி (மார்கெட்டிங் & சிஎஸ்ஆர் தலைவர்), அனில் தியானி (தொழில்நுட்ப நிபுணர்), சித்தார்த் சேகர் சிங் (ஆலோசகர்), சுத்கர் (ஆலோசகர்), அம்ரீத் சிங் (ப்ராண்டிங்), விகாஷ் குமார் (டிஜிட்டல் மார்கெட்டிங்) மற்றும் கார்த்திக் அகர்வால் (மார்கெட்டிங்) ஆகியோர் இந்நிறுவனத்தின் முக்கியக் குழுவில் உள்ளனர்.

வருங்கால திட்டம்

டெல்லியில் மட்டுமே மெட்ரோ நிலையங்கள், மால்கள் என 500 தொட்டிகளை நிறுவுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு இந்த ஸ்டார்ட் அப் டெல்லியில் சுமார் 100 ஸ்மார்ட் இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து விமான நிலையங்களிலும் செயல்பாடுகளை விரிவடையச் செய்ய விரும்புகின்றனர். இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களின் தரவரிசைப் பட்டியலில் டெல்லி விமான நிலையமும் இருப்பதால் Zeleno குழு டெல்லி இண்டர்நேஷனல் ஏர்போர்ட் (P) லிமிடெட் (DIAL) பகுதியை இலக்காகக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாது ராஜஸ்தான், ஆக்ரா, வாரனாசி, லக்னோ போன்ற சுற்றுலா தளங்களிலும் செயல்பட விரும்புகின்றனர். இந்நிறுவனம் மெட்ரோ நிலையங்கள் தவிர விமான நிலையம், ரயில்வே, பேருந்து நிலையங்கள் ஆகியவை மூலம் வருவாய் ஈட்ட விரும்புகிறது. டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) உடன் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனம் 12 பேர் அடங்கிய குழுவாக செயல்பட்டு பெட் பாட்டில்கள், ஆர்விஎம் வாயிலான விளம்பரங்கள், தள்ளுபடி கூப்பன்கள் வழங்குவதற்காக விற்பனையாளர்களிடம் சந்தா வசூல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வருவாய் ஈட்டுகிறது.

தற்போது ஆர்விஎம் ரீசைக்கிள் சுய நிதியில் இயங்குகிறது. வருங்காலத்தில் நிதி உயர்த்தும் திட்டங்கள் ஏதும் இந்நிறுவனத்திற்கு இல்லை.

நீண்ட கால நடவடிக்கையாக உலகின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் பயனர்களையும் சென்றடையும் ஸ்மார்ட் இயந்திரங்களை உருவாக்க விரும்புகிறோம். ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து பல விசாரணைகள் வந்துள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ, சிங்கப்பூர், துபாய், ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் எங்களது முயற்சிக்கு ஆர்வம் காட்டியுள்ளனர்,” என்றார் ரிஷப்.

ஆங்கில கட்டுரையாளர் : லிப்சா மன்னன் | தமிழில் : ஸ்ரீவித்யா