'மூழ்கும் நகரங்கள்'- வளர்ச்சியைத் தாங்க முடியாத நவீன நகரங்கள் தள்ளாடுவது ஏன்?

0

முதலில் சென்னை, பின் பெங்களுரு, இப்போது குர்கோவ்ன்... இவையெல்லாம் அண்மையில் வெள்ளத்தில் மிதந்த பெருநகரங்கள். மோசமான நகர கட்டமைப்பின் உதாரணமாக இந்த மூன்று நகரங்கள் இருப்பது, இந்த மழை வெள்ளத்தின் மூலம் வெளிவந்துள்ளது. சிறு மழை பெய்துவிட்டாலே போதும், சாலை எங்கும் நீர் தேங்கி குளம் போல தேங்கிவிடுகிறது. பளபளக்கும் கண்ணாடி பதித்த வானுயர் கட்டிடங்கள், விலையுயர்ந்த கார்கள் என திரும்பிய இடமெல்லாம் ஜொலிக்கும் இந்த நகரங்களின் உண்மை அழகு மழைக்கு பின்னரே வெட்டவெளிச்சமாகிறது. 

கடந்த நவம்பர் 2015 இல் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் பல வாரங்கள் மழை நீரில் மூழ்கிக் கிடந்தன. இரண்டு மாடிகள் வரை மழைநீர் புகுந்து, சுமார் 500 பேரின் உயிர் துரதிர்ஷ்டவசமாக பறிபோனது. பெங்களூர், குர்க்வோனில் வெள்ளப்பெருக்கால் உயிரிழப்பு இல்லை என்றாலும் சென்னையைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வீட்டைவிட்டு வேளியேறி, உடைமைகள், வாகனம், பொருட்கள் மற்றும் வீடுகளை இழந்து நின்றனர். ரூ.15000 கோடி மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பலர் கணக்கு வெளியிட்டனர்.  

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

இந்த வாரம் பெங்களுருவில் குளம், குட்டைகள் மழைநீரால் நிரம்பி வழிந்து நகரத்துக்குள் நுழைந்தது. படகுகளில் மீட்புக் குழுவினர் செல்ல தடையாக இருந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திய வெள்ளநீரில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பலரை போலீஸ் லத்தி சார்ஜ் செய்து அப்புறப்படுத்தினர். 

அதே சமயம், குர்கோவ்னில் 24 மணி நேரம் பெய்த 5சென்டிமீட்டர் மழையால ஏற்பட்ட சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க, அந்நகர இணை ஆணையர் செக்ஷன்144 தடை அறிவித்தார். போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளான பகுதிகளை உடனே சரிசெய்ய ஆட்களை நியமித்தார், அதே போல் வெள்ள நீர் போக தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக நீக்க உத்தரவிட்டு தன் அலுவலர்களுக்கு முழு உரிமை அளித்தார். 

வளர்ச்சிக்கான போட்டி

புதிய இந்தியாவை உருவாக்கும் அவசரத்தில், சரிவர திட்டமிடாத கட்டமைப்பு, நகர மேம்பாட்டில் குறைபாடு, ரியல் எஸ்டேட்களின் ஆதிக்கம், சட்டத்தை மதிக்காத ஆக்கரமிப்புகள், அதுக்கு துணைபோகும் அரசு மற்றும் அதிகாரிகள் இவையெல்லாமே இன்று நம் நகரங்களை இந்த கதிக்கு தள்ளியுள்ளது. நீர் நிலைகளின் வழித்தடங்களை அழித்துள்ளதால் ஏற்பட்டுள்ள சேதங்களே இது. 'மெகா சிட்டி'க்களை உருவாக்க நினைக்கும் இந்தியா, மழையின் சீற்றத்தை சமாளிக்க தயாராக இல்லாததற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் இவை. 

எல்லா சமயமும் நாம் தாமதமாகவே செயல்படுகிறோம். எல்லாம் நடந்த பிறகு அரசு, மக்களை காப்பாற்ற படகுகளை அனுப்புவதும், மீட்புக்குழுவினர் விரைவதும், மழை குறைய அனைவரும் வேண்டுவதும் வழக்கமாகிவிட்டது. மழைநீர் விரைவில் நிலத்தில் இறங்கி நிலம் காய்ந்திட வழி இல்லாமல் பிளாஸ்டிக் குப்பைகளும், கழிவுகளும் தடையாகவே உள்ளது. 

மெட்ராஸ் என்பதை சென்னை என்றும், பெங்களூர் என்பதை பெங்களுரு என்றும், குர்கோவ்ன் என்பதை குருக்ராம் என்று வெறும் பெயர்களை மாற்றிவிட்டால் போதாது. நகர கட்டமைப்புக்கான திட்டங்களும் மாற வேண்டும். பெயர்களை மாற்றுவதில் தீவிரம் காட்டிய அமைச்சர்கள், இந்த நகரங்களில் சட்ட விரோத கட்டிடங்கள், அனுமதியற்ற ஆக்கிரமிப்புகள், பெருகும் மக்கள்தொகை, தூர்வாரப்படாத நீர்நிலைகள் என இவைகளில் கவனம் செலுத்தி இருந்தால் இன்று இத்தகைய அவல நிலை ஏற்பட்டிருக்காது," 

என்கிறார் துணை பேராசியர் ராஹுல் ஜெயராம். குர்கோவ்னின் வளர்ச்சியை உற்று நோக்கிவரும் ஜெயராம், இந்த நகரத்தின் பேரழிவு மனிதன் ஏற்படுத்தியதாக இருக்கும் என்கிறார். 

நம் நகரங்கள் ஏன் நிலைகுலைகின்றன?

நேஷனல் இன்ஸ்டிடூட் ஆஃப் சயின்ஸ், பேராசிரியர் டிவி.ராமசந்திரா நடத்திய ஒரு ஆய்வின் படி, "பெங்களுரு நகரம் 2021ஆம் ஆண்டிற்குள் இறந்த நகரமாகிவிடும்" என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். 

நன்றி: PTI
நன்றி: PTI

அவரது முடிவுகள், கள ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கட்டிடங்களின் வளர்ச்சி 525% இருப்பதாக அவரின் குழு கண்டறிந்துள்ளது. அதே சமயம் நீர்நிலைகள் 70% அழிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாய நிலங்களும் குறைந்துள்ளது என்கிறார். சரிவர பராமரிக்கப்படாத சாலைகள், 1000அடி வரை நிலத்தின் அடியில் தோண்டி நீர் எடுப்பு, வடிகால் முறையில் பற்றாக்குறை இவையெல்லாம் ஒன்று சேரும் போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது என்கிறார். 

மேலும் அந்த ஆய்வில், நகரமயமாக்கலின் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் பிரச்சனைக்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக, கடந்த வாரம் கர்நாடகா சட்டமன்றம், வீடுக்கட்டிடங்களில் இருக்கவேண்டிய காலி இடத்தின் அளவை 15% இருந்து 10% ஆக குறைத்துள்ளது. 

80'களில் 125 நீர்நிலைகள் இருந்த பெங்களுரு நகரத்தில் இன்று 25 மட்டுமே உள்ளது. கழிவுகள் இந்த நிலைகளை ஆக்கிரமித்துள்ளன. இதனால் அசுத்தமான குளங்கள் மட்டுமே இன்று பெங்களுருவை சுற்றியுள்ளது என்கிறார் பேராசிரியர் ராமசந்திரா. மழை வெள்ளப் பெருக்கை சமாளிக்க முடியாத சென்னைக்கு ஏற்பட்ட பேரிடர் விரைவில் பெங்களுருவுக்கும் ஏற்படும்," என்றார் கவலையோடு. 

'கார்டன் சிட்டி' என்று எல்லாராலும் ரசிக்கப்பட்ட பெங்களூர் இன்று தனது 78% இயற்கை அழகை இழந்து பொலிவில்லாமல் நிற்கிறது. அதேப்போல் அதன் மக்கள் தொகையும் 65 லட்சத்தில் இருந்து 95 லட்சமாக கடந்து 15 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஐடி துறையின் வளர்ச்சி தந்த பரிசு இது என்கிறார் அவர். நாளுக்குநாள் பெருகி வரும் வாகனங்கள், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் இடப்பற்றாக்குறை, பொது இடங்களின் சுறுக்கம் இதுதான் இன்றைய பெங்களூர் என்கிறார்.

"நான் பல அரசு குழுக்களில் அங்கம் வகிக்கிறேன் ஆனால் நான் சொல்வதை எவரும் மதிப்பதில்லை. அதனால் தான் பெங்களூர் நகரத்தின் முடிவை நான் கணித்துள்ளேன்," என்கிறார் ராமசந்திரா. 
நன்றி: PTI
நன்றி: PTI

குர்கோவ்ன் நகரத்தின் பிரச்சனையும் கிட்டத்தட்ட இதே நிலைதான். நகரமயமாக்கலின் தாக்கத்தில் அதற்கு ஈடாக செய்யவேண்டிய அம்சங்களை செய்யத் தவறியதற்கான விளைவுகளை தான் நாம் தற்போது அனுபவித்து வருகிறோம். உலகளவில் அதிர்வை ஏற்படுத்திய சென்னை வெள்ளப்பெருக்கு மனதளவில் நம்மை பாதித்த அளவில் செயல் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது மீண்டும் மீண்டும் உறுதியாக தெரிகிறது. சென்னையைப் போல பெங்களூர், குர்கோவ்ன், மும்பை என பல நகரங்கள் மழையில் தத்தளிப்பது வேதனையை தந்தாலும் அடுத்த மழைக்கு நாம் இன்னும் தயாராக இன்றளவும் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பதை நினைத்தால் மனம் பதபதைக்கிறது. 

கட்டுரையாளர்: அனில் புதூர் லுல்லா | தமிழில்: இந்துஜா ரகுநாதன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்