தங்க கடியாரம், வைர மணியாரம்... என்று பாசமலரில் தாய்மாமன் பாசத்தை பொழியும் வகையில் கவியரசர் எழுதிய தாலாட்டு பாடல் வரிகள் தான் பிரிட்டன் குட்டி இளவரசிக்கு குவிந்திருக்கும் பரிசுப்பொருட்களின் பட்டியலை பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது. மெக்சிகோ அதிபர் கொடுத்த வெள்ளி கிலுகிலுப்பை, வைர நகை விற்பனை நிறுவனம் வழங்கிய நீலக்கற்கள் பதித்த தங்க கிலுகிலுப்பை என பலவிதமான பரிசுப்பொருட்கள் இந்த குட்டி தேவதைக்கு பாசத்தோடு வழங்கப்பட்டுள்ளன.
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற ஆண் குழந்தையும், சார்லெட் என்ற பெண் குழந்தையும் உள்ளனர். குட்டி இளவரசர் ஜார்ஜ் ஏற்கனவே இரண்டு பிறந்த நாட்களை கொண்டாடி விட்டார். இந்நிலையில் குட்டி இளவரசி சார்லெட் தனது முதல் பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
அரண்மனை வாரிசு என்றாலும், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இருவருமே தங்கள் குழந்தையின் பிறந்த நாளை ஆர்ப்பாட்டம் இல்லாமல் குடும்ப விழாவாக கொண்டாடினர். இருப்பினும், உலகம் முழுவதும் இருந்து குட்டி இளவரசிக்கு வாழ்த்துக்களும், பரிசுப்பொருட்களும் குவிந்துள்ளன!
ஒரு மகாராஜா, இரண்டு மகாராணிகள், நான்கு அதிபர்கள் மற்றும் மூன்று பிரதமர்கள் ஆகியோரிடன் பரிசுகள் குட்டி இளவரியின் பொம்மை பெட்டியை அலங்கரிப்பதாக பிரிட்டனின் Telegraph இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. குட்டி இளவரசி சார்லெட் பிறந்தது முதல் கடந்த 12 மாதங்களில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பரிசுப்பொருட்கள் தொடர்பாக அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பரிசுகளையும் அந்த செய்தி பட்டியலிட்டுள்ளது.
குட்டி இளவரசிக்கு இதுவரை கிடைத்துள்ள பரிசுகள் வியக்க வைக்கின்றன.
மெக்சிகோ அதிபர் என்ரில் பெனா நெய்டோ (Enrique Peña Nieto ) வெள்ளி கிலுகிலுப்பையை தனது மனைவியுடன் சேர்ந்து பரிசளித்திருக்கிறார். கடந்த ஆண்டு பிரிட்டன் விஜயம் செய்த போது இந்த பரிசை வழங்கியிருகிறார்.
நேச்சுரல் சபையர் நிறுவனம் வைரங்கள் மற்றும் நீலக்கற்கள் பதித்த 30000 பவுண்டுகள் மதிப்புள்ள தங்க கிலுகிலுப்பையை பரிசளித்துள்ளது. இவற்றோடு தாத்தா சார்லெஸ், கைவேலைப்பாடு மிக்க மேலாடையை பரிசளித்திருக்கிறார். அதே போல சித்தி பிப்பா மிடில்டன் , இயற்கையான தன்மை கொண்ட டயாபர்களை பரிசளித்துள்ளார். (கொள்ளு பாட்டி எலிசிபெத் மகாராணி குழந்தைகள் தன்னை பார்க்க வரும் போதெல்லாம் ஏதேனும் பரிசு கொடுத்து பாசத்தை வெளிப்படுத்துகிறாராம்).
இதே போல சீன அதிபரான ஜி ஜின்பிங், 19 ம் நூற்றாண்டின் சீன நாவலில் வரும் கனவு காட்சியை விவரிக்கும் பட்டு பொம்மைகளை பரிசளித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா ஜிக்சா, அழகிய நாய் பொம்மை மற்றும் சாய்ந்தாடும் நாற்காலியை பரிசளித்துள்ளனர்.
பிரிட்டன் பிரதமரான டேவிட் கேமரூன் பாப்பாவுக்கு புகழ் பெற்ற தேவைதைக்கதைகள் புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ, கரடி பொம்மைகளை பரிசளித்திருக்கிறார். பூட்டான் மன்னர், அந்நாட்டு மேல்கோட்டை பரிசளித்திருக்கிறார்.
இன்னும் பட்டியல் பெரிதாக நீள்கிறது. தேசத்தலைவர்கள் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் உள்ள அமைப்புகள், பள்ளிகள், அரச குடும்பத்தினர் என பலதரபட்டவர்களும் குட்டி இளவரிசுக்கு தொடர்ந்து பரிசுகளை அனுப்பி உள்ளனர். ஆர்மீனியா முதல் ஜாம்பியா வரை 64 நாடுகளில் இருந்து பரிசுகளும், வாழ்த்து கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று டெலிகிராப் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அன்பு தங்களை திக்குமுக்காடச்செய்வதாக இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடிலடன் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். வளர்ந்து பெரியவளான பிறகு சார்லெட்டும் உலகின் அன்பை நினைத்து நெகிழ்த்து போகத்தான் செய்வார். நாமும் நம் பங்கிற்கு பிறந்த நாள் காணும் குட்டி இளவரசிக்கு அன்பு முத்தங்களை பரிசாக்குவோம்.
குட்டி இளவரிசுக்கு குவிந்த பரிசுப்பொருட்களின் பட்டியல்
கட்டுரையின் மூலம்: Telegraph
படங்கள் உதவி: HRH THE DUCHESS OF CAMBRIDGE
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
இணையத்தை அதிரவைத்த 'கபாலி' டீசர்!
இவ்வளவு நீண்ட இடைவேளையை எதிர்பார்க்கவில்லை: அர்விந்த் சுவாமி!
Stories by YS TEAM TAMIL