'கோடை விடுமுறை'- ஆறு சிறு சிறு குளு குளு மலை வாச ஸ்தலங்கள்..! 

கோடையில் ஓரிரு நாட்கள் சென்று தங்கி மகிழ்ந்து வர ஏற்ற இடங்கள். வாராந்திர விடுமுறையில் சென்று வரவும் உகந்த ஊர்கள்.

1

கிக்கும் கோடை வெப்பத்தை தணிக்க மக்கள் படாதா பாடு படும் இந்த கோடையில் வழக்கமான ஊட்டி, கொடைக்கானல் போன்ற கூட்டம் அலை மோதும் இடங்களை தவிர்த்து தமிழகத்தில் வேறு மலைச் சுற்றுலா இடங்கள் எவை உள்ளன என்று தேடிய போது கிடைத்தவைதான் இந்த குளுகுளு இடங்கள்..!

சென்னை, கோவை, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து இங்கு சென்று வர பஸ், ரயில், விமான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

வால்பாறை

மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் மேற்குச் சரிவில் தமிழக பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் இருக்கிறது வால்பாறை. தென் இந்தியாவின் மிக உயரமான ஆனைமலையின் அடிவாரத்தில் வால் போன்று ஒட்டிக் கொண்டிருப்பதால் வால்பாறை என்று பெயர் கிடைத்திருக்கிறது. சுற்றிலும் தேயிலை, காப்பி தோட்டங்கள், வானுயர மரங்கள், சோலைகள், அருவிகள், நீரோடைகள், தடுப்பணைகள் என்று இயற்கை பல வடிவங்களில் இங்கே தன்னை அலங்கரித்து நிற்கிறது. தேடிச் சென்று காண்பதற்குத்தான் நேரம் வேண்டும். இதன் ஒரு பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகமும், மறு புறம் கேரள எல்லையில் இரவிபுரம் தேசிய பூங்காவும் அமைந்துள்ளது. ஆனால், கோடையில் இவை சற்றே வரண்ட பூங்காகளாகத்தான் இருக்கும்.

வால்பாறை
வால்பாறை

ஆற்றில் குளித்து மகிழ அழகிய கூழாங்கல் ஆறு இருக்கிறது. அது போல் நல்லமுடி, டைகர் வாலி பள்ளத்தாக்குகள் கண்ணுக்கு விருந்து. 10 கி.மீ. தூரத்தில் லோயர் நீராறு அணையும், 15 கி.மீ. தொலைவில் சின்ன கல்லாறு அணையும் உள்ளது. குரங்கு முடி பகுதியிலிருந்து சோலையாறு அணையை பார்த்து ரசிக்கலாம். மே மாதத்தில் அரசு 3 நாட்கள் கோடை விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

வால்பாறை
வால்பாறை

ரயில், விமானத்தில் கோவை சென்று விட்டால் அங்கிருந்து சாலை வழியாக 95 கி.மீ.தூர பயணம். சென்னை, பெங்களூருவிலிருந்து நேரடியாக பொள்ளாச்சிக்கு ஆம்னி சொகுசு பஸ்கள் தினமும் மாலை வேளைகளில் இயக்கப்படுகின்றன. காலை ஆறு மணிக்கு பொள்ளாச்சி சென்றுவிடலாம். அங்கிருந்து வால்பாறை 64 கி.மீ. தூரம்தான்.

மேகமலை

ஆங்கிலேயர் காலத்தில் கண்டறியப்பட்டு தேயிலை பயிரிடப்பட்ட தோட்டங்கள் நிறைந்த மலைப் பகுதி மேகமலை.

மேகமலை
மேகமலை

5 ஆயிரம் அடி உயரத்தில் மேகக் கூட்டம் இந்த மலை குன்றுகள் மீது தவழ்ந்து செல்வதால் மேகமலை ஆனது. கோடையில் அழகிய நீல வானத்தைப் பார்க்கலாம். ஏரி, நீர் நிலைகள் சூழ்ந்த அழகிய தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த சுற்றுலா மையம். அதிக ஆரவாரமில்லாத அமைதியான ஊர்.

மேகமலை
மேகமலை

மதுரை, திண்டுக்கல் வரை ரயிலில் செல்ல வசதி உண்டு. அருகாமை விமான நிலையம் (124 கி.மீ.) - மதுரை. சின்னமனூரிலிருந்து 45 கி.மீ மலைபயணம் மேற்கொண்டால் மேகமலை வந்துவிடும்.

மேகமலை
மேகமலை

ஏலகிரி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜோலார் பேட்டை ஊர்களுக்கு அருகே கடல் மட்டத்திலிருந்து 4600 அடி உயரத்தில் உள்ளது ஏலகிரி. பறந்து விரிந்த புங்கனூர் அருவியில் படகு சவாரி செய்யலாம். கண்ணுக்கு விருந்தாக ஜலங்கம் பாறை அருவி, சாகச விளையாட்டுகளுக்கு பாரா கிளைடிங், மலை ஏற்ற வசதிகளும் இருக்கிறது. தரமான தங்கும் விடுதிகளும் உள்ளன.

ஏலகிரி
ஏலகிரி

அருகாமை விமான நிலையங்கள் : சென்னை (219 கி.மீ. - 5 மணி நேர பயணம்), பங்களூரு (193 கி.மீ.).

அருகாமை ரயில் நிலையம்: ஜோலார்பேட்டை( 24 கி.மீ.). அங்கிருந்து முக்கால் மணிநேர சாலை பயணம்.

ஏலகிரி
ஏலகிரி

சிறுமலை

திண்டுக்கல் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இருக்கிறது சிறுமலை. பத்தொன்பது கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலையில் பயணம். வாழை, நெல்லி போன்ற கனிகள் நிறைந்த இந்த மலைப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் இருப்பதால் கோடையிலும் காலை, மாலை நேரங்களில் இதமான காலநிலைக்கு உத்தரவாதம் உறுதி. சித்தர்கள் வாழ்ந்த ஊர் என்பதால் சித்தர் பீடம் எனும் ஆசிரமம் உள்ளது. இங்கு தங்கும் வசதி உண்டு. 500 ஆண்டுகள் பழமையனாதாகக் கருதப்படும் சிவலிங்கம் ஒன்றும் சிறுமலையில் உள்ளது.

சிறுமலை
சிறுமலை

அருகாமை ரயில் நிலையம்: திண்டுக்கல். விமான நிலையம்: மதுரை (86 கி.மீ.)

சிறுமலை
சிறுமலை

கொல்லிமலை

சேலம், திருச்சி நகரங்களிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ள அழகிய மலை கொல்லிமலை. மரங்கள் சூழ்ந்த மலை சாலையில் மரங்களின் நிழல்களுக்கு இடையே 72 கொண்டை ஊசி வளைவுகளில் பயணிப்பதே தனி சுகம்.

கொல்லிமலை
கொல்லிமலை

1300 படிக்கட்டுகள் கீழ்நோக்கி அரை மணி நேரம் மலை இறங்கினால் அழகிய ஆகாய கங்கை அருவி. குளித்து மகிழ்ந்து மீண்டும் மலை ஏற ஒரு மணி நேரம் ஆகும். இந்த ஒரு பயணமே திரில்லான அனுபவத்துக்கு உத்தரவாதம். மாசில்லா அருவி என்று மற்றொரு சிறிய அருவியும் குளிக்க உகந்தது. பழங்களின் மலையான இங்கு ருசியான பலா, கொய்யா பழங்கள் கிடைக்கும். தங்குவதற்கு தரமான அரசு குடில்கள் உள்ளன.

அருகாமை ரயில் நிலையங்கள்: திருச்சி, சேலம்.

விமான நிலையம் : திருச்சி.

சென்னையிலிருந்து இரவு நேரங்களில் ஆம்னி சொகுசு பஸ்கள் சேலம் வரை செல்கிறது.

கோத்தகிரி

நீலகிரி மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 5800 அடி உயரத்தில் உள்ள மற்றொரு தேயிலை தோட்ட மலை நகர். தமிழக முதல்வர் ஒய்வு எடுக்கச்செல்லும் கொடநாடு இதன் அருகேதான் உள்ளது. கோவையிலிருந்து 66 கி.மீ., மேட்டுப்பாளையத்தில் இருந்து 33 கி.மீ. பயணம். மணம் வீசும் யூகாலிப்டஸ் மரங்கள் கூடுதல் அழகு. கோடை ஓய்வுவை முடித்துக் கொண்டு மணம் கமழும் டீ தூள் மற்றும் யூகாலிப்டஸ் தைலமும் வாங்கிவரலாம்.

கோத்தகிரி
கோத்தகிரி
கோத்தகிரி
கோத்தகிரி

அருகாமை ரயில், விமான நிலையங்கள் கோவையில்தான் உள்ளன.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

டூரிஸத்தில் தனி ஒருவன்: சென்னை மிடில் கிளாஸ் சுற்றுலா நண்பன் ரவூப்  

வார விடுமுறையைக் கழிக்க அழகிய சுற்றுச்சூழலுடன் கூடிய எட்டு ஓய்விடங்கள்!