சோதனைகளை தகர்த்து சாதனை: ஆயுள் தண்டனை கைதியின் மகள் பத்தாம் வகுப்பில் சிறப்பிடம்!

0

பத்தாம் வகுப்புத் தேர்வில் 405 மதிப்பெண்கள்...  பல திசைகளிலிருந்து பாராட்டுகளை பெறும் மாணவி...

81% பெற்று பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கு எதற்கு இத்தனை பாராட்டுகள்? அப்படி என்ன பெரிய சாதனை செய்துவிட்டார் அந்த மாணவி? என்று குழப்பமாக உள்ளதா??

ஆம் அந்த மாணவியின் வெற்றி அங்கீகரிக்கபடவேண்டிய ஒன்று... அவர் கடந்துவந்த பாதை மற்றும் கடுமையான வறுமையிலும் கல்வியில் தனது கவனத்தைத் திருப்பி இன்று இத்தனை மதிப்பெண்கள் எடுத்திருப்பது ஒரு அசாத்தியமான செயலே...

சுகுணாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தை ஒரு ஆயுள் தண்டனைக் கைதி... குடும்ப தகராறு காரணமாக மனைவியை கெரோசின் ஊற்றி தீயிட்டு கொன்றவர்... பாளயம்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனை கைதியான அவரது மகள் தான் இந்த சுகுணா. 

பாட்டியுடன் அந்த மாணவி
பாட்டியுடன் அந்த மாணவி

7 வயதில் தாய், தந்தையை பிரிந்து வாழும் சுகுணாவுக்கு ஒரே ஆதரவாக இருப்பவர் அவரது 75 வயது பாட்டி மட்டுமே. இவரும் லெப்ரசியால் பாதிக்கப்பட்டு படுக்கையில் அவதிபடும் ஒரு நோயாளி. பாட்டிக்கு வரும் பென்சன் பணம் 1000 ரூபாயும், சிறிய ஒரு வீட்டின் வாடகைப் பணம் 2000 ரூபாய் மட்டும் இவர்களது குடும்ப வருமானம். சுகுணாவின் அண்ணன் 10ஆம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடரமுடியாமல் சிறிய வேலைகளைச் செய்து சம்பாதிக்க முயன்று வருகிறார்.

இத்தனை இன்னல்கள், வறுமைக்கு நடுவில் கல்வி மட்டுமே தங்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற ஒரே நம்பிக்கையோடு சுகுணா கடுமையாக உழைத்து படிக்கத் தொடங்கினார். பாளயம்கோட்டை செயின்ட்.ஜோசப்ஸ் உயர்நிலை பள்ளியில் 'க்ளோபல் ஈக்குவாலிட்டி நெட்வொர்க்' எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் உதவியுடன் படிப்பை மேற்கொண்டுவந்த சுகுணா, இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் 500க்கு 405 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி தனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாகிக்கொண்டுள்ளார். இது பற்றி பேசிய சுகுணா,

"இந்த வெற்றி எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருது... அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிக்க ஆரம்பிச்சுடுவேன்... பல நாள் காலை டிபன் இருக்காது... அதனால் பட்டினியாவே பள்ளிக்கு போவேன். ஆனா என் பாட்டி, பள்ளிக்கூட டீச்சர்கள் மற்றும் எனக்கு உதவிய தொண்டு அமைப்பு, இவங்களோட ஊக்கம் மற்றும் ஆதரவினால் நான் நல்லா படிச்சேன். அதுக்கு இனிக்கு எனக்கு பலன் கிடைச்சதில் ரொம்பவே சந்தோஷம்... அடுத்து 12 ஆம் வகுப்பில் இன்னும் நல்ல மதிப்பெண் எடுத்து டாக்டர் ஆகனும் என்பதுதான் என் கனவு..." என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் குற்றங்களால் பெற்றோரை பிரிந்து தவிக்கும் இவரை போன்ற குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிவருவதாக ஒரு கணக்கு கூறுகிறது. இத்தகைய குழந்தைகளின் நலனைக் காக்கும் திட்டங்கள் சட்டத்தில் இதுவரை ஏதும் இல்லை. தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் உதவியோடு மட்டுமே ஒருசில குழந்தைகளின் வாழ்வில் மாற்றமும் ஏற்றமும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் போதிய நிதியின்மையால் அவர்களாலும் ஓரளவிற்கு மேல் உதவிகள் செய்யமுடிவதில்லை என்கிறனர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள்.

நல்ல ஒரு வீட்டுச்சூழல், படிக்க தனி அறை, கூடுதலாக ட்யூஷன், வேளாவேளைக்குச் ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல ஒரு தனியார் பள்ளி, தேவையான புத்தகங்கள் என்று எல்லா வசதிகளோடும் ஒரு மாணவர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிவதைக் காட்டிலும் எந்த ஒரு வசதியும், வாழ்வில் நிம்மதியும் கூட இல்லாத இந்த பெற்றோர் அற்ற மாணவியின் வெற்றி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே...

இந்த மாணவிக்கு நிதியுதவி செய்ய:

தொடர்பு கொள்க: gnequality@gmail.com, GlobalEqualityNetwork


Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan