6-ம் வகுப்பில் தோல்வி... ஐஏஎஸ்-சில் முன்னிலை: எழுச்சி நாயகி ருக்மணி

0

அன்று ஒரு போர்டிங் பள்ளியில் சேர்க்கப்பட்ட ருக்மணி ரியார் தனது நெருக்குதல்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தார். டல்ஹவுஸிஸ் ஹார்ட் ஸ்கூலில் 6-ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த அந்த மாணவி சோர்ந்து போய் முடங்கிவிடவில்லை. படிப்பு மீது கொண்ட தீராத நாட்டத்தாலும் எழுச்சியாலும் மீண்ட அந்த மாணவி, 2011 யூ.பி.எஸ்.சி. அனைத்திந்திய தேர்வில் தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அவர் சிவில் சர்வீஸஸ் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வியத்தகு வெற்றி பெற்றார்.

சண்டிகரில் பிறந்து வளர்ந்த இந்த 29 வயது இளம்பெண், மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் சோஷியல் சர்வீசஸ் கல்வி நிறுவனத்தில் சமூக தொழில்முனைவில் முதுகலைப் பட்டம் பெற்றார். தன் வகுப்பில் எப்போதும் முதலிடம் பெறும் இவர், "எனக்குத் தோல்வி என்றாலே பயமாக இருந்தது. அது, மீள முடியாத மன அழுத்தத்தைத் தரும் என்று உணர்ந்திருந்திருந்தேன். ஆறாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த சம்பவம் தான் என் மனநிலையை மாற்றியது. கடுமையாக உழைக்கவும் அர்ப்பணிப்புடன் இயங்கவும் கற்றுக்கொண்டேன். அதுபோல் நம்பிக்கையுடனும் குறையாத உத்வேகத்துடன் செயல்படும் பட்சத்தில், வெற்றிகளைக் குவிப்பதை எந்தச் சூழலாலும் தடுக்க முடியாது என்பதை நம்புகிறேன்" என்று ரெடிஃப்-புக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார் ருக்மணி.

கவிதைகள் படைப்பதிலும் காதல் கொண்ட ருக்மணி, கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெகுவாக நம்புபவர். பொலிட்டிகல் சயின்ஸ் மற்றும் சோஷியாலஜியை தனது முக்கியப் பாடப் பிரிவாக எடுத்து, சிவில் சர்வீசஸ் தேர்வில் அசத்தினார். ஐ.பி.என். லைவ் சேனலுக்கு ருக்மணி அளித்த பேட்டியில், "என் கடின உழைப்பால் பலன் கிட்டியதில் மிகுந்த மகிழ்ச்சி. பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா கடவுள்களுக்குமே இந்தப் பெருமை சேரும். தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கான வழி என்பதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஒரே சேதி. தயங்காமல் தயராகுங்கள். என்னால் முடிந்திருக்கிறது என்கிறபோது, எல்லோராலும் சாத்தியமே, யாரும் உங்களைத் தடுக்க முடியாது" என்றார் உத்வேகமாக.

ஆக்கம் - திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில்: கீட்சவன்