எதிர்காலத்தை ஆளக்கூடிய யூஏவி தொழில்நுட்பத்தை தரும் ஆரவ் அன்மேன்டு சிஸ்டம்ஸ்!

0

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர்களின் கற்பனையாக இருந்த ஆளில்லா வான் வாகனம் (unmanned aerial vehicles -UAVs) தற்போது நிஜமாகியிருக்கிறது. பல இந்திய நிறுவனங்கள் பேரிடர் மேலாண்மை மற்றும் விவசாய நில கண்காணிப்பில் இருந்து நிலங்கள் கணக்கீடு மற்றும் வான் வழிப் புகைப்படம் எடுப்பது வரையில் ஆளில்லா வான் வாகன தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என ஆய்வில் இருக்கின்றன.

'ஆரவ் அன்மேன்ட் சிஸ்டம்ஸ்' (Aarav Unmanned Systems) (ஏயுஎஸ்), யுவர் ஸ்டோரி டெக் 30 குழுமத்தின் ஒரு நிறுவனம். ஆளிள்ளா வான் வாகன தொழில்நுட்பத்தில் இறங்கியிருக்கும் இளம் தொழில்முனைவர்களில் ஒரு அங்கம். டோர்னா ஏவியேஷன், எடால் சிஸ்டம்ஸ், ஸ்கைலார்க் யுஏவி மற்றும் ஈசிபைலட் போன்றவை இதே துறையில் உள்ள வேறு சில நிறுவனங்கள். கான்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த ஏயுஎஸ் நிறுவனம் சிவில் பொறியாளர்களுக்கான நில அளவீடு மற்றும் பயன்பாடு தொழில் சார்ந்த விஷயங்களில் உதவும் யுஏவி தொழில் நுட்பத்தைத் தருகிறது. விரைவு மற்றும் குறைந்த செலவு ஆகியவை ஏயுஎஸ் நிறுவனத்தின் தனித்துவம். கான்பூர் ஐஐடியில் உள்ள எஸ்டிபிஐ இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் சென்ட்டரில்தான் (SIDBI Innovation and Incubation Centre -SIIC) ஏயுஎஸ் உருவானது.

இப்படித்தான் தொடங்கியது

நிகில் உபாத்யே, சுபாஷ் பன்ஷிவாலா, விபுல்சிங். இவர்கள்தான் ஏயுஎஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள். கான்பூர் ஐஐடி மாணவர்கள். 2013ம் ஆண்டு நாசா சிஸ்டம் இன்ஜினியரிங் அவார்ட் போட்டி ஒன்றை நடத்தியது. கான்பூர் ஐஐடி சார்பில் அந்தப் போட்டியில் அவர்கள் பங்கேற்றனர். அப்போது குறிப்பிட்ட எடையை ஏற்றிச் செல்லும் ஒரு குறிப்பிட்ட எடை கொண்ட ஆளில்லா வான் வாகனம் ஒன்றை அவர்கள் வடிவமைக்க வேண்டியிருந்தது. அதே வருடத்தில்தான் அவர்கள் மூவரும் ஏயுஎஸ் நிறுவனத்தை உருவாக்கினர்.

அமெரிக்காவில் அந்தப் போட்டியில் பங்கேற்ற போது, அங்கு ஆளில்லா வான் வாகன தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வு, இந்தியாவோடு ஒப்பிடும் போது எந்த அளவுக்கு நன்கு வளர்ந்திருக்கிறது என்பதை அவர்களால் பார்க்க முடிந்தது. இந்தத் தொழில்நுட்பம் பெரும்பாலும் பொழுது போக்கு அம்சங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதையும் அவர்கள் கண்டனர்.

2014ம் ஆண்டில் தன்னையும் ஒரு நிறுவனராக இணைத்துக் கொண்ட 25 வயது யஷ்வந்த் ரெட்டி, “யுஏவி தொழில் நுட்பம் தொடர்பாக கற்பனைக்கும் சாத்தியங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறித்து நிறையப் பேசினோம்” என்கிறார். “தொழில் நுட்ப விஷயங்கள் குறித்து தாறுமாறாக விவாதித்தோம். கடைசியில் பொறியியல் துறையில் யுஏவி பயன்பாடுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலமாக இருக்கப் போகிறது என்ற முடிவுக்கு வந்தோம்” என்கிறார் அவர்.

ஏரோ மாடலிங் மற்றும் ரோபோ தொழில்நுட்பத்தில் இருந்த ஈடுபாடுதான் இவர்களை ஒன்றிணைத்தது.

“தேவையான திறன்களை கச்சிதமாகக் கலந்த ஒரே நோக்கத்தைக் கொண்ட குழு” என்கிறார் யஷ்வந்த்

நிகில் ஆரம்பத்தில் கூகுல் சம்மர் ஆப் கோட் புரோகிராமில் ஒரு மாணவ மேம்பாட்டாளராக இருந்தார். இவர்தான் ஏயுஎஸ் நிறுவனத்தின் இமேஜ் புராசசிங், மென்பொருள் உருவாக்கம் போன்றவற்றைக் கவனித்துக் கொள்கிறார். ஃப்லிப்கார்ட்டில் ஒரு ஆய்வாளராக பணியாற்றிய சுஹாஸ், திசை, சிஸ்டம் கட்டுப்பாடு, தொழில் நுட்ப மேம்பாடு போன்றவற்றைக் கவனித்துக் கொள்கிறார். இவர் தனது மாணவப் பருவத்திலிருந்து ரோபாட் தொழில்நுட்பத்தில் பரிட்சயமானவர். ஐஐடியில் ஒரு ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்த விபுல், ஏயுஎஸ் நிறுவனத்தில் யுஏவி மேம்பாடு, சிஸ்டம் என்ஜினியரிங், விற்பனை, சந்தைப்படுத்தல், வர்த்தகத்தை வளர்த்தல் போன்ற பணிகளைக் கவனித்துக் கொள்கிறார். இவர்களின் குழுவில் உள்ள யஷ்வந்த், அமிட்டி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து விட்டு மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங்கில் எம்டெக் முடித்தவர்.

இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தவர் விபுல்தான். அமிட்டி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது யஷ்வந்த் அவருக்குப் பழக்கமானார். அதன்பிறகு கான்பூர் ஐஐடியில் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த போது நிகிலையும் சுஹாசையும் சந்தித்த அவர் அனைவரையும் ஒன்றிணைத்தார்.

தயாரிப்பு

ஆளில்லா வான் வாகனம் போட்டோகிராமெட்டரி எனும் முறையில் நிலப்பரப்பை புகைப்படம் எடுக்கிறது. இந்தப் புகைப்படங்கள் நிலப்பரப்பின் அளவீடு, தூரம் போன்றவற்றைத் துல்லியமாகவும் டிஜிட்டல் எலிவேஷன் மாடலில் அல்லது முப்பரிமாணத்தில் தருகிறது. இதை வைத்துத்தான் பல்வேறு துறைகளில் முக்கியமான முடிவுகள் எடுக்கின்றனர். இதுதான் ஆளில்லா வான் வாகனத்தின் பயன்பாடு.

மலைப்பகுதி ஒன்றில் பாலம் ஒன்றைக் கட்ட வேண்டும் என வைத்துக் கொள்வோம். அதற்கு முதலில் அந்தப் பகுதி அல்லது இடஅமைவு குறித்து முழுமையாகத் புரிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக ஜிபிஎஸ் வரைபடம் மூலம் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது கால அவகாசம் பிடிக்கும். அதே சமயத்தில் கொஞ்சம் சிக்கலான வழிமுறையும் கூட. மற்றொரு விஷயம் பாலம் கட்ட வேண்டும் என முடிவெடுப்பவர் ஒரு பொறியாளராகவும் இருப்பார் எனச் சொல்ல முடியாது. அவர் சேகரித்த விபரங்களை பொறியாளரிடம் காட்ட வேண்டும். ஆனால் ஆளில்லா வான் வாகனத் தொழில் நுட்பத்தில், முடிவெடுப்பவரே, இடத்தை தெளிவாகப் பார்க்க முடியும். யுஏவி சேகரித்திருக்கும் விபரங்களை முப்பரிமாணத்தில் கொடுக்கும். அந்த விபரங்கள் சரியான முடிவெடுக்க வசதியாக இருக்கும். இது நேர விரயத்தைக் குறைப்பதோடு துல்லியமான முடிவெடுக்கவும் உதவுகிறது.

சகல வசதிகளையும் உள்ளடக்கிய நயன் என்ற தயாரிப்பை வழங்குகிறது ஏயுஎஸ். ஆய்வாளர்கள் மற்றும் உருவாக்குனர்களுக்கு பயன்படும் உயர் செயல்பாட்டைக் கொண்ட வான் வாகனம் அது. எனினும் நயன் ஏயுஎஸ்-ன் பிரதான தயாரிப்பு அல்ல. புவியியல் தகவல் அமைப்புக்கான (Geographic Information System- GIS) ஜிஐஎஸ் வரைபடம் மற்றும் துல்லிய விவசாயத்திற்குப் பயன்படும் விதத்தில் யுஏஎஸ்- தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுதான் அவர்களின் பிரதான இலக்கு. இதற்கான முன் மாதிரி எல்லாம் தயாராகி விட்டது. விரைவில் தயாரிப்பு வெளி வர உள்ளது.

“தற்போது இது போன்ற ஆய்வுகளுக்கு தரையை அடிப்படையாகக் கொண்ட சிஸ்டம்தான் பயன்பாட்டில் இருக்கிறது. இதன் செயல்பாட்டில் வேகம் குறைவு. எல்லா நிலப்பரப்புக்கும் பொருந்தாது. பரந்துபட்டதல்ல. எனவே நாங்கள் இந்த சிஸ்டத்தை தரையில் இருந்து வானுக்குக் கொண்டு சென்றிருக்கிறோம்” என்கிறார் யஷ்வந்த்

பாரம்பரியமாக புழக்கத்தில் இருக்கும் தரையை அடிப்படையாகக் கொண்ட ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடும் போது, ஏயுஎஸ் தரும் நில அமைவு தரவுகளின் துல்லியம் 50லிருந்து 60 மில்லி மீட்டர் வரை என்கிறார் யஷ்வந்த். அதே போல் வேகமும் 15லிருந்து 20 மடங்கு அதிகம் என்கிறார்.

வருமானம்

2013ல் 25 லட்ச ரூபாய் மூலதனத்துடன் தொடங்கியது ஏயுஎஸ். தனது முதலீட்டை அதிகப்படுத்த ப்ரீ சீரிஸ் ஏ எனும் (முதல் சுற்று முதலீடுகள் - pre-series A) முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முதலீடு செய்தவர்களின் பெயர்களை ஏயுஎஸ் ரகசியமாக வைத்திருக்கிறது. 10க்கும் குறைவான வாடிக்கையாளர்கள்தான் ஏயுஎஸ்சுக்கு. வருமானம் ஒரு கோடிக்கும் குறைவு.

வெறும் யுஏவி விற்பனை மற்றும் சேவை தரும் நிறுவனமாக சுருங்கிவிட ஏயுஎஸ் விரும்பவில்லை என்கிறார் யஷ்வந்த் தெளிவாக. “ஒரு முழுமையான சொல்யூசன் ப்ரொவைடராக இருக்க விரும்புகிறோம். உள் கட்டமைப்பை மேம்படுத்தல் மற்றும் பராமரித்தல், திட்டமிடுதல், விரிவான ஆய்வு உதவி என்ற அத்தனை சேவைகளை வாடிக்கையாளருக்கு வழங்கும் விதத்தில் எங்கள் தயாரிப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்” என்கிறார் அவர்.

செல்ல வேண்டிய தூரம்

தற்போது தங்களது நிறுவனத்தை விரிவு படுத்த பெங்களூரு செல்ல திட்டமிட்டுள்ளனர். முதல் சுற்று முதலீடுகள் வந்து விட்டால், அதன்பிறகு புதிய தயாரிப்புகளுக்கான வேலைகள் நடைபெறும்.

“எங்கள் யுஏவி தொழில் நுட்பத்தை மேலும் மேலும் நுணுக்கமாக வளர்த்தெடுக்க விரும்புகிறோம். இதுவரையில் யாரும் பயன்படுத்தாத தளத்தில் எல்லாம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் நீண்ட காலத் திட்டம்” என்கிறார் யஷ்வந்த்.

“இந்த ஆரவாரமில்லாத தொழில்நுட்பமும், அந்தத் தொழில் நுட்பத்தின் எல்லைகளைக் கடந்து புதியதைக் கண்டறிவதும் இந்தக் குழுவினரின் பேரார்வத்தைத் தூண்டிவிடும் எரிபொருள்கள். நாங்கள் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே எங்களின் யுஏவி-ஐ பறக்கவிட்ட போதும், எங்களின் சொந்தத் தயாரிப்பான வான் வாகனத்தை முதன் முதலாகப் பறக்கவிட்ட போதும், ஒவ்வொரு முறையும் யுஏவி பறக்கவும் இறங்கவும் புதுப் புது வழிமுறைகளைக் கண்டறிந்தோம். அந்த உற்சாகம்தான் எங்களைப் பற்றிக் கொண்டிருக்கிறது” என்று புன்னகை செய்கிறார் யஷ்வந்த்.

யுஏவியுடன் ஒரு செல்பி
யுஏவியுடன் ஒரு செல்பி

தோல்விகள் கற்றுக் கொடுத்த பாடம்

உற்சாகம், பேரார்வம் மற்றும் நம்பிக்கையுடன் இயங்கினாலும் இவர்களும் தோல்வியைச் சந்திக்காமல் இல்லை. தோல்வி பல வகையிலும் வந்தது. அவர்களின் முதல் தயாரிப்பை டெலிவரி செய்ய முடியாமல் போனதில் இருந்து, முன்மாதிரியைத் தொலைத்தது வரையில் பலவிதமான தோல்விகள். எனினும் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் அவர்கள் பின்வரும் மிக முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொண்டனர்:

  • நம்பிக்கையின் அடிப்படையில் ஒருபோதும் வாக்குறுதி அளிக்கக் கூடாது. ஒரு வேலையை ஒப்புக் கொள்வதற்கு முன் முடிந்த வரையில் நிறைய சரிபார்ப்புப் பரிசோதனைகளைச் செய்து பார்த்து விட வேண்டும்.
  • நீங்கள் எதை உருவாக்கினாலும் மிக மோசமான சூழ்நிலையிலும் தாங்குமா என்பதற்கான தீவிர சோதனையை செய்து விட வேண்டும். இது புதிய பாதைகளுக்கு உங்களை இட்டுச் செல்லும்.
  • தரம்தான் நமது குறிக்கோள் என்றால், அதற்கு அவசரம் ஒரு போதும் உதவாது.

வானம் தொட்டு விடும் தூரம்தான்

யுஏவி தொழில்நுட்பம் உயர் திறன் வாய்ந்த ஒரு புதிய தொழில்நுட்பம். இந்தத் துறையில் சரியான நேரத்தில் நுழைந்திருக்கிறது ஏயுஎஸ். பொழுது போக்கு அம்சங்களில் இருந்து ராணுவம் வரையில் பல்வேறு வகையில் பயன்படுகிறது யுஏவி. மார்க்கெட்ஸ் அண்ட் மார்க்கெட்ஸ் ஆய்வின் படி சர்வதேச சந்தையில் இதன் வர்த்தகம் 5.5 பில்லியன் டாலரைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியாயினும் இந்தத் தொழில்நுட்பம் அன்றாடம் வளர்ந்து வருகிறது. இந்தத் துறையில் சர்வதேச அளவில் நிறைய நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. டிஜேஐ, போயிங் கம்பெனி மற்றும் ஜெனரல் அடோமிக்ஸ் இந்தத் துறையை சேர்ந்த ஒரு சில பெரு நிறுவனங்கள்.

ஏயுஎஸ்சுக்கு இந்தியாவில் போட்டி உள்ளது. யுஏவி தொழில்நுட்பத்தில் உச்சத்திற்கு வந்து வாடிக்கையாளர்களை வெற்றி கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் மிகுந்த பிரபலமாகி வரும் நிலையில், இது தொடர்பான அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர்கள் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 2014 அக்டோபரில், விமானப் போக்குவரத்து பொது இயக்குனர் (Director General of Civil Aviation - DGCA) ஒருவர் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், ஆளில்லா வான் வாகனம் அல்லது யுஏவி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்திருந்தார். எனவே யுஏவி இயக்க வேண்டுமெனில் அதற்கு ஏர் நேவிகேஷன், பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள், மேலும் சிவில் ஏவியேசன் பொது இயக்குனரகம் என அனைத்து இடங்களிலும் அனுமதி பெற வேண்டும். “உள்துறை அமைச்சகம் எங்கள் வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இப்போது நாங்கள் முறையான அனுமதியைப் பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் அனுமதியைப் பெறுகிறோம். அதிகார வர்க்க சிவப்பு நாடா முறை எங்களுக்கு ஒரு சவாலாக இருந்தது” என்கிறார் யஷ்வந்த்.

இந்த விஷயங்களை எல்லாம் ஏயுஎஸ் குழு வெற்றிகரமாக சமாளித்து விட்டால், அவர்களுக்கு வானம் தொட்டு விடும் தூரம்தான்.

இணையதள முகவரி: AUS

ஆக்கம் : தன்வி துபே | தமிழில் : சிவா தமிழ்ச்செல்வா