இசை நாடிக்கு உயிர் கொடுத்த இசைஞானி...

80-களில் தயாரிப்பாளர்கள் ஹீரோவை முடிவு செய்வதற்கு முன்னரே இசையமைப்பாளராக இளையராஜாவை முடிவு செய்துவிடுவார்கள். இவர் படத்தில் இருந்தால் படம் ஹிட் என்பது தமிழ் சினிமாவின் சென்டிமென்ட்.

0

தமிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜாவும் ஒருவர். 6500 பாடல்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா, ஆயிரம் படங்களைக் கடந்து இசையமைத்த மேதை.

ஜூன் 2ம் தேதி 1943ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசய்யா. அப்பா ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள்.

இளையராஜா தன் இளமைக்காலத்தில் கிராமப்புறத்திலேயே வளர்ந்ததால், நாட்டுப்புற சங்கீதத்தில் அவரால் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. தன்னுடைய 14வது வயதில் அவர் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களுடைய இசைக்குழுவில் இணைந்து பத்து ஆண்டுகள் அந்த குழுவோடேயே பயணித்தார். அந்த குழுவில் இருக்கும் போதே ஜவகர்லால் நேருவின் மறைவுக்கு கண்ணதாசன் அவர்கள் இயற்றிய இரங்கற்பாவுக்கான இசைத்தழுவலில் முதன்முதலில் இசையமைத்தார். 

1968ல் தன் குருவான தன்ராஜ் அவர்களுடன் இணைந்து சென்னையில் இசைக்கான கூட்டுப்பயிற்சி ஒன்றைத் தொடங்கினார். அதில் மேற்கத்திய பாரம்பரிய இசைக்கான கண்ணோட்டமும், கசைக்கருவிகள் செயல்திறன் பற்றியும், இசையை எந்தெந்த வகையில் மாற்றியமைக்க முடியும் என்பதனை பற்றியும் பயிற்சி பெறும் வகையிலாக அது அமைக்கப்பட்டிருந்தது. இளையராஜா கிளாசிக்கல் கிட்டார் வாசிப்பில் சிறந்து விளங்கினார். எனவே லண்டன் ‘ட்ரினிடி காலேஜ் ஆஃப் மியூசிக்கில்’ சிலகாலம் வகுப்பெடுத்தார்.

1970ல் சென்னையில் ஒரு இசைக்குழுவுக்கு சம்பளத்திற்காக கிட்டார் வாசித்தார். அதே நேரம் சலில் சவுத்ரி போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு கிட்டாரிஸ்ட்டாகவும், கீபோர்டரிஸ்டாகவும் இருந்து வந்தார். பின்னர் கன்னட திரைப்பட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் இசை உதவியாளராக பணிபுரிந்தார், அந்த சமயங்களில் 200க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் பணிபுரிந்தார். வெங்கடேஷ் அவருக்கு உதவியாளராக இருக்கும் போதே தன்னுடைய சொந்த இசைக்கோர்வைகளையும் எழுதத் தொடங்கினார். அந்த இசைக்கோர்வைகளை இசையமைத்துப் பார்க்க வெங்கடேஷ் அவர்களின் இசைக்குழுவில் இருந்த இசைக்கலைஞர்களையே அவர்களுடைய இடைவேளை நேரங்களில் பயன்படுத்திக் கொண்டார்.

1975ல் பஞ்சு அருணாச்சலம் தயாரித்த அன்னக்கிளி படத்தில் முதன்முதலில் திரைப்பட இசையமைப்பாளராக அவதரித்தார் இளையராஜா. இந்த சமயத்தில் தன்னுடைய புதுமையை புகுத்த நினைத்த இசைஞானி, மேற்கத்திய இசை இசைக்கும் இசைக்குழுவை வைத்து தமிழின் நாட்டுபுற மெல்லிசையையும், நாட்டுப்புற கவிதைகளையும் இசையமைத்தார். அது மேற்கத்திய இசையில் தமிழின் நாட்டுப்புறம் கலந்த ஒரு தனித்துவமான கலவையாக இருந்தது. 

இந்த இசை இந்தியாவின் அனைத்து இசைசூழல்களுக்கிடையேயும் ஒரு புதுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1980களில் திரைப்பட இசையமைப்பாளராகவும், இசை இயக்குனராகவும் புகழ் பெற தொடங்கினார் இசைஞானி இளையராஜா.
பட உதவி: Youtube
பட உதவி: Youtube

புதுப்புது அர்த்தங்கள் படத்திலுள்ள ‘கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே...’ பாடல், இன்று நேற்று நாளை என என்றும் ஹிட் லிஸ்டில் முதலில் இருக்கும் இளையராஜாவின் வெறித்தனப் பாடல். தொடக்கத்தில் இளையராஜா மெட்டு எடுத்துக் கொடுக்க, ரகுமான் பாடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களின் எவர்கிரீன் பாடல் இது.

இதே போல், கங்கை அமரன் இயக்கத்தில் கரகாட்டக்காரன் படத்தில் பாட்டாலே புத்தி சொன்னான்’ பாடல் அசாத்திய ஹிட். அனைத்து பாடலுமே வேற லெவல். இப்படத்திற்கான டைட்டில் பாடலை இளையராஜா எழுதி, படத்தில் தோன்றி பாடியிருப்பார். அவருக்கு அவரே பாடியிருப்பது போன்ற ஃபீல் தரும்.

இந்திய இசை உலகில் முதன் முதலில் மேற்கத்திய பாரம்பரிய இசை இணக்கங்களையும், சரங்களையும் பயன்படுத்தியவர் இளையராஜா தான். இவர் இசையமைக்கும் படங்களின் பின்னனி இசையும் தனித்துவம் வாய்ந்தவையாக இருந்தன. இதனால் இந்திய ரசிகர்களிடம் தனிக் கவனம் பெற வைத்தன.

ஆஃப்ரோ டிரைபல், போஸா நோவா, டேன்ஸ் மியூசிக், டூ-வாப், ப்ளமிங்கோ, வெஸ்டரன் போல்க், ஜாஸ், மார்ச், பேதோஸ், பாப், சிக்டெலியா மற்றும் ராக் அன்ட ரோல் போன்ற பல வகையான இசைகளை இந்திய இசை உலகில் பரினமித்திருக்கிறார்.

ஒரு படத்தில் வரும் காட்சிகள் அதனுடைய தன்மையுடனேயே ரசிகர்களை சென்றடைவதில் இசைக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் இவர் கதையமைப்புக்கு ஏற்றவாறு இசையமைப்பதனால் ரசிகர்களுக்கு படத்தின் உணர்வுகளை சிறந்த முறையில் வெளிப்படுத்த முடிந்தது.

இசையில் தொடங்குதம்மா, சங்கத்தில் பாடாத கவிதை, சுந்தரி கண்ணாலு ஒரு சேதி, தென்றல் வந்து தீண்டும் போது, என்னுள்ளே என்னுள்ளே...’ ஆகிய பாடல்களின் அழகியலையும், அந்த இசையுடன் இயைந்த சொற்கள் தரும் மயக்கத்தையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

முதன்முதலில் தமிழில் கணினி முறை இசையை ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் கொண்டு வந்தவர் இளையராஜாவே. இளையராஜாவின் பாடலான முதல் மரியாதை படப் பாடல் சீனாவின் ரேடியோ ஒன்றில் சிறந்த பாடலாக தேர்வானது. இன்னமும் இசையை பயிலும் மாணவர்கள் கூட இசை ஆய்விற்காக ராஜாவின் பாடல்களை எடுக்க சற்றே தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம் அவரது பாடல்கள் இன்னமும் இசை ஜாம்பான்களுக்கே புரியாத ரகமாய் உள்ளது.

இளையராஜா – எழுத்தாளரும் கூட. சங்கீதக் கனவுகள், வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, வழித்துணை, துளி கடல், ஞான கங்கா, பால் நிலாப்பாதை உண்மைக்குத் திரை ஏது?, யாருக்கு யார் எழுதுவது?, என் நரம்பு வீணை, மேலும் நாத வெளியினிலே என்னும் புத்தகத்தில், வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பாக இது அமைந்தது, பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள் மற்றும் இளையராஜாவின் சிந்தனைகள் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

இவர் திரைப்படம் அல்லாத இரண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். முதலாவது ‘How to name it?’ என 1986ல் அவருடைய கர்னாடிக் குருவான தியாகராஜருக்கு சமர்பிப்பதற்காக வெளியிடப்பட்ட இசை ஆல்பம். இரண்டாவது ‘Nothing but wind’ என்ற ஆல்பத்தை 1988ஆம் ஆண்டு வெளியிட்டார். இதை தவிர இரண்டு பக்திப் பாடல்களுக்கும் இசையமைத்துளளார்.

இந்திய அரசாங்கத்தால் திரைத்துறை கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தேசிய விருதை ஐந்து முறை பெற்றுள்ளார். சிறந்த இசை இயக்குனராக மூன்று முறையும், சிறந்த பின்னனி இசைக்காக இரண்டு முறையும் விருது பெற்றுள்ளார். 2010ல் இந்திய அரசாங்கத்தால் பத்ம பூஷன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். 

2012ம் ஆண்டு இசையில் இவருடைய சோதனை முயற்சிகளையும், படைப்புகளையும் கவுரவிக்கும் விதமாக சங்கீத நாடக அகாடமியால் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. இசைத்துறையில் இவருடைய சிறந்த பங்களிப்பை பாராட்டும் விதமாக 2014 ல் ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி நேஷனல் எமினென்ஸ் அவார்டு’ வழங்கப்பட்டது. 

பOnly Raja Wordpress
பOnly Raja Wordpress

2015ல் கோவாவில் நடைபெற்ற 46வது சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனைக்காக ‘CENTRARY AWARD’ வழங்கி கவுரவிக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டே கேரளாவின் உயரிய விருதான ‘நிஷாகாந்தி புரஸ்காரம்’ விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ’பஞ்சமுகி’ என்ற கர்நாடக இசை ராகம் இளையராஜாவால் உருவாக்காப்பட்டது.

1970களில் தொடங்கி இப்போது வரை இசையின் மூலம் அனைவரையும் கட்டுப்படுத்த முடியுமென்றால் அது இளையராஜாவால் மட்டுமே சாத்தியம். காற்றும், காதலும் உள்ள வரை இளையராஜாவின் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். 

இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்... 

Related Stories

Stories by Jessica