கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சத்யராஜ்: பாகுபலி-2 ரிலீஸ் செய்ய வேண்டுகோள்!

0

கடந்த 2008-ம் ஆண்டு காவிரி விவகாரத்தில் கர்நாடக அமைப்புகளுக்கு எதிராக பேசிய பேச்சுக்காக சத்யராஜ் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவர் நடித்து வெளிவரவிருக்கும் பாகுபலி-2 கர்நாடகாவில் வெளியிட அனுமதிப்போம் என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கிவந்தன. இந்நிலையில் இன்று வீடியோ பதிவு மூலம் பேசிய சத்யராஜ், தன்னால் அத்தகைய பிரம்மண்டமான படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்படுவதை தாம் விரும்பவில்லை என்றும் தன் மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு கன்னட அமைப்புகள் பாகுபலி இரண்டாம் பாகத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

தான் நடித்துள்ள ஒரே காரணத்தினால், ராஜமெளலி இயக்கி வெளிவரவிருக்கும் படத்தை கர்நாடகத்தில் தடை செய்வதன்மூலம் அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நஷ்டமடைவதை தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக தனது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு கன்னட அமைப்புகள் பாகுபலி-2 வெளியிட கேட்டுள்ளார்.  

மேலும் பேசிய சத்யராஜ், இனி வரும் காலங்களில் தாம் ஒரு தமிழனாக, தமிழீழ பிரச்சனை, தமிழக விவசாயிகள் பிரச்சனை, காவிரி பிரச்சனை என்று எதுவாயினும் தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், அதனால் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணும் தயாரிப்பாளர்கள் தன்னை திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யவேண்டாம் என்றும் தன்னால் நஷ்டம் ஏற்படவேண்டாம் என்றும் கூறியுள்ளார். 

“ஒரு நடிகனாக இருப்பதை, இறப்பதைவிட மூடநம்பிக்கையில்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் தான் எனக்கு பெருமை.”
சத்யராஜ் விளக்க காணொளி
சத்யராஜ் விளக்க காணொளி

நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, கன்னட மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். சத்யராஜ் எனும் நடிகர் தன் சொந்த கருத்துக்களை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருப்பதை இப்போது பெரிதுபடுத்தி அதனால், திரைப்படத்தை வெளியிடாமல் தடுப்பதால் பலருக்கும் வியாபார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறி இருந்தார். மேலும் பாகுபலி பாகம் 1 வந்தபோது வராத சர்ச்சை தற்போது கிளம்பி இருப்பது வேதனை அளிப்பதாகவும், தான் சத்யராஜை தொடர்பு கொண்டு பேசி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.