குழந்தைகளுக்கு இலவசமாக கோடிங் கற்றுத்தரும் 14 வயது கோடிங் ஆசிரியர் க்ரிஷ் சம்தானி! 

0

கமாண்ட்களை உருவாக்கும் ப்ராக்கெட்ஸ் மற்றும் கேரக்டர்ஸ் ஆகியவற்றின் கலவையை தன் எதிர்காலமாக பார்க்கும் ஒருவரை நாங்கள் சந்தித்தோம். இந்த மொழியில் சுயமாக கற்று திறமை பெற்ற இவர், அனைவரும் இதில் பங்கெடுக்க வேண்டும் ஏனெனில் இது பரபரப்பாகவும், பொழுதுபோக்காகவும் நவீன உலகை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார். ஆகவே இதை மக்களிடம் இலவசமாக எடுத்துச் செல்ல தீர்மானித்தார்.

அது மட்டுமல்ல இவருக்கு 14 வயதுதான் ஆகிறது என்பது மற்றொரு ஈர்க்கக்கூடிய விஷயம். இந்த வயதில் தன்னுடைய கனவை நனவாக்கத் தொடங்கிவிட்டார்.

க்ரிஷ்-ன் கோட் (code)

க்ரிஷ் சம்தானி USA-வின் நியூ ஜெர்சியின் செகாகஸ் நகரில் பிறந்தார். முதல் எட்டு வருடங்களை இங்கு கழித்தார். பின் இவர் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரருடன் பெங்களூருவிற்கு குடிபெயர்ந்தார். மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த க்ரிஷ்க்கு முதலில் இந்த மாற்றம் கடினமாக இருந்தது. ஆனால் விரைவில் அந்த நகரத்தை விரும்பத் தொடங்கினார். ஆரம்பப் பள்ளிக் கல்வியின் எஞ்சிய பகுதியை க்ரீன்வுட் ஹையில் தொடர்ந்தார். பிறகு TISB-க்கு மாற்றலாகி தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கேம்ப்ரிஜ் IGCSE தேர்விற்கு தயாராகி வருகிறார்.

நான்காம் வகுப்பிலிருந்தே பொழுதுபோக்கிலும் பாடதிட்டம் சாரா செயல்களிலும் தன்னால் இயன்றதைவிட அதிகளவிலேயே கவனம் செலுத்தினார். ஒன்பது வயதில் படித்த அப்ளைட் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமாகட்டும் அதன் பிறகு தேர்ந்தெடுத்த அடோப் ஃபோடோஷாப், நெட்வொர்கிங் போன்ற சாஃப்ட்வேர் பாடமாகட்டும் அனைத்தையும் திறம்பட பயின்றார். இப்படிப்பட்ட பாடங்களை அவர் முழுமையாக ரசித்தாலும் அவரது உண்மையான ஆர்வமான கோடிங் நோக்கி பயணிக்க உதவும் படிக்கல்லாகவே இதை அமைத்துக்கொண்டார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு கோடிங் பாடங்களை கற்றுக்கொண்டு எதிர்பார்த்தது போலவே பைதான், ஜாவா போன்ற ப்ரோக்ராமிங் லேங்வேஜ்களை விரைவாகப் புரிந்துகொண்டார்.

”எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரம் முழுவதையும் கோடிங்கில் செலவிட்டேன். இருந்தும் பயன்பாடு குறித்த நடைமுறை அனுபவம் எனக்கு இல்லை.” என்று நினைவுகூர்ந்தார் க்ரிஷ்.

கோடையில் US சென்றிருந்தபோது ரியல் வேர்ல்ட் கோடிங் கான்செப்ட் குறித்த சில கேம்ப்களில் பங்கேற்றார். அதற்குப் பிறகு கோடிங் அவரை வெகுவாக ஈர்த்தது. 

”கோட்பாடுகளைத் தாண்டி நிஜ உலகச் சூழலுக்கு ஏற்றவாறான பயன்பாடுகள் குறித்து கற்றுக்கொடுக்கப்படும் வகுப்புகளுக்கு செல்ல விரும்பினேன். ஆனால் என் இடத்திற்கு திரும்பியதும் அப்படிப்பட்ட வகுப்புகள் எங்கும் இல்லாததை அறிந்தேன். உலகின் சிறந்த ப்ரோக்ராமர்களை உருவாக்கும் நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அப்போதுதான் இப்படிப்பட்ட ஒன்றை தொடங்கவேண்டும் என்று தோன்றியது.” என்றார் க்ரிஷ். 

சிறந்த ப்ரோக்ராமர் என்கிற அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டு கடந்து செல்ல இவர் விரும்பவில்லை.

குறிப்பிட்ட திட்டத்தில் கவனம் 

‘0Gravity’ என்பதுதான் அந்த திட்டத்தின் பெயர். இது 10 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான இலவச கோடிங் க்ளப். இந்தப் பெயர் அவரது அணுகுமுறைக்கும் பொருந்தும். 

“அதாவது எந்தவிதமான எல்லையும் கட்டுப்பாடும் இல்லை என்று பொருள்படும். இது குழந்தைகள் அவர்களது அசாதாரணமான படைப்பாற்றலை பயன்படுத்த உதவும். இதனால் வெகு விரைவில் நமது வாழ்க்கை சார்ந்து இருக்கப்போகிற ஒரு திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும்.” என்றார். 

பல குழந்தைகள் புத்திசாலிகளாக இருந்தும் கோடிங் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதை அறிந்தார். அவர்கள் இந்த க்ளப்பில் பங்கெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

சுவாரஸ்யமான நடவடிக்கைகளைக் கொண்டிருந்தால் அது கோடிங்கை மகிழ்ச்சியாக்கி குழந்தைகள் அதில் விரும்பி ஈடுபட உதவும் என்று நினைத்தார். அவர் கேம்ப்பில் இருந்தபோதே ஒரு ப்ளூப்ரிண்ட் தயார் செய்து அவரது பெற்றோரிடன் ஒப்படைத்தார். அந்த ப்ளூப்ரிண்டை இன்று வரை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.

CoderDojo ஃப்ரேம்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டது 0Gravity. இதில் தன்னார்வல ப்ரொஃபஷனல்கள் குழந்தைகளுக்கு ஆபிஸ் லேப்பில் பல்வேறு வேடிக்கையான நடவடிக்கைகள் வாயிலாக கற்றுத்தருவர்கள். முதல் கட்ட நடவடிக்கையாக வலைதளத்தை உருவாக்கினார்கள். இதில் அவர்களது நோக்கம் மற்றும் திட்டங்களை வெளிப்படுத்தினார்கள். இதற்காக மூன்று மாதங்கள் செலவிடப்பட்டது. அதன் பின்னர் CoderDojo என்கிற ப்ரீமியர் க்ளோபல் கம்யூனிட்டி ட்ரிவன் கோடிங் நெட்வொர்க்குடன் இணைந்து செயல்பட்டனர்.

எதிர்காலத்திற்கான சமூகத்தை உருவாக்குதல்

அவரது க்ளப்பின் ஹோஸ்ட்காக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை கண்டறிவது அவரது அடுத்த நடவடிக்கையாக இருந்தது. இதற்காக பல ப்ரசெண்டேஷன்களை உருவாக்கினார். இறுதியில் Saggezza பெங்களூர் ஆபிஸ் சரியான பார்ட்னரானது. இவர்கள் தங்களது கார்ப்பரேட் சமூக பொறுப்பிற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டனர். 

”குழந்தைகளுக்கு இதில் ஆர்வமும் விருப்பமும் இருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் உண்மையான ஆபிஸ் லேபில் பணிபுரிவது மிகவும் சிறப்பாக இருக்கும்” என்று நினைவுகூர்ந்தார்.

பிரசுரங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. தன்னார்வலர்கள் சந்தித்துக் கொண்டு பாடதிட்டம் குறித்து திட்டமிட்டனர். மூன்று நாட்களில் அவர்களால் இடமளிக்க முடியாத அளவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் செய்யப்பட்டது.

சமூக மற்றும் பொருளாதார ரீதியில் அனுகூலமற்ற குழந்தைகளுக்கு அடைக்கலமளிக்கும் பரிக்ரமா ஃபவுண்டேஷனுடனும் பார்ட்னராக இணைந்தனர். இதனால் அந்தக் குழந்தைகள் க்ளப்பில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. பெங்களூருக்கு வெளியில் இருக்கும் மக்களிடமிருந்தும் கேள்விகள் வரத் தொடங்கியது வியப்பை ஏற்படுத்தியது.

HTML, CSS மற்றும் வெப் டிசைன் கோர்ஸ் ஆகியவற்றின் முதல் கட்ட வகுப்புகளை ஜனவரி 21-ம் தேதி தொடங்கினார்கள். துறையைச் சேர்ந்த இரண்டு பிரபலமான முன்னனி தலைவர்கள் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். ஒரு கோர்ஸ் முடிப்பதற்கான கால அவகாசம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு மணி நேர வகுப்புகள். ஒவ்வொரு நான்கு மாணவர்களுக்கும் ஒரு வழிகாட்டி. ஜாவாஸ்க்ரிப்ட் மற்றும் பைதான் ஆகியவற்றையும் சேர்த்து அதன் அடிப்படைகளையும் தெரிந்துகொண்டு அதை முறையாக பயன்படுத்த உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

”ஆறு மாதங்களுக்கு முன்புதான் இது திட்டமிடப்படத் தொடங்கியது என்பதை நினைக்கும்போது அனைத்தும் கனவு போலவே தோன்றுகிறது” என்றார் க்ரிஷ். அவர்களது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றிய வைஷாலி கஸ்தூரி, நிகழ்ச்சியின் புகைப்படம் ஒன்றை ப்ரொஃபஷனல் சமூக ஊடக தளமான LinkedIn-ல் பதிவு செய்திருந்தார்.

”இதனால் எங்களது வலைதளம் வேகமாக பரவி ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது.” என்று விவரித்தார் க்ரிஷ்.

பதின்பருவ நெருக்கடி

”பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களையும் என்னுடைய ஆர்வத்தையும் சமன்படுத்துவது மிகப்பெரிய சவாலாக அமைந்தது. எங்களுக்கு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட இமெயில்களுக்கு பதிலளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் பெரும்பாலான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் பெற்றோர்களிடம் மறுக்கவேண்டிய சூழலே ஏற்பட்டது.” என்றார் க்ரிஷ்.

எனினும் இந்த சவால் அவர் தொடர்ந்து திட்டமிட ஊக்குவித்தது. 100 கோடிங் க்ளப்கள் அமைக்கலாம், ஒவ்வொன்றிலும் மூன்று மாதங்களுக்கு 25 குழந்தைகள், 2020-ல் 10,000 குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம், ஐந்து குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற விகிதத்தை பின்பற்றலாம், 2000 தன்னார்வலர்கள் தேவைப்படும் என்று விரைவாக கணக்கிட்டார். எதிர்காலத்தை குறித்து சிந்தித்து திட்டமிடுவார் என்பது இதிலிருந்து நிரூபனமாகிறது.

”இதுதான் எங்களுடைய இலக்கு. இதை அடையும்வரை தொடர்ந்து பணியாற்றுவோம். பள்ளி நேரம் முடிந்தபிறகும் வார இறுதியிலும் பல நிறுவனங்களுக்கு சென்று அவர்களது கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் அடிப்படையில் 0Gravity-க்கு ஆதரவு திரட்டுவேன்.” என்றார் க்ரிஷ்.

சமீபத்திய வளர்ச்சி

0Gravity கோடிங் க்ளப் சென்னையில் பிப்ரவரி 25-ம் தேதி ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஹோஸ்ட் நிறுவனம் Saggezza. 2017, மார்ச் இறுதியில் சென்னையில் மற்றொரு க்ளப்பை அறிமுகப்படுத்த உள்ளனர். இதற்கு FixNix Inc நிறுவனம் ஹோஸ்டாக இருக்கும்.

அவரது எதிர்காலத்தைப் பொருத்தவரை எண்ணற்ற விருப்பங்கள் இருந்தாலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் எப்போதும் அவரது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும். 

”நான் எதில் என்னுடைய வாழ்க்கையை தொடர்ந்தாலும் அதில் கணக்கு, பொருளாதாரம், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் கலவை இருப்பதையே விரும்புகிறேன்”

 என்று கூறி விடைபெற்றார் க்ரிஷ்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா