அன்று நீதிபதி... இன்று விவசாயி...  

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஏ.செல்வம், தனது சொந்த ஊரில் விவசாயப் பணியில் ஈடுபட்டு  இளைய தலைமுறைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

0

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகின் எந்தவொரு மூலையில் நடக்கும் சம்பவங்களும் உடனுக்குடன் சமூகவலைதளங்களில் வைரலாகி விடுகின்றன. அந்தவகையில் கடந்த வாரம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய வீடியோக்களில் ஒன்று, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.செல்வம், டி சர்ட் அணிந்து கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வருவது தான்.

சென்னை உயர் மன்ற நீதிபதியாக இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஏ.செல்வம். இவர் கடந்த 12 ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர்.

Photo courtesy: The News Minute
Photo courtesy: The News Minute

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள புலங்குறிச்சி எனும் சிறிய கிராமம் தான் செல்வத்தின் சொந்த ஊர். இவரது தந்தை விவசாயி ஆவார். அப்பா, தாத்தா என செல்வத்தின் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர்கள். மிகவும் ஏழ்மையான சூழலில் கஷ்டப்பட்டு பள்ளிப் படிப்பை முடித்தார்.

பின் சட்டக்கல்வியை முடித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் கடந்த 1981-ம் ஆண்டு பதிவு செய்து 5 ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார். அதன்பின் கடந்த 1986-ம் ஆண்டு முனிசிப் மற்றும் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாக செல்வம் நியமிக்கப்பட்டார். கடந்த 1989-ம் ஆண்டு துணை நீதிபதியாகவும், 1997-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாகவும் உயர்ந்த செல்வம், கடந்த 2006-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தான் கடந்து வந்த பாதை குறித்து தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 

“கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க நான் செல்லும்போது, எனக்கு உடுத்திக்கொள்ள பேன்ட் இல்லை, காலில் அணியச் செருப்பு இல்லை. வாங்குவதற்கு வசதி இல்லை. அதனால், வேட்டி அணிந்து கொண்டுதான் கல்லூரி சென்று படித்தேன். நான் சட்டக்கல்லூரிக்கு சென்றபோதுதான் காலில் செருப்பும், உடுத்திக்கொள்ள பேன்ட்டும் வாங்கிக்கொள்ள முடிந்தது. ஆதலால், விவசாயம் என்பதும், வறுமை என்பதும் எனக்குப் புதிதானது அல்ல,” எனத் தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுகள் வரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த செல்வம், இந்தாண்டு ஏப்ரல் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அரசு சார்பில் அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவைப் புறக்கணித்த செல்வம், தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றதுமே, அரசு வழங்கிய காரை திருப்பி அளித்து விட்டு, இல்லத்தைக் காலி செய்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

“நீதிபதி பதிவியில் இருந்து ஓய்வு பெற்றபின், நான் எந்தவிதமான அரசு சலுகைகளையும் அனுபவிக்கவில்லை. சுதந்திரமாக, சுத்தமான காற்றை சுவாசித்து, எனது சொந்த கிராமத்தில், மகிழ்ச்சியாக விவசாயம் செய்து வருகிறேன். அதிலும் எந்தவிதமான ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்யாமல், இயற்கை முறை விவசாயத்தைச் செய்து வருகிறேன். நெல், பழங்கள், காய்கறிகளைப் பயிர் செய்திருக்கிறேன்,'' என்கிறார் செல்வம்.

ஒயிட் காலர் ஜாப் எனப்படும் அலுவலக வேலைகள் மீது இளைஞர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதியான செல்வத்தின் விவசாய ஆர்வம் இளைய சமுதாயத்தினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதியாக பணியாற்றிய போது, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்த உத்தரவுகளைப் பிறப்பித்தவர் செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருவேல மரத்தை அகற்ற உத்தரவிட்டதோடு, அப்பணிக்காக ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி, அதற்கென தனி வங்கி கணக்கையும் அவர் தொடங்கி வைத்தார்.

Photo courtesy: youtube
Photo courtesy: youtube

மேலும் தான் பதவியில் இருக்கும் போதே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவு நீர் கால்வாய்களை கட்டாமல், அவசர கதியில் சாலை அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதே நாளில் தீர்வை பெற்றவர் செல்வம். நீதிபதியே தான் பணியாற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு பெற்றது என்பது நீதித்துறை வரலாற்றிலேயே இது தான் முதன்முறை ஆகும்.

சுற்றுச்சூழல் சார்ந்த வழக்குகளில் அதிக கவனத்துடன் செயல்பட்டவரான நீதிபதி ஏ.செல்வம், ஊருக்குத் தான் உபதேசம் என்றில்லாமல், தன்னுடைய ஓய்வு காலத்தையும் விவசாயத்திற்காக செலவிட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகி உள்ளார்.

பதவியில் இருந்த போது கோட் சூட் என இருந்தவர் இன்று டிசர்ட், சார்ட்ஸ் சகிதம் களத்தில் இறங்கி டிராக்டர் ஓட்டி, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

"எனக்கு எனது நிலத்தில் விவசாயம் செய்து நல்ல அறுவடை செய்வது தான் உண்மையான மகிழ்ச்சி. இயற்கைக்கு மத்தியில் வாழ்வது மிகச்சிறந்த விஷயம்", என்கிறார் நீதிபதி செல்வம். 

Related Stories

Stories by jayachitra