அரசு ஊழியராக இருந்த இவர், ரூ.556 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய அசாத்திய வளர்ச்சிக் கதை!

உத்திரப்பிரதேசத்தில் துவங்கப்பட்ட 'மன்பசந்த் பீவரேஜஸ்' ஆரம்பத்தில் இறக்குமதி செய்து விற்பனை செய்துவந்த நிலையில் இன்று இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 556 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது...

0

இந்திய குடும்பங்களில் 90-களில் பொதுவாக பலரும் அரசாங்கப் பணியில் இருந்து வந்தனர். வாரனாசியில் வசித்து வந்த தீரேந்திர சிங் ஒரு அரசாங்க ஊழியர். வடோடராவில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது தொழில்முனைவில் ஈடுபடவேண்டும் என்கிற வேட்கை தீவிரமானது. உணவு மற்றும் பானங்கள் பிரிவில் தேவை இருப்பதை உணர்ந்து அந்தப் பகுதியில் நுழைந்தார்.

அரசுப் பணி என்கிற பாரம்பரியத்தை 1997-ல் தகர்த்தார் தீரேந்திர சிங். வழிகாட்டுதலுக்கு யாருமில்லை. தொழிலுக்கு முதலீடு செய்வதற்கான சேமிப்பும் இல்லை. அப்படிப்பட்ட நிலையில் மன்பசந்த் பீவரேஜஸ் (Manpasand Beverages) என்கிற நிறுவனத்தைத் துவங்கினார். ஆரம்பக்கட்ட முதலீட்டிற்கு தனிப்பட்ட சேமிப்பைப் பயன்படுத்தினார். குடும்பம் மற்றும் நண்பர்கள் தரப்பிலிருந்து நிதியுதவி கிடைத்தது. மாம்பழம் மிகவும் பிரபலமானது என்பதால் அதைத் தேர்ந்தெடுத்து மேங்கோ ஸிப் (Mango Sip) என்கிற மாம்பழ ஜூஸை முதலில் அறிமுகப்படுத்தினார்.

தீரேந்திர சிங்
தீரேந்திர சிங்

தொடக்கம்

மாம்பழக் கூழ் எளிதாகக் கிடைத்தது. ஆகவே அதைப் பேக்கிங் செய்வதும் விற்பனை செய்வதும் எளிதாக இருக்கும் என்று தீரேந்திரா நினைத்தார். ஆரம்ப நாட்களில் உள்ளூரில் கவனம் செலுத்தவே விரும்பினார். வாரனாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட திட்டமிட்டார்.

முதலில் பானத்திற்கான ஃபார்முலாவை உருவாக்க வேண்டியிருந்தது. அதற்காக 10 முதல் 20 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்பதை அறிந்தார் தீரேந்திரா. இவரது மகன் அபிஷேக். இவர் பொறியியல் படிப்பை முடித்ததும் 2013-ல் மன்பசந்த் பீவரேஜஸில் இணைந்தார். தற்போது இந்நிறுவனத்தின் இயக்குனரான அபிஷேக் கூறுகையில்,

”அவ்வளவு பெரிய தொகை எங்களிடம் இல்லை. என்னுடைய அப்பாவிற்கு பரிச்சயமான ஃபுட் சயின்டிஸ்ட் ஒருவர் இருந்தார். அவரிடம் மாம்பழ பானத்தை பெருமளவு உற்பத்தி செய்வதற்குத் தேவையான ரெசிபியை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டார். அதை முயற்சி செய்தார். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ருசித்துப் பார்த்து கருத்துக்களை சொல்லுமாறு அனுப்பி வைத்தார். நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையே தொடர முடிவெடுத்தார்.”

மும்பையில் ஒரு பழைய ஆலையில் துவங்கப்பட்டது

மும்பையின் மஹாநந்த டயரியில் ஒரு பழைய ஆலையை லீஸ் முறையில் எடுத்துக்கொண்டனர். இங்கு மேங்கோ சிப் தயாரிக்கப்பட்டு 200 மி.லி டெட்ரா பேக்கில் பேக் செய்யப்பட்டது. பெரிய ப்ராண்டுகளுடன் போட்டியிடுவதை தவிர்க்கவும் உள்ளூரில் செயல்படவும் தயாரிப்பை முதலில் உத்திரபிரதேசத்தில் மட்டும் விற்பனை செய்ய தீர்மானித்தனர்.

”குஜராத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு உத்திரப்பிரதேசத்தில் நல்ல மதிப்பு இருந்தது. இந்த ஆச்சரியமான விஷயத்தை என்னுடைய அப்பா கவனித்தார். எனவே எங்களது நிறுவனம் குஜராத்தில் பதிவு செய்யப்பட்டது. மேங்கோ சிப் உத்திரப்பிரதேசத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட பிறகு இந்தியா முழுவதும் விரிவடைந்து விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 20 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறோம். தொடர்ந்து வெளியிலிருந்தும் இறக்குமதி செய்து மூலதனத்தை உயர்த்தி வருகிறோம்.” என்றார் அபிஷேக்.

சிறிய நகரங்களை இலக்காகக்கொண்டு செயல்படும் திட்டம் வெற்றியடைந்தது. சில மாதங்களில் தயாரிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பெரிய ப்ராண்டுகளான ஃப்ரூட்டி மற்றும் ஜம்பின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றால் நிலை நகரங்களில் கவனம் செலுத்தாமல் புறக்கணித்துவிட்டது. இதனால் இந்த நகரங்களில் ஊடுருவது சற்று எளிதாக இருந்ததாக தெரிவித்தார் அபிஷேக்.

ஆரம்பக் கட்டத்தை எளிதாகக் கடந்த நிலையில் விரிவடையும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதை அபிஷேக் உணர்ந்தார். இதற்கு ஒரு வலுவான விநியோகஸ்தர்களின் குழுவை கட்டாயம் உருவாக்கவேண்டும் என்று நினைத்தார்.

அபிஷேக் சிங்
அபிஷேக் சிங்

ஒருங்கிணைப்புப் பணி

அவர் நெட்வொர்க்கை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். மன்பசந்த் நிறுவனத்தில் ஆரம்பகட்டத்தில் இணைந்திருந்தபோது மேலாண்மை ப்ரொஃபஷனல்களை நிறுவனத்துடன் இணைக்கவில்லை. மாறாக 24 மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில் 2,00,000-க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளையும் 2,000-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களையும், 200-க்கும் மேற்பட்ட சூப்பர் ஸ்டாகிஸ்டுகளையும் ஒருங்கிணைத்தார்.

பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு அவர்களுக்கு நிகராக செயல்படவேண்டும் என்பதை உணர்ந்தனர். இதனால் மன்பசந்த் நிறுவனம் தயாரிப்புகளை குறைவான விலையிலும் வெவ்வேறு பேக்களிலும் வழங்கியது என்றார் அபிஷேக்.

”ஒவ்வொரு நாளும் 10 விநியோகஸ்தர்களை அவர்களது குடும்பத்துடன் எங்களது தொழிற்சாலைக்கு வரவழைத்தோம். இதனால் அவர்களுக்கு எங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்தது.” என்றார் அபிஷேக்.

வளர்ச்சி

வடோடராவில் 2005-ம் ஆண்டு, முதல் உற்பத்தி ஆலையை அமைத்தனர். 2007-ம் ஆண்டு டெட்ரா பேக் பானங்களை தயாரிக்க ஒரு கூடுதல் லைன் அமைக்கப்பட்டது. மேங்கோ சிப் தயாரிப்பிற்காக இவர்களது குழுவினர் தோட்டாபுரி மாம்பழங்களை கொள்முதல் செய்தனர். மற்ற வகை மாம்பழங்களைக் காட்டிலும் இது 20 சதவீதம் விலை மலிவாகும். மேலும் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய பகுதிகளில் கிடைக்கும் அனைத்து மாம்பழ பானங்களுக்கும் இந்த வகை மாம்பழமே பயன்படுத்தப்படும்.

”அதேபோல் ஃப்ரூட்ஸ் அப்பிற்காக (Fruits Up) புகழ்பெற்றவர்களிடமிருந்தே மாம்பழக் கூழ் பெறப்படுகிறது. இந்தக் கூழ் இரண்டாண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.” என்றார் அபிஷேக்.

இந்நிறுவனத்தின் ஐந்து உற்பத்தி ஆலைகளில் ஒட்டுமொத்த தயாரிப்பும் செய்யப்படுகிறது. PET மற்றும் டெட்ரா பேக் இரண்டிற்குமான லைன்கள் இந்த ஆலைகளில் உள்ளது. Fruits Up மற்றும் Mango Sip இரண்டுமே இந்த ஆலைகளில் 100 மி.லி, 200 மி.லி, 500 மி.லி என வெவ்வேறு அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.

மன்பசந்த் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் ஐந்து பகுதிகளில் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வடோடராவில் இரண்டு யூனிட்கள் உள்ளன. இரண்டாவது யூனிட் ஏப்ரல் மாதம் 2015-ம் ஆண்டு துவங்கப்பட்டது. வாரனாசியில் ஒரு யூனிட் உள்ளது. தெஹராதுன்னில் ஒரு யூனிட்டும் அம்பாலாவில் ஒரு யூனிட்டும் விரைவில் செயல்பட உள்ளது.

2018-ம் ஆண்டு மேலும் நான்கு புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது இந்நிறுவனம். இதில் ஒன்று ஆந்திரவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சந்தை மற்றும் எதிர்காலத் திட்டங்கள்

பானங்கள் சந்தையில் பழம் சார்ந்த பானங்கள் பிரிவு பத்தாண்டுகளில் 30 சதவீத CAGR-ஐ சந்தித்திருப்பதாக டெக்னோபேக் அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது 200 மில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அடுத்த மூன்றாண்டுகளில் 15 சதவீத CAGR-ஐ எட்ட திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்களின் ஒட்டுமொத்த சந்தையில் 55 சதவீதம் பங்களித்து முன்னணியில் இருப்பது டாபர் நிறுவனம். அதற்குப்பிறகு பெப்சிகோ இந்தச் சந்தையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பங்களிக்கிறது.

SAIF பார்ட்னர்ஸ் மன்பசந்த் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை 2011-ம் ஆண்டு வாங்கினர். இவர்களது குழு 2015-ம் ஆண்டு IPO செய்து SPIL-க்கு 1000 ஈக்விட்டி பங்குகளையும் 8,99,000 CCPS-ம் ஒதுக்கி நிதியை உயர்த்தியது.

2016 நிதியாண்டின் நிகர விற்பனை 556 கோடி ரூபாய். ”இன்று மாம்பழ பானம் பகுதியில் மேங்கோ சிப் சந்தையில் 10 சதவீதம் பங்களிக்கிறது. இந்தியாவில் மாம்பழ பானம் ப்ராண்டில் மக்கள் விரும்பும் ப்ராண்டுகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது மேங்கோ சிப். வருங்காலத்தில் சந்தையின் பங்களிப்பு 22 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றார் அபிஷேக்.

2015-ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு நகர்ப்புற சந்தையில் ஊடுருவுவதில் கவனம் செலுத்தி தீவிரமாக விரிவடைவதற்கான வழிமுறைகளை அவர்கள் பின்பற்றத் துவங்கியதாக தெரிவித்தார் அபிஷேக். அவர் கூறுகையில்,

”எங்களது நோக்கத்தை மேலும் மெருகேற்றும் விதத்தில் பல்வேறு உள்ளூர் மற்றும் தேசிய நிறுவனங்களுடன் ஒன்றிணையும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஹேவ்மர் (Havmor), பாரிஸ்டா (Barista), பேஸ்கின் ராபின்ஸ் (Baskin Robbins), மெட்ரோ கேஷ் அண்ட் கேரி போன்ற முன்னனி ரெஸ்டாரண்ட்களுடனும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் 2,000 நவீன ஸ்டோர்களுடனும் இணைந்துள்ளோம். மேலும் பன்னாட்டு உணவகங்கள் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களுடனும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் நிலையில் நகர்புறங்களில் சமீபத்திய காலம் வரை குறைவான அளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறோம். இந்தப் பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். புதிய உற்பத்தி ஆலைகளை அமைப்பதன் மூலம் தற்போதைய உற்பத்தித் திறன் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கிறோம்.”

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்