தொடக்க நிறுவன மார்க்கெடிங்- நினைவில் கொள்ளவேண்டிய 10 அம்சங்கள்!

1

உங்கள் சொந்த தொழிலை தொடங்கவேண்டும் என்ற முடிவு, சிறப்பானதாக அல்லது மோசமான ஒரு முடிவாக முடியலாம். ஒரு சமயம் சிறந்த லாபத்தையும் மறு சமயம் மன உளைச்சளை ஏற்படுத்தக்கூடியதாக அது அமையலாம். இதுவரை அனுபவிக்காத பல விஷயங்களை நீங்கள் தொழில் தொடங்கியதும் சந்திக்க நேரிடலாம். மொத்தத்தில் இறுதியாக நீங்கள் வெற்றி பெற்றாலோ தோல்வியடைந்தாலோ அது அர்த்தம் உள்ளதாக இருக்கவேண்டும். 

ஒரு ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தை தொடங்க, பல விஷயங்கள் அடங்கியிருந்தாலும், அதில் முக்கிய பங்கு வகிப்பது மார்க்கெடிங். உங்கள் தொழிலுக்குத் தேவையான விளம்பர பிரச்சாரங்கள் அதிமுக்கியமாகிறது. சந்தைப்படுத்தும் யுக்திகளே உங்களில் தொழிலை வளர்த்தெடுக்கவும் லாபத்தை நோக்கியும் இட்டு செல்லும். 

உங்களது நிறுவனத்தின் மார்க்கெடிங் ப்ளானை போட நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய 10 முக்கிய அம்சங்கள் இதோ... 

1. ஆராய்ச்சி: உங்களின் மார்க்கெடிங் பிரச்சாரம் சரியான சமயத்தில், முயற்சியில் தகுந்த செலவில் செய்யப்படவேண்டியது அவசியம். ஆனால் அதற்கு முன் சந்தை பற்றிய ஆராய்ச்சி செய்வதே ஆரம்ப புள்ளியாகும். பலமுறை ஆராய்ந்த பின்னரே செயலில் இறங்கவேண்டும். மற்றவர்களின் வெற்றி, தோல்வியை ஆராயந்து அதில் பாடங்களை கற்று, உங்களின் முடிவை எடுக்கவேண்டும். உங்களின் மனம் கவர்ந்த பிரச்சாரங்களை ஆராயுங்கள், அது ஏன் உங்களை கவர்ந்தது, அதை எப்படி உருவாக்கினார்கள் என்று ஆராயுங்கள். இதுவே நீங்கள் உருவாக்கப்போகும் உங்கள் நிறுவனத்தின் மார்க்கெடிங் பிரச்சாரத்துக்கு உதவியாக இருக்கும். 

2. தெளிவு: நீங்கள்  சந்தைப்படுத்தலில் பயணிக்கும் போது, கடுமையான பாதையை தேர்ந்தெடுக்காதீர். அதை முடிந்தவரை தவிருங்கள். தெளிவான, நிலையான பாதையை தேர்வு செய்து, உங்கள் மார்க்கெடிங் பிரச்சாரத்தை வடிவமையுங்கள். உங்களின் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள், வாடிக்கையாளரை அடையாளம் காணுங்கள், பட்ஜெட்டை தயார் செய்யுங்கள், உங்களின் யுக்தியை வடிவமைத்து வேலையை ஆரம்பியுங்கள்! 

உங்களின் மார்க்கெடிங் பிரச்சாரத்தில் இருக்கவேண்டிய மூன்று முக்கிய அம்சங்கள்: சரியான தளத்தை தேர்ந்தெடுப்பது, வாடிக்கையாளரை அடையாளம் காணுவது மற்றும் சரியான உள்ளடக்கத்தை உருவாக்குவது. 

3. நோக்கங்கள்: நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மூலம் அடைய நினைக்கும் நோக்கம் என்னது? இதை முதலில் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் மார்கெடிங் யுக்திகள் மற்றும் பிரச்சாரத்தை வடிவமைக்கவும். அதற்கு ஏற்ப தளத்தை தேர்ந்தெடுத்து, உங்களின் எண்ணத்தை செயல்படுத்துங்கள். 

சில டிப்ஸ்- மனப்பூர்வமான பந்தத்தை ஏற்படுத்தும் வகையில் சிந்தியுங்கள், தனித்தன்மை உடைய குரலை தேர்வு செய்து, பலரை கவரக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்கி உங்களின் பிரச்சாரம் மூலம் பலரை பேச வையுங்கள், வேறு எங்கும் கிடைக்காத புதிய தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு தெரிவியுங்கள், மக்களின் மனதை தொடும் விதத்தில் நகைச்சுவை, அறவணைப்பு, அன்பு அடங்கிய பிரச்சாரம், கேள்விகளை கேட்டு சிந்திக்கவைக்கும் பிரச்சாரங்களை செய்வது நல்ல முறையில் சென்றடையும். 

4. சாதனை: உங்கள் இலக்கை நிர்ணயித்தவுடன் அதன் பின் ஓடுங்கள்! இலக்கை அடைய திட்டம் வகுத்துக்கொள்ளுங்கள். யார் யாருக்கு என்னென்ன பணிகள் என்று பிரித்து கொடுங்கள். அதை ஒருங்கிணைப்பது முக்கிய பணியாகும். 

5. கட்டமைத்தல்: எல்லா மார்கெடிங் பிரச்சாரங்களும் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. அந்த நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். ஒரு டவரை கட்டுவது போல தான் இதுவும். அதை கட்டுவதற்கு முன் வரப்போகும் ஆபத்து மற்றும் சவால்களையும் நினைவில் கொள்வது மிக அவசியம். இருப்பினும் ரிஸ்க் எடுத்து செய்யும் சில பிரச்சாரங்கள் வெற்றியடைந்து மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளதை பல சமயங்களில் பார்த்துள்ளோம். 

6. சமாளியுங்கள்: எல்லாரும் சரியாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. சில சமயம் மார்க்கெடிங் பிரச்சாரத்தில் தவறு ஏற்பட்டு அது தோல்வியிலும் முடியலாம். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அந்த தோல்வியில் இருந்து மீள்வது மிக அவசியம். நன்கு ஆராய்ந்து செய்த பிரச்சாரம் வெற்றியடையவில்லை என்றாலும் மனம் தளர்வதில் அர்த்தம் இல்லை. உங்கள் பிரச்சாரத்தை மாறுதலுக்கு உட்படுத்தும் அளவிற்கு வடிவமைப்பது சிறந்தது. தேவையான மாற்றத்தை உடனடியாக செய்து ஓரளவு அதை சரிசெய்ய முயற்சிக்கலாம். 


7. அடிப்படைகள்: உங்களின் மார்க்கெடிங் பிரச்சாரம், உங்கள் நிறுவனத்தில் அடிப்படை விஷயங்களை தெளிவாக விளக்குவதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் ஆன்லைனில் உங்கள் நிறுவனத்தை பற்றிய விவரங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகும். உங்கள் வருங்கால வாடிக்கையாளர்களை குறிவைத்து அவர்களை இணைத்து பங்கெடுக்கும் வகையில் பிரச்சாரம் அமைந்தால் சிறந்த பலனை அளிக்கும். 


8. நீண்டகால திட்டம் : உங்களின் பிரச்சாரம், குறைந்த நாட்களுக்கு மட்டும் மக்களிடம் சென்றடைவது போல் அல்லாமல் நீண்ட கால விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருப்பது நல்லது. இதற்காக கூடுதல் நேரத்தையும் பொருளையும் முதலீடு செய்ய தயங்காதீர். ஏனெனில் நீண்டகாலம் மக்கள் மனதில் இருக்கக்கூடிய பிரச்சாரங்கள் உங்கள் நிறுவனத்துக்கு நல்ல வளர்ச்சியை கொண்டுவரும். 

9. வரவேற்பு: உங்கள் மார்க்கெடிங் பிரச்சாரம் சந்தையில் எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது, மக்களிடம் வரவேற்பு உள்ளதா என்று தொடர்ந்து கண்காணியுங்கள். விழிப்புடன் இருப்பது அவசியம், மக்களின் கருத்துக்களை உடனடியாக கேட்டு தீர்வுகளை வழங்குங்கள். அப்போதே வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெறமுடியும். 

10. வருங்கால திட்டங்கள்: வருங்காலத்தை பற்றி சிந்திப்பது முக்கியம். அதே சமயம் கடந்த காலத்தில் நிகழ்ந்தை ஆராய்வது தேவையாக உள்ளது. உங்கள் யுக்திகளின் முடிவுகளை ஆராய்ந்து அதில் தேவையான மாற்றங்களை செய்து மேம்படுத்துவது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்து, விளம்பரங்களை பட்ஜெட்டுக்குள் வைப்பது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவன வளர்ச்சிக்கு நல்லது. நல்ல முடிவுகளை தரப்போகும் பிரச்சாரங்களுக்கு மட்டும் செலவிடுங்கள். அது உங்கள் நிறுவனத்துக்கு நல்ல பெயரையும் பிரபலத்தையும் ஏற்படுத்தும். 

(ஆங்கில கட்டுரையாளர்: பிரியங்கா ஷ்ராப். இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். யுவர்ஸ்டோரி இதற்கு பொறுப்பு ஏற்காது)