கனவை அடைவதில் உறுதியாக இருந்த ‘தி ஃப்ளோர் வொர்க்ஸ்’-ன் மீட்டா மஹசே

0

உங்கள் கனவு உணவகத்தைத் தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் தருணத்தில் நிதி பற்றாக்குறைக் காரணமாக உங்கள் கணவர் அந்த முடிவில் இருந்து பின் வாங்கினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? ஏமாற்றம்! அழுகை! உங்கள் கனவை இன்னொரு நாள் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்து விடுவீர்களா? பூனேவைச் சேர்ந்த 43 வயது பெண்மணி மீட்டா மஹசே இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். ஆரம்ப நிலை அதிர்ச்சியில் இருந்து மீண்டு, மனம் தளர்ந்து விடாமல் ஒரு முடிவெடுத்தார், காளையின் கொம்பை பிடித்துச் சுற்றாமல் தானே காளையை ஓட்டும் முடிவுக்கு வந்தார். நிதிக்காக மற்றவர்களை நம்பாமல் தன்னுடைய புத்திசாலித்தனத்தை புகுத்தி அனைத்தையும் ஒன்று திரட்டினார். வங்கியில் இருந்து தனிநபர் கடன் பெற்றார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து நிதியை திரட்டினார். தன்னுடைய கனவு உணவகத்தை தொடங்குவதற்கான பணியை நோக்கி பீடு நடைபோட்டதன் விளைவாக, இறுதியில் மீட்டாவின் ‘தி ஃப்ளோர் வொர்க்ஸ்’ (The Flour Works) வடிவம் பெற்றது.

புனேவில் பிறந்து வளர்ந்த மீட்டாவிற்கு உணவு மீதான ஆர்வம் அவரது திருமணத்திற்கு பிறகே ஏற்பட்டது. மீட்டாவின் கணவருக்கு சான் ஃபிரான்சிஸ்கோவில் பணி கிடைத்தது, அப்போது மீட்டா அங்கிருந்த கலிஃபோர்னியா கலினரி அகாடமியில் 18 மாத செஃப் பயிற்சி எடுத்துக் கொண்டார். அந்த படிப்பு அவரது சமையல் திறனிற்கு தூண்டுகோலாக அமைந்தது, அதைத் தொடர்ந்து 4.5 ஆண்டுகள் மீட்டா பணியாற்றினார். லெஸ் ஃபோலி, பிப்த் ஃப்ளோர் போன்ற உயர்தர உணவகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே சாக்லேட் தயாரிப்புப் பற்றிய பல வகைகளை பிரபல சாக்லேட் தயாரிப்பாளர் மைக்கேல் ரெச்சியூட்டியிடம் இருந்து மீட்டா கற்றுக் கொண்டார்.

உணவுத்துறையில் சில ஆண்டுகள் அனுபவத்தோடு இந்தியா திரும்பிய மீட்டா, பல உணவகங்களுக்கு ஆலோசனை வழங்கத் தொடங்கினார். தென்கிழக்கு ஆசிய உணவகமான மலாகா ஸ்பைஸ் மற்றும் புனேவில் உள்ள அனைத்து வகை உணவுகளை உள்ளடக்கிய போஸ்ட் 91, மும்பையின் மியா குசினா உள்ளிட்ட உணவகங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு மற்ற உணவகங்களை இணைக்கும் பாலமாகவும் செயல்பட்டு வருகிறார்.

“பல நேரங்களில் வாடிக்கையாளர்கள் தங்களின் நம்பிக்கையை முழுமைப்படுத்துவதில்லை. நேரில் பேசும்போது அனைத்தையும் பின்பற்றுவதாகச் சொல்லும் அவர்கள், நாம் இல்லாத போது பழைய வாடிக்கையை செய்கிறார்கள்” என்கிறார் மீட்டா.

2010க்கும் முன்பு வரை ஆலோசனை வழங்குவதைவிட தனது பணியான சமையலில் அதிக ஈடுபாட்டோடு இருந்தார் மீட்டா. ஒன்றரை வருடங்களாக இல்லத்திற்கான சிறப்பான இடம் தேடி அலைந்த மீட்டா, கடைசியில் காற்றோட்டமான உட்புற, வெளிப்புற இடவசதிகொண்ட கல்யாணி நகர் என்ற அற்புதமான பகுதியில் குடியேறினார். அவருடைய நண்பர் நிதிநிர்வாகத்தை கவனித்துக் கொள்ளவதென்றும், மீட்டா வியாபாரத்தை பார்த்துக் கொள்வதென்றும் ஒப்பந்தம்பேசிக் கொண்டனர். தொழில் நடத்த தேவையான திறமையை மீட்டா கற்றுக்கொண்டார். எதுவும் திட்டமிட்டு நடந்ததில்லை. கடைசி நேரத்தில் தனது கனவு திட்டமான கஃபே மற்றும் பேக்கரியை தொடங்கும் முடிவை நோக்கி முன்னேறினார். அவருடைய கஃபே மற்றும் பேக்கரியில் ருசியான கான்டினென்டல் உணவுகள் பரிமாறப்பட்டன.

சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க மற்றும் உணவக செயல்பாட்டு செலவுகளுக்கே அதிக நிதியை செலவு செய்துவிட்டதால் இந்த இளம் தொழில்முனைவருக்கு சந்தைப்படுத்துவதற்கு நிதி போதுமானதாக இல்லை. “தொடக்க நாளில் இருந்தே வாய்வழி விளம்பரங்கள் என்னுடைய கஃபேவிற்கு வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தந்தது. மக்கள் என்னைத் தொடர்பு கொண்டு கஃபே அமைந்திருக்கும் இடத்தை கேட்டறிந்து கொள்வார்கள், எங்களை அணுகும் மக்களை எங்கள் இடத்திற்கு கொண்டு வருவது ஒரு பிரச்னையாக இல்லை” என்று கூறுகிறார் மீட்டா. அவர் தொடர்ந்து பேசுகையில், 

“எங்களுடைய பணியாளர்கள் உணவகத்தின் வெற்றிக்காக அயராது பாடுபட்டனர். எங்கள் வாடிக்கையாளர்களில் 60 சதவிகிதத்தினர் மீண்டும் மீண்டும் வந்து செல்பவர்கள், எங்கள் உணவின் சுவைப் பிடிக்காத ஒரு சிலரே விடுபட்டனர். இருப்பினும் நாங்கள் நல்ல முறையில் உணவை சமைத்து பரிமாற வேண்டும் என்பதில் நாணயமாக இருந்தோம். ஐரோப்பிய உணவு வகைகள் பெரும்பாலும் உப்பு மற்றும் மிளகையே முக்கிய ஸ்பைஸாக கொண்டு இருக்கும்” என்கிறார் அவர். 

இந்த அனுபவங்கள் மீட்டாவிற்கு உணவுத் தத்துவ கொள்கையை உருவாக்க வழிவகுத்தது.

“ஒரு தொழிலை நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போது நீங்கள் செய்வதை அனைவரும் விரும்புவார்கள் என்று சொல்லமுடியாது, அப்படி எதிர்பார்ப்பது முறையும் அல்ல” என்று சொல்கிறார் மீட்டா. மற்ற தரமில்லாத உணவகங்களில் கிடைக்கும் உணவுகளின் விலையோடு தன்னுடைய கஃபே உணவு விலையை ஒப்பிட்டு பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு விலை பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டி இருந்தது. இது உண்மையில் மலையேறும் சவால் தான் என்பதை கண்டறிந்திருந்தார் மீட்டா. எனினும் “நான் என் வழியில் உறுதியாக இருந்தேன், நான் சமைத்து பரிமாறும் உணவில் கலப்படம் இருக்காது,” என்று உறுதிபடக் கூறுகிறார் மீட்டா.

உணவு மீதான இந்த நம்பிக்கை மீட்டாவின் தொழிலை படிப்படியாக கட்டமைக்க உதவியது. சுவை குறைந்த ரெசிப்பிகளை மாற்றுவதை விட தேவைக்கேற்ப மாற நினைத்தேன். வாடிக்கையாளர்களிடம் இருந்து பல்வேறு வரவேற்கத்தக்க கருத்துகள் வந்தன, நிதர்சனத்தோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தார் அவர். மீட்டா ஒரு பேக்கரி மற்றும் கஃபே தொடங்கி அவற்றில் ரொட்டி, சான்ட்விச்கள், சூப் மற்றும் சாலட்களை மட்டுமே பரிமாறிக் கொண்டிருந்தார், முக்கிய உணவு என ஒன்றுமே கிடையாது. 

“என்னுடைய அன்றாட வாடிக்கையாளர்களில் பலர், ஒரு செஃப் நீங்கள் ஏன் ஐந்து முக்கிய உணவுகளை அறிமுகம் செய்யக் கூடாது என்று வினவினர். அதனால் நாங்கள் ஐந்து முக்கிய உணவுகளை செய்ய முனைந்தோம். முன்பெல்லாம் வாடிக்கையாளர்கள் இங்கே வந்து அவர்கள் வேறு எங்கோ சாப்பிட்ட உணவு வகை இங்கே கிடைக்குமா? என்று கேட்பார்கள். அதில் ஒன்றிரண்டாவது கொடுங்கள் என்பார்கள். இப்படியே ஒன்றரை ஆண்டுகள் சென்ற நிலையில் நாங்கள் எங்களுடைய மெனுவில் முறையான முக்கிய வகை உணவுகளை அறிமுகம் செய்தோம்” என்று புன்னகைக்கிறார் மீட்டா. 

மற்றொரு சமயம் தன்னுடைய நண்பர் ஒருவர் லண்டனில் பேக்கரி ஒன்றில் தான் சுவைத்த லெமன் ரேஸ்ப்பெர்ரி கேக்கை தயாரித்து கொடுக்குமாறு மீட்டாவிடம் கோரிக்கை வைத்தார். மீட்டா இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அதை சுவைத்துப் பார்க்காமலேயே அதை தயாரிக்கத் தொடங்கினார். 

“என் நண்பர் லண்டனில் சுவைத்த கேக் போன்ற ஒன்றை உருவாக்க நாங்கள் ஒரு வாரகாலமாக பல்வேறு வகைகளில் கேக்கை தயார் செய்து இறுதியில் அதே சுவையைக் கொண்டு வந்துவிட்டோம். இப்போது லெமன் ரேஸ்ப்பெர்ரி எங்களுடைய மெனுவில் நிரந்தர இடம் பிடித்துவிட்டது” என்று பெருமையோடு விவரிக்கிறார் மீட்டா.

தீவிர செல்லப்பிராணி விரும்பியான மீட்டா, புனேவைச் சுற்றியுள்ள பல்வேறு செல்லப்பிராணி தொண்டு அமைப்புகளுடன் இணைந்து நீண்டகாலமாக பணியாற்றி வருகிறார். அவர்கள் மீட்டாவின் கஃபேவிற்கு வந்து மீதமுள்ள நல்ல உணவுகளைப் பெற்றுச் சென்று மற்றவர்களுக்கு விநியோகம் செய்வர். அந்தத் தருணத்தில் தான் அவருக்கு பிராணிகளுக்கு ஏற்ற ஒரு உணவகமான தி ஃப்ளோர் வொர்க்ஸை தொடங்கும் எண்ணம் உருவானது. “நாய்கள் அன்பின் அடையாளம் அவை தனிமையை உணர்வதாக எனக்குத் தோன்றியது. ஏனெனில் அவற்றை உரிமையாளர்கள் நாள் முழுவதும் வீட்டில் விட்டு சென்று விடுகின்றனர், பணி முடிந்து வீடு திரும்பினாலும் உண்டு மகிழ உணவகம் சென்றுவிடுகின்றனர். இதனால் அவை மீண்டும் வீட்டில் தனிமையில் ஏங்கிக் கிடக்கின்றன. 

அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனையோடு உணவகத்திற்கு வந்து செல்ல வழிவகை செய்ய முடிவெடுத்தேன். உரிமையாளர்கள் பிராணிகளின் கழுத்தில் சங்கிலியை போட்டு அவற்றை உணவு மேஜையின் காலில் கட்டி வைத்துவிட்டு விடலாம், பிராணிகள் நல்ல முறையில் நடந்த கொண்டன அவை சிறப்பான முறையில் மேற்பார்வையும் செய்யப்பட்டன.” என்கிறார் அவர். இந்தியாவில் உள்ள பல உணவகங்கள் பின்பற்ற வேண்டிய உதாரணம் இது.

சமூக ஊடகங்களில் உலா வரும் தி ஃப்ளோர் வொர்க்ஸ் வெற்றியின் நீண்ட உரையாடல்கள் அவரது வளர்ச்சியை பரைசாற்றுகிறது. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது கடந்த ஆண்டு முதல் மீட்டா இடம் வாங்குவதற்காக. தான் வாங்கிய கடனைத் திரும்ப செலுத்தத் தொடங்கி இருக்கிறார். தன்னுடைய வெற்றிக் கதையில் மேலும் சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் அவர் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் பணிகளிலும் முழுவீச்சில் இறங்கியுள்ளார். புனேவின் வனோவ்ரியில் அடுத்த கடையைத் திறக்கும் முனைப்பில் உள்ளார் அவர். “தி ஃப்ளோர் வொர்க்ஸின் உண்மையான திட்டமே புனேவை சுற்றி சிறிய அளவிலான பேக்கரிகளைத் தொடங்கி அவற்றை நகரின் மற்றொரு உணவகமாக்க வேண்டும். தற்சமயம் எங்களிடம் 6-8 பேக்கரிகளை தொடங்குவதற்கான திறன் இருக்கிறது, எனினும் மேலும் பல வகைகளில் செயல்படவும் நான் வியூகம் வகுத்துள்ளேன். அதாவது சுயமாக பேக்கரி நடத்த விரும்புபவர்கள் அல்லது கூட்டாண்மை முறையில் பேக்கரி நடத்த இடம் வைத்திருப்பவர்களோடு கைகோர்த்து எங்களின் உணவுப் பொருட்களை அவர்கள் இடத்தில் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்” என்று சொல்கிறார் மீட்டா மஹசே.

கட்டுரை: இந்திரஜித் டி.சௌத்ரி | தமிழில்: கஜலட்சுமி