ரியல் ஹீரோவுக்கு குவியும் பாராட்டுகள்... 

தனி ஒருவனாக செயின் பறிப்பு திருடனைத் துரத்திப் பிடித்த சென்னைச் சிறுவன்!

0

சென்னையில் பெண் மருத்துவரின் செயினைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடனைத் துரத்திப் பிடித்து, ரியல் ஹீரோவாக எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறான் சிறுவன் சூர்யா.

பெண்ணின் நகையைப் பறித்துக் கொண்டு ஓடும் திருடனை, ஹீரோ தனி ஆளாக அடித்து, அவன் கையில் இருக்கும் நகையை உரியவரிடம் ஒப்படைக்கும் காட்சியை எத்தனையோ திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நிஜத்தில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது அரிதிலும் அரிது. கண்ணுக்கு முன்னால் எத்தகைய அநீதி நடந்தாலும், அதற்கும் தனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பது போல் நடந்து கொள்வோர் தான் ஏராளம்.

சிலர் மட்டுமே அத்தகைய அநீதிகளைத் தட்டிக் கேட்க முன் வருவர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் சிறுவன் சூர்யா.

சென்னை அண்ணாநகரில் கிளீனிக் நடத்தி வருபவர் மகப்பேறு மருத்துவர் அமுதா (50). கடந்த செவ்வாயன்று இரவு கிளீனிக்கில் தனியாக இருந்த அமுதாவிடம், நோயாளியின் உறவினர் போல் நடித்து மர்மநபர் ஒருவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். அமுதாவின் கழுத்தில் இருந்த பத்து பவுன் செயினை அவர் பறித்துக் கொண்டு ஓடினார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அமுதா, ‘திருடன், திருடன்’ எனக் கூச்சலிட்டுள்ளார். இதனை அங்கு தெருவில் இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது கிளீனிக்கிற்கு எதிரே இருந்த கடையில் வேலை பார்த்து வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சூர்யா என்ற 15 வயது சிறுவன் திருடனைப் பிடிக்க துரத்தியுள்ளான். 

சிறிது தூரம் சென்றதும், துரத்தி வந்த சூர்யாவை அத்திருடன் கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டியுள்ளான். ஆனால், தன் உயிரைத் துச்சமென நினைத்து, திருடனை எப்படியும் பிடித்தே தீருவது எனப் போராடியுள்ளான் சூர்யா.

சூர்யாவிடம் இருந்து தப்பிக்க நினைத்த திருடன், கையில் இருந்த செயினில் பாதியை கீழே போட்டு, அவனை திசை திருப்ப முயற்சித்துள்ளான். ஆனால், சினிமா பாணியில் அதனை காலால் எடுத்து, திருடன் எதிர்பாராத நேரத்தில் அவனை அதிரடியாகத் தாக்கியுள்ளான் சூர்யா. இந்தத் தாக்குதலில் நிலை குலைந்த திருடனை, அக்கம்பக்கத்தார் உதவியுடன் சூர்யா போலீசில் ஒப்படைத்தான்.

போலீசாரின் விசாரணையில் திருடன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என தெரியவந்துள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சூர்யாவின் தீரச்செயல் குறித்து கேள்விப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அவனை நேரில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.  அப்போது பேசிய அவர்,

“திருடன், தன்னைவிடப் பெரியவராக இருந்தாலும், அவரைப் பிடிக்க முடியும் என்று எண்ணிய சிறுவனின் செயல் பாராட்டுக்குரியது. திருடன் தாக்க முயன்றபோதும், விரட்டிச்சென்று பிடித்த மனஉறுதி பாராட்டத்தக்கது.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் இத்தகைய குற்றங்களுக்கு எதிராகத் தைரியமாக முன்வர வேண்டும். அவ்வாறு தைரியமாகச் செயல்படுபவர்களுக்கு, காவல்துறை பக்கபலமாக இருக்கும். சென்னையில் நடைபெறும் மொபைல் பறிப்பு சம்பவங்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

காவல்துறை சார்பில் சூர்யாவின் மன தைரியத்தைப் பாராட்டும் வகையில் நிதியும் அளிக்கப்பட்டது.

சூர்யாவின் தந்தை நாராயணன் டெய்லராக உள்ளார். அம்மா எல்லம்மாள் குடும்பத்தலைவி. சூர்யாவுடன் பிறந்தோர் இரண்டு சகோதரிகள். அவர்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். குடும்பச் சூழல் காரணமாக ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய சூர்யா, தற்போது ஏ.சி. மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

சிறுவயதில் நண்பர்களுடன் விளையாடிய திருடன் போலீஸ் விளையாட்டு அனுபவத்தின் மூலமாகவே, சம்பவத்தன்று திருடனை துரத்திப் பிடிக்க முடிந்ததாகக் கூறுகிறான் சூர்யா. மருத்துவர் அமுதா அழுது கொண்டிருந்த போது, அங்கிருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். ஆனால், சூர்யா மட்டுமே மின்னல் வேகத்தில் செயல்பட்டு தனி ஒருவனாகப் போராடி திருடனைப் பிடித்துள்ளான்.

திருடனைப் பிடித்து செயினை மீட்க வேண்டும் என சந்து பொந்துகளில் எல்லாம் ஓடியுள்ளான் சூர்யா. இறுதியில் சூர்யாவின் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல், திருடன் மயங்கியுள்ளான். அப்போது செயினை எடுத்துக் கொண்டு, திருடனை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாமல், அருகில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி அவர் முகத்தில் தெளித்து உதவியும் செய்துள்ளான் சூர்யா.

வீரமாகச் செயல்பட்டு செயினை மீட்டதோடு, திருடனுக்கு தண்ணீர் கொடுத்து மனிதாபிமானத்தோடும் நடந்து கொண்ட சூர்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சினிமாவில் வருவது போல்,செயின் பறிப்பு, தனி ஒருவனாக போராடி அதனை மீட்ட சிறுவன், போலீசில் ஒப்படைக்கப்பட்ட திருடன் என அடுத்தடுத்து நடந்த பரபரப்புச் சம்பவங்களால் அப்பகுதி சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

Related Stories

Stories by jayachitra