அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று அசத்திய தமிழர்கள்!

0


இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பரப்பான சூழ்நிலை நிலவிவந்த நிலையில், அமெரிக்க தேர்தல் முடிவுகள் வந்து உலகையே திரும்பி பார்க்க வைத்தது. பலரும் எதிர்பார்க்காத விதத்தில் டொனால்ட் ட்ரம்ப் பெரும்பான்மை பெற்று அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றுள்ளார். இதைத்தவிர இந்திய வம்சாவளியை சேர்ந்த சிலர் பல மாகாணங்களில், வெற்றி அடைந்து இந்தியாவை பெருமைப்பட வைத்துள்ளனர்.  

இதில் அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் பின்புலத்தைக் கொண்ட மூன்று பேரை குறிப்பிட்டு சொல்லவேண்டி உள்ளது. 

சென்னையில் பிறந்த தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் இல்லிநாய்ஸ் மாநிலத்தில் போட்டியிட்டு பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார். 43 வயதான ராஜா கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர், வழக்கறிஞர் மற்றும் தொழில்முனைவர் என்ற பன்முகங்களை கொண்டவர். புதுடெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜா மூன்று மாத குழந்தையாக இருந்தபோது இவரது குடும்பத்தினர் நியுயார்க்கில் உள்ள பஃப்பலோ நகரத்துக்கு குடிபெயர்ந்தனர். அந்த வகையில் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெறும் 2-வது தமிழர் இவர் ஆவார். 

அடுத்து, திருமதி.கமலா ஹாரிஸ் என்ற பெண்மணி செனெட்டராக ஆகியுள்ள முதல் (பாதி) தமிழர். அமெரிக்க பார்லிமெண்ட் தேர்தலில், ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமெரிக்க செனெட் சபைக்குள் நுழையும் முதல் இந்தியர் ஆவார். கலிபோர்னியா ஓக்லாண்டை சேர்ந்த இவர், இந்திய-அமெரிக்கரான டாக்டர்.ஷ்யாமளா கோபாலனுக்கு மகளாக பிறந்தார். மார்பக புற்றுநோய் மருத்துவரான ஷ்யாமளா, சென்னையில் இருந்து 1960 இல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். கமலாவின் தாத்தா டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்கன் -அமெரிக்கன் ஆவார். இவர் ஸ்டான்பர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருந்துள்ளார். 

பிரமிளா ஜெயபால், இந்தியாவில் பிறந்து, இந்தோனேசியா, சிங்கப்பூரில் வளர்ந்து, பின் அமெரிக்காவுக்கு 1982 இல் சென்றவர். அப்போது அவருக்கு வயது 16, கல்லூரியில் சேர்ந்தார். ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் பட்டம் முடித்த இவர், எம்பிஏ முதுகலை பட்டத்தை நார்த்வெஸ்டர்ன் பல்கலைகழகத்தில் முடித்துள்ளார். 

அமெரிக்க பார்லிமெண்ட் கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்கு, சியாட்டில் பகுதியில் போட்டியிட்ட பிரமிளாவுக்கு 51 வயது ஆகிறது. அமெரிக்க பார்லிமெண்ட் சபையின் எம்.பி. ஆகியுள்ள முதல் இந்திய பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.