உணவு வணிகத்தில் வெற்றியின் ருசி தெரியும்!

1

நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுதான் நாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவது நிச்சயம் பாராட்ட வேண்டிய ஒரு பணி. லீலா குரூப்பைச் சேர்ந்த ஐஸ்வர்யா நாயர் "அமாய்" (AMAI food brand) எனும் பெயரில் ஆரோக்கிய மற்றும் தரமான உணவுப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் இறங்கினார். யுவர் ஸ்டோரியிடம் பேசும் போது, எது அவரை இந்தத் தொழிலுக்கு இழுத்து வந்தது? என்றும் சவால்களின் ஊடாக அவர் எப்படி வெற்றி அடைந்தார்? என்பது பற்றியும் விளக்குகிறார். வெற்றியை அவர் எப்படிக் கட்டமைத்தார் என்றும் இந்தியாவில் பெண் தொழில்முனைவராக செயல்படுவது பற்றியும் அவர் நம்மிடம் விவரிக்கிறார். அவரது குடும்பத்தினர் அவருக்கு அளித்த ஆதரவும், அவரது உறுதிப்பாடும்தான் அவரது வெற்றிக்குக் காரணம்.

இப்படித்தான் தொடங்கியது

வித்தியாசமாகவும், தனித்தன்மையுடனும் நான் எதைச் செய்தாலும் அது என்னை மிகப்பெரிய இடத்திற்குக் கூட்டிச் சென்று விடுகிறது. இப்போது என்ன புது ட்ரென்ட் என்று தெரிந்து கொள்வதை விட, ஒரு புது ட்ரென்ட்டை உருவாக்குபவராக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்தியாவில் இப்போதெல்லாம் ஃபாஸ்ட்புட்டையும், பதப்படுத்தப்பட்ட பொருட்களையும் நம்பித்தான் நாம் இருக்கிறோம். அப்படிப் பார்க்கையில் அமாய் உண்மையில் ஒரு புரட்சிகரமானது என்று சொல்லலாம்.

ஹோட்டல் தொழில் எங்களது பாரம்பரியத் தொழில். தி லீலா குரூப் ஆப் ஹோட்டல்ஸ் எங்களுடையதுதான். இதுதான் நான் இந்த விருந்தோம்பல் தொழிலில் நுழைவதற்குக் காரணம். இதைத் தேர்வு செய்ய அப்பாவும் தாத்தாவும் என்னை உற்சாகப்படுத்தினர். எனது தேர்வும் இதுவாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் உயர்நிலைப் படிப்பை முடித்ததும், போட்டோகிராபர் ஆகவேண்டும், சினிமா இயக்குனராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால் அப்பா என்னை சமையல் கலையை தேர்வு செய்யச் சொன்னார். என் தாத்தா கேப்டன் கிருஷ்ணன் நாயரும் இந்தத் துறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் நிறைய ஏற்படுத்தினார். அவரது உற்சாகம்தான் அவரை இயக்கியது. பார்க்கும் எவரையும் உடனடியாக உற்சாகப்படுத்திவிடுவார். பாராட்டத்தக்க பணி நெறிமுறைகளையும், புத்திசாலித்தமான நவீன மனநிலையும் கொண்டிருந்தவர் அவர். அவரது இந்த இரண்டு ஆளுமையும் எனக்குள் தாக்கத்தைச் செலுத்தின. அன்றாட வேலைகளைத் திட்டமிடுவது, விதவிதமான மனிதர்களுடன் சுமூகமாக பணியாற்றுவது போன்ற திறன்களை அந்தத் தாக்கம்தான் எனக்குள் வளர்த்தது. இது எனது பணிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

தரம்தான் முதலில்.. வேறு எதுவும் முக்கியமல்லை

தரமான சாப்பாடு மட்டுமே, அமாய் பிறந்ததன் முக்கியமான காரணம். அமாய் என்றால் ஜப்பான் மொழியில் இனிமையான அனுபவம் என்று அர்த்தம். ஜப்பானின் எளிமை மற்றும் தானிய உணவுப் பழக்கத்தில் இருந்த எடுக்கப்பட்டது அது. அவர்கள் உணவில் சேர்க்கப்படும் சேர்மானங்களை முடிந்தவரையில் பதப்படுத்தாமல் இயற்கையாகவே பயன்படுத்துவார்கள். அது செரிமானத்திற்கு உதவும். அதன் முதன்மையான நோக்கம் செயற்கையாக சுத்திகரிக்கப்படும் சர்க்கரை மற்றும் கோதுமைப் பொருட்களைத் தவிர்ப்பது. இந்த வகை சாப்பாடு இந்தியாவிற்கு மிகவும் புதிது. நான் அமாயில் வைத்திருப்பதைப் போன்ற ஒரு பரிபூரண உணவை வேறு எந்த ஓட்டல் குழுமமும் வைத்திருக்கவில்லை.

ஆனால் உயர்தரமான உணவை கொடுப்பது என்பது எளிதானதல்ல. குறிப்பாக உணவு மற்றும் மருந்துகளுக்கான தேவைகள் மாறிக் கொண்டே இருப்பதால் அவற்றின் இறக்குமதியும் தொடர்ச்சியாக இருக்காது. எனவே நான் தயாரிக்கும் உணவும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆரம்பத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. நான் தயாரிக்கும் உணவில் சேர்க்கப்படும் சேர்மானங்கள் எளிதில் கிடைக்காதவை. ஆனால் எந்த விளையாட்டாக இருந்தாலும் சவால் இருப்பதும், அதை வெற்றி கொள்வதும் ஒரு உற்சாகமூட்டும் விதி அல்லவா..

வெற்றியும், நன்றியும்

உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என நீங்கள் தெரிந்திருப்பது நல்லது. இதன் மூலம் அவர்களைக் கவரும் விதத்தில் வியாபாரத் திட்டங்களை உருவாக்கவும் உங்கள் தயாரிப்பை மேலும் தரப்படுத்தவும் அது உதவும். அதற்கு பதில் உங்கள் தயாரிப்பின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு பாராட்டுகிறார்கள். ஒரு ஆடம்பர ஓட்டல் குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான தயாரிப்புதான் அமாய். இது எனது வாடிக்கையாளர் சந்தையை பெரும்பான்மை நுகர்வுப் பொருட்களில் இருந்து சிறிது வேறுபடுத்துகிறது. அமாயில் வாங்கும் வாடிக்கையாளர்களை எனக்குத் தெரியும். அவர்கள் குளூட்டான் ஃபிரி டயட்டுக்கு பழக்கமானவர்கள். மிசோ(miso), சோயா தொக்கு மற்றும் இது போன்ற ஜப்பானிய கலாச்சார உணவுகளோடு அறிமுகமானவர்கள். ஆரோக்கியமான உணவு வழங்குவது வாடிக்கையாளருக்கும் தயாரிப்பாளருக்கும் திருப்தி அளிக்கிறது என்பது பொதுவான அறிவு.

இது போன்ற தயாரிப்புகளுக்கு இந்தியாவில் இப்போது நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது எனது நம்பிக்கை. அமாய், தொடங்கிய புதிதில், பல நிறுவனங்கள் எங்கள் தயாரிப்புகளை காப்பி அடித்தது, சிலவற்றைப் புதிய வார்த்தைகளில் பெயர் மாற்றம் தந்து சந்தையில் விற்றனர். ஆனால் எங்களது தனித்துவ செய்முறை மற்றும் தனி முத்திரை பிராண்டு எங்களை அவர்களிடமிருந்து, மக்களிடம் தனித்து காட்டியது. இந்தத் தொழிலில் உள்ள சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடவும் அவர்களால் முடியாது அந்த இடைவெளியை நிரப்ப நவீன சிந்தனை தேவைப்பட்டது. லீலா விருந்தோம்பல் குழுமத்தில் அமாய் ஒரு தனிக்கவிதை என்று நினைக்கிறேன். எனது பங்களிப்பு மூன்றாம் தலைமுறைக்கானது. நாம் வாழும் காலத்திற்கு ஏற்றார்போல வடிவமைக்கப்படுவது. எனது தந்தை மற்றும் தாத்தா எனது தொழில் செய்யும் திறனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்வதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது.

பெண் தொழில்முனைவர்

எனது கதை இந்தியாவில் உள்ள நிறையப் பெண்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களை சொந்தமாக தொழில் தொடங்கச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன் வேறு சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக நம்பிக்கை வளர்ப்பது, சொந்தமாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு அடிப்படை அதுதான். (பெண்களின்) பாதுகாப்புப் பிரச்சனையைக் கையாள இதில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.


அமாயில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான். விற்பனையாளர் பகுதியோ அல்லது சமையலறைப் பக்கமோ இளம் பெண்களுடன் தான் தொடங்கினேன். அவர்கள் தங்களது வேலையில் காட்டிய ஆர்வம் எனக்கு ஒரு நேர்மறை எண்ணத்தைக் கொடுத்தது. அவர்களுக்கு அளிக்கும் முறையான பயிற்சி, எனது நோக்கத்தை நிறைவேற்றவும், எனது தயாரிப்பின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் உதவியது. பெண்களை ஊக்கப்படுத்த வேண்டியுள்ளது. அவர்களின் கனவுகளை நனவாக்க அவர்களை ஊக்குவித்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

முடிவாக, என்னை மிகவும் கவர்ந்த இந்த வரிகளை இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண் தொழில்முனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். "நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை உருவாக்குகிறீர்கள். நீங்கள் என்ன உணர்கிறீர்களோ.. அதைக் கவர்கிறீர்கள்.. நீங்கள் எப்படி உங்களைக் கற்பனை செய்து கொள்கிறீர்களோ அப்படியே மாறுகிறீர்கள்.”