தமிழகத்தில் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி ஆலை பற்றி தெரியுமா உங்களுக்கு?

0

உலகம் முழுதும் மாசு பிரச்சனை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றி தலைப்புச் செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், அதற்கு மாறான நல்ல ஒரு செய்தியும் வந்துள்ளது. தமிழ்நாட்டில், ’கமுதி சோலார் திட்டம்’ அண்மையில் முடிக்கப்பட்டதே அந்த நல்ல சேதியாகும். இது, தற்போது சோலார் மின்சக்தி உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய கூடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பட உதவி: National Geographic
பட உதவி: National Geographic

கமுதி சோலார் கூடம், சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில், அதாவது 476 கால்பந்து மைதானத்துக்கு சமமான இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. 648 மெகாவாட் தூய்மையான, பசுமை சக்தியை உற்பத்தி செய்து சுமார் ஒன்றரை லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கும் அளவிற்கு இதனால் முடியும். இந்த ப்ளாண்டின் கட்டுமான பணியின் செலவு சுமார் 4,500 கோடி என்று சொல்லப்பட்டுள்ளது. 

இந்த சோலார் கூடத்தில் கிட்டத்தட்ட 25 லட்சம் தனி சோலார் பானல்கள் உள்ளன. இவை தினமும் ரோபோக்களின் உதவியுடன் சுத்தம் செய்யப்படுகிறது. பின் அவை சூரிய ஒளியில் சார்ஜ் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. 

கமுதி சோலார் திட்டம், அதானி பவர் குழுமத்தால் கட்டப்பட்டுள்ளது. இதை முடிக்க அவர்கள் எட்டு மாதங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இது உலகின் மிகப்பெரிய சோலார் ப்ளாண்டாக அறியப்படுகிறது. இதற்கு முன் கலிபோர்னியாவில் உள்ள டோபாஸ் சோலார் பார்ம், உலகின் பெரிய சோலார் மையமாக இடம் வகித்திருந்தது. இது 550 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்துவந்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டது. 

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இது குறித்து நியூஸ் வீக் பேட்டியில்,

“நாட்டின் வளர்ச்சியில் எங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், 11,000 மெகாவாட் சோலார் மின்சக்தியை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் இந்தியாவை, மாற்று சக்தி உற்பத்தி பட்டியலில் முதலிடத்தில் கொண்டுவருவதே எங்கள் இலக்காகும்,” என்று கூறியுள்ளார். 

கட்டுரை: Think Change India