'தகவல் திங்கள்': ரெஸ்யூமின் சரியான நீளம் என்ன?

0

ஒரு ரெஸ்யூம் ஒரு பக்கம் கொண்டதாக மட்டும் இருக்க வேண்டுமா?

இந்த கேள்வி உங்களை வியப்பில் ஆழ்த்துகிறதா? யோசிக்க வைக்கிறதா? கேள்வி பதில் சேவையான குவோராவில் வெளியான எத்தனையோ ஆயிரம் கேள்விகளில் இதுவும் ஒன்று. குவோரா கலாச்சார படி இதற்கான துணை கேள்விகளும் பல இருக்கின்றன. ’எது சிறந்தது. ஒரு பக்க ரெஸ்யுமா? அல்லது இரண்டு பக்க ரெஸ்யுமா?’

இன்னொரு கேள்வியை பார்ப்போமா? ’ஒரு பக்க ரெஸ்யூம் விதி ஏன் முக்கியமானது?’ தொடர்புடைய மற்றொரு கேள்வி, ’உங்கள் ரெஸ்யூம் இனியும் ஒரு பக்கத்திற்குள் அடங்காமல் போனால் என்ன செய்வது?’

“ ஒரு ரெஸ்யூம் எப்போது இரண்டு பக்கங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்?”

’மூன்று பக்க ரெஸ்யூம் மிகவும் நீளமானதா?’.

எது சிறந்தது? ஒரு பக்க ரெஸ்யூமா? இரண்டு பக்க ரெஸ்யூமா?

இந்த விவாத சரட்டில் இப்படி கேள்விகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. எல்லாமே ரெஸ்யூமின் நீளம் பற்றியவை. பலவிதமாக அமைந்துள்ள இந்த கேள்விகளின் பொதுத்தன்மை ஒரு ரெஸ்யூமின் சரியான அளவு எது என்பது தான்!

வேலைவாய்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இந்த கேள்விகளுக்கான பதில்களை குவோராவில் படித்துப்பார்க்க வேண்டும். வேலை தேடாதவர்களும் கூட இந்த பதில்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அடிப்படையில் இந்த கேள்விகளின் சாராம்சம் ஒருவர் தன்னையும், தனது திறன்களையும் எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்பது தான்!

ரெஸ்யூம் இதைத் தானே செய்கிறது. வேலை வாய்ப்பு கோரும் போது, அந்த வாய்ப்பிற்காக பரிசீலிக்கப்பட, தான் தகுதியான நபர் என்பதை உணர்த்தும் வகையில் தானே ரெஸ்யூம்கள் தயாரிக்கப்படுகின்றன. எனில், வேலைக்கு பொருத்தமானவர் என்பதை நேர்முகத்தேர்வாளருக்கு சரியாக உணர்த்தக்கூடிய கச்சிதமான ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்?

இந்த கேள்விக்கு பலவிதமான பதில்கள் இருக்கின்றன. வேலைவாய்ப்பு வல்லுனர்கள் இது தொடர்பாக எழுதிய நல்ல புத்தகங்களே நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. ரெஸ்யூமில் எவற்றை எல்லாம் குறிப்பிட வேண்டும், எந்த அம்சங்களை தவறாமல் இடம் பெற வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆயிரக்கணக்கில் குறிப்புகள் இருக்கின்றன.

அவை பற்றி எல்லாம் ஆய்வு செய்வது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்த அம்சங்களை எல்லாம் சக்கையாக்கி சாறு பிழிந்தது போல சொல்லப்படும் ஒரு விஷயத்தை மட்டும் பார்ப்போம்- ஒரு பக்க விஷயம் அது. அதாவது ஒரு நல்ல ரெஸ்யூம் ஒரு பக்கம் மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும் என்பது தான்!

ரெஸ்யூமில் எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும், பக்கம் பக்கமாக ரெஸ்யூம் தயார் செய்யும் பழக்கம் கொண்டவர்களுக்கும் இந்த கருத்தை படிக்கும் போது பகீர் என்று இருக்கும். ஆனால் அந்த அதிர்ச்சியை எல்லாம் ஒதுக்கிவிட்டு, கெய்லே லாக்மன் மெக்டோவல் (Gayle Laakmann McDowell) சொல்வதைக் கேட்க வேண்டும்.

”நீங்கள் உங்கள் முழு வாழ்க்கையையும் ஒரு பக்கத்தில் இடம்பெறச்செய்வதில்லை. ஒரு பக்கத்திற்கு தகுதியானவற்றை மட்டுமே ஒரு பக்கத்தில் தருகிறீர்கள்’ என்கிறார் மெக்டவல்.

வேலைவாய்ப்பு ஆலோசகர்-வல்லுனரான மெக்டவல், வேலைவாய்ப்பு நேர்காணலுக்கு வழிகாட்டும் 'கிரேக்கிங் தி இண்டர்வியூ' புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். அது மட்டும் அல்ல, குவோரா தளத்தில் ரெஸ்யூம் எழுதுதல் எனும் பிரிவில் அவரது பதில் தான் அதிகம் வாசிக்கப்பட்டதாக இருக்கிறது.

அநேகமாக எல்லாமே ஒரு பக்க ரெஸ்யூமின் மகத்துவம் பற்றி எடுத்துரைப்பவை. இந்த கேள்விகளில் ஒன்று தான், ‘ஒரு பக்க ரெஸ்யூம் மூலம் நேர்முகத்தேர்வு வாய்ப்பை பெறுவது எப்படி? என்பது. இதற்கான பதிலின் துவக்கத்தை தான் மேலே பார்த்தோம். இதில் உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தை போக்கக் கூடிய வகையில் அவரே , ”ரெஸ்யூமை ஒரு பக்கமாக சுருக்குவது விண்ணப்பிப்பவரை பலவீனமாக்குவதற்கு பதில் வலுப்பெற வைக்கும்” என்று குறிப்பிடுகிறார்.

வேலைக்கு பொருத்தமானவர்களை அமர்த்திக்கொள்பவர்கள் ஒருவரிடம் மூன்று பக்கங்களுக்கு நிரப்பும் அளவுக்கு விஷயங்கள் இருப்பதை பார்த்து எல்லாம் கவரப்படுவதில்லை, சிறப்பான திறன்களில் கவனம் செலுத்துவது மூலம் மட்டுமே கவர முடியும் என்றும் அவரது பதில் தொடர்கிறது.

ரெஸ்யூமை உருவாக்கும் போது, ஒவ்வொரு வரி உண்டாக்கக் கூடிய மதிப்பு குறித்து கவனமாக யோசிக்க வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். இதன் பொருள் முக்கியம் இல்லாதவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு, ஒருவர் பணிக்கான தனது சிறந்த திறனாக கருதும் விஷயங்களை மட்டும் குறிப்பிட்டால் போதும் என்பது தான்.

ரெஸ்யூமில் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறோமா? எதையாவது விட்டுவிட்டோமா? என நினைத்து பதற்றம் அடைபவர்களுக்கு இந்த பதில் ஆசுவாசத்தையும் ஆறுதலையும் அளிக்கும். ஒரு பக்கத்தில் நம்மைப்பற்றி சொல்ல வேண்டும் என வைத்துக்கொள்ளுங்கள். அதற்குள் சொல்ல வேண்டிவற்றை வரிசைப்படுத்துங்கள். நல்ல ரெஸ்யூம் தயார். நம்பிக்கையுடன் நேர்முகத்தேர்வுக்கு செல்லுங்கள்.

நிற்க! குவோரா தளத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று, கேள்விக்கான பதிலை ஒட்டி வெளியாகும் இணை பதில்கள். இதே கேள்விக்கு மேலும் பலர் பதில் அளித்துள்ளனர். ரிக்கார்டோ விலாதிமீர் என்பவர் , ’பொருத்தமான விவரங்களை மட்டுமே இடம்பெற வைப்பதன் மூலம் ஒரு பக்க ரெஸ்யூமை உருவாக்கலாம் என்று கூறியிருக்கிறார். ’உங்கள் தகுதி மற்றும் திறன்களை பாரபட்சமில்லாமல் குறிப்பிடுங்கள் போதும்” என்கிறார் சே கெங் லீ என்பவர். இன்னும் பல பதில்கள் இருக்கின்றன.

இந்த கேள்விக்கான துணைக்கேள்விகள் ரெஸ்யூமில் நீள அளவின் முக்கியத்துவம் பற்றி வெவேறு விதமாக வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. விதி விலக்காக இரண்டு பக்க ரெஸ்யூம் தயாரிக்கும் நிலை வரலாம் என்பது போலவும் பதில்கள் அமைந்துள்ளன. எந்த தருணங்களில் எல்லாம் விதிவிலக்காகக் கருதி ஒரு பக்கத்திற்கு மேல் உள்ள ரெஸ்யூமை தயாரிக்கலாம் என்றும் வல்லுனர்கள் விளக்கியுள்ளனர். ஆனால், பெரும்பாலான நேரங்களில் குறிப்பாக இப்போது தான் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பக்க ரெஸ்யூம் தான் சிறந்த வழி என்று தோன்றுகிறது.

ஒரு பக்க ரெஸ்யூமின் பொன்விதிகள் பற்றி விளக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவற்றின் சாரம்சங்களை எல்லாம் குவோரா கேள்வி பதில் பக்கத்தில் படித்துவிடலாம். நீங்களும் முயற்சித்துப்பாருங்கள்.; 

அதற்கு முன்னர் , டிசைன் டாக்சி தளத்தின் இந்த இரத்தின சுருக்கமான விளக்கத்தையும் படித்து விடுங்கள்; இந்த பக்கத்தில் இருந்து தான் இந்த கட்டுரைக்கான கருப்பொருளே கிடைத்தது. 

அப்படியே ஒரு பக்க ரெஸ்யூம்களை தயாரிக்க உதவும் இந்த தளத்திற்கும் ஒரு முறை சென்று பாருங்கள். சும்மாயில்லை ரெஸ்யூம்களை இணையதளமாகவே அமைத்துக்கொள்ள வழி காட்டுகிறது இந்த தளம்: 

எல்லாம் சரி, உங்கள் அபிப்ராயத்தில் சிறந்த ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு பக்க ரெஸ்யூம் ஐடியாவை உங்களிடம் ஐடியா கேட்பவர்களுக்கு பரிந்துரை செய்வீர்களா? உங்கள் கருத்து என்ன?

தகவல் திங்கள் தொடரும்... 

முந்தைய பதிவுகள்:

தகவல் திங்கள்: ஊழியர்கள் பார்வையில் ஸ்டார்ட் அப் கதைகள்!

விளம்பரம் இல்லா உலகம் எது?