வருங்கால வைப்பு நிதி கோரிக்கை படிவம் ஒரு பக்க ஒன்றிணைக்கப்பட்ட படிவமாக அறிமுகம்!

1

தனது பல சேவைகளை, பயனீட்டாளர்களுக்கு திறமையாகவும் மற்றும் வெளிப்படை தன்மையாகவும் கிடைக்கப்பெறவேண்டிய நோக்கத்தில், வருங்கால வைப்பு நிதி நிறுவனம் யுனிவர்சல் அக்கௌன்ட் நம்பரை (UAN) அறிமுகப்படுத்தியுள்ளது. உறுப்பினர்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு தகவல்களை UAN வாயிலில் பதிவு செய்து இருப்பின், அவர்கள் தங்களது கோரிக்கை படிவங்களை நிறுவனதரர்களின் சான்றொப்பம் இல்லாமல், படிவம்-19 (UAN), படிவம்-10C (UAN) & படிவம்-31 (UAN) மூலம் சமர்ப்பிக்கலாம்.

உறுப்பினர்களின் வசதிக்காக, மேற்கூறிய படிவங்கள் மேலும் எளிமைபடுத்தப்பட்டு, மாற்றாக ஒரு பக்க ஒன்றிணைக்கப்பட்ட கோரிக்கை படிவம் (ஆதார்) என மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ஒன்றிணைக்கப்பட்ட கோரிக்கை படிவம் (ஆதார்), நிறுவனதரர்களின் சான்றொப்பம் இல்லாமல் சமர்பிக்கப்படக்கூடியது.

ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு தகவல்களை UAN வாயிலில் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்காக புதிய ஒன்றிணைக்கப்பட்ட கோரிக்கை படிவம் (ஆதார் இல்லாதது) அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இது படிவம்-19, படிவம்-10C & படிவம்-31 ஆகியவற்றுக்கு மாற்றாக அமையும். புதிய ஒருபக்க ஒன்றிணைக்கப்பட்ட கோரிக்கை படிவம் (ஆதார் இல்லாதது) நிறுவனதரர்களின் சான்றொப்பத்துடன் சமர்பிக்கப்படக்கூடியது.

சுய சான்றிதழ் சமர்பித்தல் தற்போது நடைமுறையிலிருக்கும் பலதரப்பட்ட சான்றிதழ்கள் சமர்பித்தலை மாற்றி அமைத்துள்ளது. ஒன்றிணைக்கப்பட்ட கோரிக்கை படிவம் (ஆதார்) / ஒன்றிணைக்கப்பட்ட கோரிக்கை படிவம் (ஆதார் இல்லாதது) ஆகியவை தற்போது சுய சான்றிதழோடு அமைக்கப்பட்டுள்ளது. வைப்பு நிதியிலிருந்து முன் பணம் பெற கீழ்கண்ட சட்டங்கள் நடைமுறையிலுள்ளன.

பத்தி 68B: இதுவரை, வீடு கட்ட நிலம் வாங்க / வீடு வாங்க / அடுக்கு மாடி குடியிருப்பு வாங்க / இருக்கும் வீட்டில் கூட்டலோ மாற்றமோ செய்ய / வீடு கட்ட வாங்கிய முன் பணத்தை திருப்பி செலுத்தவோ சமர்பிக்கும் படிவம்-31 றுடன் இணைக்கப்பட்டு வந்த “புதிய டிக்லரேசன் படிவம்” சமர்பிக்கும் முறை கைவிடப்படுகிறது. மேலும் “பயன்பாடு சான்றிதழ்” சமர்ப்பிக்கும் முறையும் நிறுத்தப்படுகிறது. இந்த முன் பணம் கோருதல் சம்பந்தமாக, உறுப்பினர்கள் எந்த நகல்களையும் சமர்பிக்கத் தேவையில்லை.

பத்தி 68H: தொழிற்சாலை/நிறுவனம் மூடப்பட்டுள்ளது/ கதவடைக்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக கோரப்படும் முன் பணம் சம்பந்தமாக, உறுப்பினர்கள் எந்த நகல்களையும் சமர்பிக்கத் தேவையில்லை.

பத்தி 68K: உறுப்பினரின் திருமணம் / உறுப்பினரின் மகன் / மகள் / சகோதரன் / சகோதரியின் திருமணம் / பிள்ளைகளின் கல்லூரி படிப்பிற்கான காரணத்திற்காக கோரப்படும் முன் பணம் சம்பந்தமாக, உறுப்பினர்கள் எந்த நகல்களையும் (திருமண அழைப்பிதழ் உள்பட) சமர்ப்பிக்கத் தேவையில்லை.

பத்தி 68L: இயற்கை பேரிடர் காரணத்திற்காக கோரப்படும் முன் பணம் சம்பந்தமாக, உறுப்பினர் தனது பொருட்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சேதத்தை சுய சான்றிதழ் அளித்தால் போதுமானது. எந்த நகல்களையும் சமர்பிக்கத் தேவையில்லை.

மேற்கூறிய முன் பணம் பெறுவதற்கு, உறுப்பினரால் கையொப்பமிடப்பட்டு சமர்பிக்கப்பட்ட ஒன்றிணைக்கப்பட்ட கோரிக்கை படிவம் (ஆதார்) / ஒன்றிணைக்கப்பட்ட கோரிக்கை படிவம் (ஆதார் இல்லாதது) ஆகியவை சுய சான்றிதழாக கருதப்படும். வேறு எந்த நகல்களும் வருங்கால வைப்புநிதி நிறுவனத்திற்கு சமர்பிக்கத் தேவையில்லை.

இது சம்பந்தமாக விரிவான வழிகாட்டுதல் மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட கோரிக்கை படிவம் (ஆதார்) / ஒன்றிணைக்கப்பட்ட கோரிக்கை படிவம் (ஆதார் இல்லாதது) ஆகியவற்றின் வடிவங்களும் கீழ்கண்ட இணையதள முகவரியில் அணுகப்பெறலாம்: http://www.epfindia.gov.in/site_docs/PDFs/Circulars/Y2016-2017/Composite_Claim_Forms_31792.pdf