கூரையில் இருந்து கோபுரம் அடைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் கதை!

0

ஒரு சாதனையாளராக பாராட்டவேண்டுமெனில், அவரது பின்னுள்ள பெருங்கதையை அறிவது அவசியம். வெற்றி பெருவது அல்லது தோல்வி அடைவது முக்கியமில்லை. ஒருவரது கடின உழைப்பு, சந்தித்த சவால்கள், அந்த வலிகளை அவர் தாங்கிக் கொண்டு தொடர்ந்த பயணம், எதையும் கண்டு அஞ்சாது தகர்தெரிந்த வழிகள் இவைகளே ஒருவரது சாதனையை விளக்குகிறது. பெரும்பாலும் மக்கள் அதிகமாக யோசித்து, சில சவால்களை கண்டு பயந்துவிடுகின்றனர்.

கடுமையாக உழைக்க ஊக்கத்தை பெறுவது மிக கடினமான விஷயம். நம்மில் பலரும் பாதியிலேயே தோல்வியை ஒப்புக்கொண்டு செய்வதை கைவிட்டுவிடுவோம். ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருப்பார்கள். இந்த ஒருசிலர் தான் எவரும் அடையமுடியாத, அசாத்தியம் என்று பலரால் நினைக்கப்படும் உயரிய இடத்தை பிடிக்கமுடிகிறது.

ஆம் ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பில்லியனில் ஒருவர் என்றே சொல்லலாம். இத்தனை பேரும் புகழும் சேர்ந்தும் தன்னடக்கத்தின் உருவாய், தன் லட்சக்கணக்கான ரசிகர்களை இன்றளவும் உற்சாகத்தில் ஆழ்த்தும் இந்த மாமேதை, எல்லாரையும் போலல்லாமல் தன் கடும் உழைப்பால் இந்நிலையை அடைந்தவர். இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்த்து, கணக்கில்லா வெற்றிகளை விருதுகளை குவித்தவர். இதற்கெல்லாம் பின்னால் அவரது குடும்பக் கஷ்டமும், தந்தையின் இறப்பிற்கு பின் அவர்கள் சந்தித்த மோசமான நிலையுமே அவருக்கு உந்துதலாக இருந்துள்ளது. 

ரஹ்மான், ஆர்.கே.சேகர் என்ற அந்த காலத்து மலையாள திரைப்படங்களில் பணிபுரிந்த இசைக்கலைஞரின் மகன் ஆவார். ஆர்.கே.சேகர், 60-70’களில் பிரபல பெயராக இருந்தவர். கஸ்தூரி என்ற பெண்ணை திருப்பதி கோவிலில் மணந்தார் சேகர். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் மகனான ஏ.எஸ்.திலீப் குமார் தந்தை சேகருடன் இசையமைப்புக் கூடத்துக்கு செல்வது வழக்கம். நான்கு வயதிருந்த போதே திலீப், கீபோர்ட் வாசிக்கத் தொடங்கினார். ரஹ்மான் என்று இன்று எல்லாராலும் அழைக்கப்படும் திலீப்குமார், கீபோர்டில் வித்தியாச ட்யூன்களை சிறுவயதிலிருந்தே வாசித்து பழகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஹ்மான தனது சகோதரிகளுடன் தாத்தா பாட்டியுடன் கூட்டுக்குடும்பாக வளர்ந்தார். ரஹ்மானின் தந்தை பணியில் தீவிரமாக உழைத்து ஒரு நாளில் பல இடங்களில் வேலை செய்தார். அப்போது திடீரென பேரிடியாய், ரஹ்மான் 9 வயதாக இருந்தபோது அவரது தந்தை சேகர், இறந்து போனார். வருமானத்துக்கு வேறு வழியின்றி, சேகரின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டியது ரஹ்மான் குடும்பம். 

டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் ஒருமுறை பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான்,

“நான் ஒன்பது வயதாக இருந்தபோது என் தந்தையை இழந்தேன். அவர் மருத்துவமனையில் இருந்த நிமிடங்கள் தான் என் நினைவில் இன்றும் உள்ளது. அவருக்கு வந்த நோய் மர்மமாக இருந்தது. அதை டாக்டர்களால் கண்டுபிடிக்கமுடியாமல் போனது. அதற்கு இடையில் என் அம்மா, ஆன்மீக மருத்துவமுறைகளை அணுகினார். இருப்பினும் என் அப்பா துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டார்.” 

ரஹ்மானின் குடும்பம் நிலைகுலைந்து போனது. இளம் வயதிலே அவரது தோளில் குடும்பப் பொறுப்பு விழுந்தது. மனதளவிலும், நிதி அளவிலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார் ரஹ்மான். ரூட்ஸ் என்ற ஒரு சிறிய இசைக்குழுவில் கீபோர்ட் ப்ளேயராக இணைந்து, பிரபல ட்ரம்மர் சிவமணி மற்றும் அவரது நண்பர்கள் ஜான் ஆண்டனி சுரேஷ் பீட்டர்ஸ், ராஜா மற்றும் ஜோஜோ உடன் பணிபுரிந்தார் ரஹ்மான். இந்த குழுவின் இசை, ஜாஸ் என்ற பிரபல இசையை தழுவியும் இந்தியாவின் பாரம்பரிய இசையை சேர்த்தும் இருந்தது. பின் இவர்கள் ‘நெமிசிஸ்’ என்ற பெயரில் ஒரு ராக் குழு அமைத்தனர். மெல்ல மெல்ல ரஹ்மான், கிட்டார், சிந்தசைசர், ஹார்மோனியம் என்று பல இசை வாத்தியங்களை இசைக்க கற்றார். இருப்பினும் சிந்தசைசர் அவருக்கு பிடித்த வாத்தியமாக சிறுவயது முதல் இருந்திருக்கிறது. மேலும் அவரின் அப்பா வாங்கி தந்தது என்பதால் அது அவருக்கு நெருக்கமான இசைக்கருவியாக இருந்தது.  

ரஹ்மானின் நண்பர் ஜான் ஆண்டனி டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில்,

“ரஹ்மான் ரூட்ஸ் பாண்டில் இசையமைத்த இசையை உலகம் கேட்கவேண்டும். அப்போதே அது சர்வதேச அளவில் புதுமையாக இருந்தது. இன்று உலகம் அவரை இசையமைப்பாளராக தான் அறிகின்றது, மேடையில் இசைப்பவராக அவரை பலரும் பார்த்ததில்லை,” என்றார். 

மாஸ்டர் தன்ராஜ் என்பவரிடம் 11 வயதில் ரஹ்மான் பயிற்சி மேற்கொண்டார். மலையாள இசையமைப்பாளரும் தந்தை சேகரின் நண்பருமான எம்.கே.அர்ஜுனன் எனபவரின் குழுவில் பணிபுரிந்துள்ளார். பல சர்வதேச இசைக்கச்சேரிகளுக்காக உலக டூர்கள் சென்றுள்ளார். சாகிர் ஹுசேன், குன்னக்குடி வைத்தியனாதன், எல்.சங்கர் போன்ற பிரபலங்களுடன் இணைந்து கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார் ரஹ்மான். பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட ரஹ்மான், லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில், ஆக்ஸ்வர்ட் பல்கலைகழகத்தின் ஸ்காலர்ஷிப் மூலம் மேற்கத்திய பாரம்பரிய இசையில் பட்டம் பெற்றுள்ளார். 

1988-ல் ரஹ்மானின் சகோதரி உடல்நிலை சரியாமல் இருந்து பின் குணமானார். அதன்பின்னர் அவரது குடும்பம் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அப்போது தான் திலீப் குமார் என்ற தனது பெயரை அல்லா ராக்கா ரஹ்மான் என்று மாற்றிக்கொண்டார். தொடக்கத்தில் விளம்பரங்களுக்கான ஜிங்கில்ஸ் பாடல்களை மெட்டு அமைத்து தனது தொழில் பயணத்தை தொடங்கினார். ரஹ்மானின் முதல் முயற்சி ஆல்வின் வாட்ச்களுக்காக 1987-ல் அமைத்த இசை ஆகும். அது அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. 

ஒருசில காலத்தில் அவர் தனது வீட்டின் பின்புரம் ஒரு ஸ்டுடியோ ஒன்றை துவக்கி அதற்கு பஞ்சதான் ரிகார்ட் இன் என்று பெயரிட்டார். தற்போது இதுவே இந்தியாவின் அதிநவீன இசை ஸ்டுடியோ ஆகும். ஜிங்கில்ஸ் இசையை அமைத்ததன் மூலம் ரஹ்மானின் இசைப் பயணம் அதிவேகமாக இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனெனில், விளம்பர ஜிங்கில்ஸ் மெட்டமைக்க தீவிர கவனமும், கட்டுப்பாடும் தேவை. குறிப்பிட்ட நேரத்துக்கான மெட்டை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் தேவைக்கேற்ப தரவேண்டும். அதை அவர் வெற்றிகரமாக கொடுத்ததால் அத்துறையில் ரஹ்மானிற்கு நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்தது. இன்றுவரை அவரின் தன்னடக்கமும், ஒழுக்கமும் இசைத்துறையில் அவருக்கு தன்னிகரில்லா இடத்தை பிடித்துத்தந்துள்ளது. அதுவே அவரின் மேஜிக் எனலாம். 

பல விளம்பர படங்களுக்கு இசையமைத்த ரஹ்மான், 1991-ல் லியோ காபி விளம்பரத்துக்கு போட்ட மெட்டுக்கு அவார்ட் வாங்கினார். அந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் மணிரத்தினத்தை சந்திக்க ரஹ்மானுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரபலத்தின் உச்சியில் இருந்த மணிரத்தினம், ரஹ்மானின் ஜிங்கில்ஸ் சிலவற்றை கேட்டவுடன் வெகுவாக கவரப்பட்டார். தனது திரைப்படம் ரோஜாவில் (1992) இசையமைக்க ரஹ்மானுக்கு வாய்ப்பளித்தார் மணிரத்தினம். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்து, குறிப்பாக ரஹ்மானின் புதுமையான இசை தனிச்சிறப்பை பெற்று பட்டி தொட்டியிலும் ஒலிக்கத் தொடங்கியது. 

அன்று தொடங்கிய வெற்றிப்பயணம் ரஹ்மானின் வாழ்வில் இன்றுவரை தொடருகிறது. நாட்டின் தலைசிறந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் ரஹ்மானின் இசை ஒலித்தது. ரோஜா திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருதை பெற்று முதல் படத்திலேயே அந்த உயரிய விருதை பெற்ற சிறப்புமிக்கவர் ஆனார். ஒவ்வொரு படத்திலும் புதுமையான, துள்ளலான, மெலொடியான பாடல்களை சர்வதேச தரத்தில் அளித்தது ரஹ்மானுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை அவர் பக்கம் குவித்தது. விருதுகளும் அங்கீகாரங்களும் அவரை பின்பற்றியது. தான் மெட்டு அமைத்த பல பாடல்களை தானே பாடும் வழக்கம் உள்ள ரஹ்மானின் குரலுக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஹிந்தி திரைப்படங்களிலும் இசையமைக்கத் தொடங்கிய ரஹ்மான், இந்தியாவின் தலைச்சிறந்த இசையமைப்பாளர் ஆனார். 

இந்தியாவோடு அவரின் புகழ் நின்றுவிடாமல் சர்வதேச அளவில் மெல்ல பரவத்தொடங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் பிரபலமாக, அதன் மூலம் ரஹ்மானின் இசையும் அங்குள்ள மக்களால் நேசிக்கப்பட்டது. பஞ்சதான் ரிகார்ட் இன் என்ற அவரது ஸ்டூடியோவை AM Studios, என்று பெயர் மாற்றி பல வசதிகளுடன் நடத்திவருகிறார். இது ஆசியாவிலேயே அட்வான்ஸ்ட் ஸ்டூடியோவாக திகழ்கிறது. 

2008-இல் ரஹ்மானின் புகழில் மகுடம் சூட்டும் வகையில், டானி பாயில் என்ற ஹாலிவுட் இயக்குனர் எடுத்த ‘ஸ்லம்டாக் மில்லினர்’ என்ற ஆங்கிலப் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்தார். இதன் மூலம் உலகமெங்கும் அவரின் இசை பரவ, அப்படத்திற்காக சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான ஆஸ்கார் விருதை பெற்றார் ரஹ்மான். விருதை பெற்ற ரஹ்மான் நிகழ்த்திய நன்றி உரையில் தமிழில் பேசி, தனது தாயை பற்றி குறிப்பிட்டு பேசியது உலக அரங்கில் அவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுத் தந்தது.

ஆஸ்கார் தவிர, BAFTA, க்ராமி, கோல்டன் க்ளோப்ஸ், தேசிய விருதுகள், ப்லிம்பேர் விருதுகள் என்று பல விருதுகள் ரஹ்மானை அலங்கரித்துள்ளது. அதோடு பத்ம பூஷன் மற்றும் பத்ம் ஸ்ரீ விருதுகளையும் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார். தற்போது ஹாலிவுட் இயக்குனர்களுடன் பணியாற்றி வரும் அவர், அவ்வப்போது இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைக்கிறார். 

ஐபி டைம்ஸ் பேட்டியில் விருதுகள் குறித்து பேசிய ரஹ்மான்,

“என்னை பொருத்தவரை அந்தந்த நேரத்தில் இதுபோன்ற விருதுகளின் முக்கியத்துவம் தேவைப்படுகிறது. ரசிகர்களின் அன்பும், வாழ்த்துக்களும் அதைவிட முக்கியம், அதுவே என்னை மேலும் பயணிக்க ஊக்கமளிக்கிறது. ஒரு கலைஞனுக்கு வேறென்ன வேண்டும். ஊக்கமும், உந்துதலுமே மிகமுக்கியம். ரசிகர்களின் அன்பை உணர ஆரம்பித்துவிட்டால் நீங்கள் நிறுத்தமாட்டீர்கள். மேலும் மேலும் சிறப்பாக அளிக்க உற்சாகப்படுத்தவே தோன்றும்.”

சைரா பானு என்பவரை திருமணம் முடித்துள்ள ரஹ்மானுக்கு ரஹிமா, அமீனா மற்றும் கதீஜா என்ற மூன்று குழந்தைகள். தொடர் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் உலக அளவில் ஒரு இசை மேதாவியாக கருதப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்றும் அதே உழைப்பை கைவிடாமல் செய்துவருகிறார். 

இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவரின் தன்னடக்கம் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய குணம். தனது இசை மேஜிக்கை தொடர அவர் காட்டும் புத்துணர்வும் எல்லாரையும் வெகுவாக ஈர்த்துவிடும். தனது இசைப் பயணத்தில் தான் கற்றவற்றை பற்றி குறிப்பிட்ட ரஹ்மான்:

சுய-சீர்திருத்தம் இதுவே நான் கற்ற முக்கிய பாடம் இது. அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவேண்டும். அது வாழ்நாள் முழுதும் தொடரும் என்று நம்புகிறேன். 

கட்டுரை: Think Change India