2015 ல் ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்த முன்னணி நிறுவனங்கள்!

0

யுவர்ஸ்டோரி ஆய்வின் படி இந்திய தொழில்முன்முயற்சி (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி வரும் முதலீட்டாளர்கள் இந்த ஆண்டு மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். 2015 ஜனவரி முதல் ஜூன் வரை அவர்கள் 380 ஒப்பந்தங்கள் செய்துள்ளனர். 2014 ல் இது 304 ஒப்பந்தங்களாக இருந்தது.

இணையம் மற்றும் மொபைல் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் முன்னணி முதலீட்டாளர்கள் பட்டியலில் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட முதலீட்டாளர்களே அதிகம் இருப்பதில் வியப்பில்லை.

கடந்த ஆண்டு நான்காவது முறையாக இந்தியாவை மையமாக கொண்ட 530 மில்லியன் டாலர் நிதி திரட்டிய செகோயா கேபிடல் இந்தியா (Sequoia Capital India ) 26 ஒப்பதங்களுடன் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் இ-காமர்ஸ் மீதான முதலீட்டில் ஆர்வத்தை உண்டாக்கிய அமெரிக்காவைச்சேர்ந்த டைகர் குளோபல் மேனஜ்மெண்ட்(Tiger Global Management)இந்த ஆண்டின் முதல் பாதியில் 20 முதலீடுகளை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹீலியான் வென்ச்சர் பாட்னர்ஸ் (Helion Venture Partners) மற்றும் எஸ்.ஏ.ஐ.எப் பாட்னர்ஸ்(SAIF Partners) 18 ஒப்பந்தங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன.

நெக்சஸ் வென்ச்சர் பாட்னர்ஸ்(Nexus Venture Partners), 2015 ஜனவரி முதல் ஜூன் வரை 29 ஒப்பந்தங்களை உறுதி செய்தது. எனினும் இந்திய தொழில்முன்முயற்சி அல்லாத நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்த ஆய்வுக்காக யுவர் ஸ்டோரி அறிவிக்கப்பட்ட 10 ஒப்பந்தங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.

முதல் 10 இடத்தில் உள்ள முதலீட்டாளர்களில், சில நிறுவனங்கள் இன்னமும் அறிவிக்காத முதலீடு பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டன. அவையும் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளன.

ஒளிரும் இந்திய தொழில்முன்முயற்சிகள்

ஒப்பந்தங்கள் அதிகரித்திருப்பதற்கு முதலீட்டாளர்கள் சொல்லும் ஒரு காரணம், இந்திய தொழில்முனைவர் பலர் உலகத்தரம் மிக்கவர்களாக ஆகியிருக்கிறார்கள்”. "இந்திய நிறுவனர்கள் எப்போதுமே கடினமாக உழைக்க கூடியவர்களாக, சிக்கன போக்கு மற்றும் வலுவான பொறியியல் திறன் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர்” என்கிறார் செகோயா கேபிடல் இந்தியா அட்வைசர்ஸ் நிர்வாக இயக்குனர் மோஹித் பட்னாகர்(Mohit Bhatnagar). இவற்றோடு இப்போது அவர்கள் அருமையான பொருட்களை உருவாக்கும் திறனை பெற்றிருப்பதுடன், உலகளவில் வெற்றி பெறும் வேட்கையையும் கொண்டிருக்கின்றனர்” என்கிறார் அவர் மேலும்.

செகோயாவின் இந்த ஆண்டு முதலீடுகள் மொபைல், ஹைபர் லோக்கல் என குறிபிடப்படும் உள்ளூர் சேவை மற்றும் இ-காமர்ஸ் சார்ந்தவையாக இருந்தாலும், சிறிய நிறுவனங்களுக்கு செயல்பாட்டு மூலதனம் அளிக்கும் ஆன்லைன் நிதி சேவை நிறுவனமான கேபிடல் ஃப்லோட் (Capital Float) போன்ற பிற துறை நிறுவனங்களிலும் கவனம் செலுத்துகிறது.

ஃபிளிப்கார்ட், எம்யூ சிக்மா, ஜஸ்ட் டயல் போன்ற நிறுவனங்களின் வெற்றியும் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது”. இது போன்ற நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்கிறார் ஹீலியான் அட்வைசர்ஸ் பங்குதாரரான அலோக் கோயல்.

ஓலா நிறுவனம், டாக்சி பார் ஷுயர் நிறுவனத்தை மற்றும் ஸ்னேப்டீல் நிறுவனம், ஃபிரீசார்ஜ் நிறுவனத்தை கையகப்படுத்தியது போன்ற நிகழ்வுகளும் உதவியிருக்கின்றன என்கிறார் கே கேபிடல்(Kae Capital)முதலீடு இயக்குனர் நவீன் ஹோனாகுடி(Navin Honagudi). இவர் இந்த ஆண்டு 9 ஒப்பந்தங்களை செய்திருக்கிறார்.

தரம் வாய்ந்த ஏஞ்சல் முதலீட்டாளர்கள் இருப்பதும் ஒப்பந்தங்கள் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம் என்று ஹீலியானின் அலோக் சுட்டிக்காட்டுகிறார். ஃபிளிப்கார்ட்டின் சஞ்சய் பன்சல் மற்றும் பின்னி பன்சால், ஸ்னேப்டீலின் குணால் பால் மற்றும் ரோகித் பால், ரெட் பஸ் நிறுவனர் பணிந்தர சர்மா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளில் ஏஞ்சல் முதலீட்டாளர்களாக மாறியுள்ளனர். உள்ளூர் சேவை நிறுவனமான அர்பன்கிலாப்(UrbanClap) உள்பட பல நிறுவனங்களில் ஸ்னேப்டீல் நிறுவனர் இந்த ஆண்டு முதலீடு செய்துள்ளார். ஆக்சல்(Accel) மற்றும் எஸ்.ஏ.எஃப் (SAIF)ஆகியவையும் இந்த சுற்றில் பங்கேற்றன.

ஸ்டார்ட் அப்கள் வேகமாக வளர்ச்சி அடைய இத்தகைய நிதி உதவும் என்று கருதப்படுகிறது. 2011 ல் குணால் மற்றும் ரோஹித், அப்போது அதிகம் அறியப்படாத டாக்சி சேவையாக இருந்த ஓலாவில் முதலீடு செய்தனர். இந்த ஏப்ரலில் ஓலா 400 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்த சர்வதேச நிறுவனமான உபெருடன் போட்டியிடுகிறது.

எல்லாம் மொபைல் மயம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வலை மற்றும் இ-காமர்ஸ் கவனத்தை ஈர்த்தன என்றால் இப்போது மொபைல் நுட்பம் முன்னணி வகிக்கிறது. இந்தியாவில் உள்ள 243 மில்லியன் இணைய பயனாளிகளில் 57 சதவீத்ததினர் மொபைல் மூலம் இணையத்தை அணுகுவதாக கோல்ட்மென் சாச்சின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 2012 ஜூன் மாதத்திற்கு பிறகு அதிகரிக்கும் இணைய பயனாளிகளில் 76 சதவிதம் பேர் மொபைல் மூலம் வருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மொபைல் வளர்ச்சி இந்த ஆண்டு ஒப்பந்தங்களிலும் பிரதிபலிக்கிறது. "இந்த ஆண்டு முதலீடுகளில் பொதுவான அம்சம் மொபைல்" என்கிறார் செகோயா கேபிடலின் மோஹித். இந்தியாவில் லட்சக்கணக்கான பயனாளிகள் மொபைல் மூலம் இணையத்தில் நுழைவதால் நாட்டில் பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்கிறார். ”உணவு, தனிநபர் கடன் அல்லது கார்-வீடுகளுக்கான தேடலை பலரும் இணையத்தில் இருந்து தான் துவங்குகின்றனர்”.

எஸ்.ஏ.ஐ.எஃப் பாட்னர்சில் பிரின்சிபிலான முகுல் சிங்கால், இதே கருத்தை பிரதிபலிக்கிறார். "ஆரம்ப கட்டத்தில் இப்போது முதலீடு செய்வது ஈர்ப்புடையதாக இருக்கிறது, ஏனெனில் டிஜிட்டல் சேனல்கள் அதிகரித்திருப்பதால் மூலதன பாதிப்பு இல்லாமல் சந்தைக்கேற்ற பொருளை உருவாக்குவது சாத்தியமா என பரிசோதிக்க முடிகிறது என்கிறார் அவர்.

இந்த ஆண்டின் அதிக கவனத்தை ஈர்த்த துறையான உள்ளூர் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் துறைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன்கள் வித்திட்டுள்ளன. இருப்பிடம் சார்ந்த சேவை என்பதால் ஸ்மார்ட்ஃபோன் மூலம் மட்டுமே சாத்தியமாகிறது. "மொபைல் இணையத்தை மையமாக கொண்டு தொழில்கள் உண்டாக்கப்படுகின்றன. எனவே நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து அதிக வளர்ச்சி வாய்ப்பை பெறுகின்றன” என்கிறார் மேட்ரிக்ஸ் பாட்னர்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் விக்ரம் வைத்தியநாதன்.

ஆன்லைன் சேவை மற்றும் உள்ளூர் கவனம்

இ-காமர்ஸ் நிறுவனங்கள் முதலீட்டாளர்களை தொடர்ந்து ஈர்த்து வரும் நிலையில், ஆன்லைன் சேவைகள் மற்றும் உள்ளூர் சேவை நிறுவனங்கள் குறிப்பாக ஆரம்ப கட்டத்தில் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளன.

ஐடிஜி வென்ச்சர்ஸ் இந்தியாவை பொறுத்தவரை நுகர்வோர், தொழில்நுட்பம் மற்றும் மீடியா முதலீட்டின் 85 சதவீதமாக இருந்தன என்றால் எஞ்சிய முதலீடு சாஃப்ட்வேரில் இருந்தன. "2015 ல் எங்கள் முதலீட்டில் 60 சதவீதம் டிஜிட்டலிலும் 35 சதவீதத்திற்கு மேல் சாஃப்ட்வேரிலும் இருக்கும்” என்கிறார் ஐடிஜியின் நிறுவனர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுதீர் சேத்தி. அசான் ஜாப்ஸ்(Assanjobs), நெஸ்ட்டாவே (Nestaway) மற்றும் ட்ரிப்போடோ (Tripoto) உள்ளிட்ட 8 இணையசேவை நிறுவனங்களில் ஐடிஜி முதலீடு செய்துள்ளது.

இப்போது மிகவும் கவனத்தை ஈர்க்கும் துறை உள்ளூர் சேவையாக இருக்கிறது. இந்த துறையில் ஏற்கனவே பிரிவுகள் உண்டாகத்துவங்கியுள்ளன. சில்லறை வணிகம் இ-காமர்ஸை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை உள்ளூர் சேவை அளிப்பதாக ஹீலியானின் அலோக் கருதுகிறார். "உணவு முதல் மளிகை வரை எல்லாவற்றிலும் உள்ளூர் சேவை உதவுகிறது”.

இந்த துறையில் நிறுவனங்கள், ஜனவரி -ஜூன் மாத காலத்தில் இரண்டு முறை நிதி திரட்டியுள்ளன. உள்ளூர் உணவு சேவையான ஸ்விக்கி(Swiggy) மளிகை டெலிவரி சேவை, பெப்பர் டேப்(PepperTap)மற்றும் உதவியாளர் சேவையான அர்பன் கிலாப் (UrbanClap) ஆகியவை இரண்டு முறை நிதிரட்டிய நிறுவனங்களில் சில ஆகும். இது தற்போதைய சந்தையை பிரதிபலிப்பதாக எஸ்.ஏ.ஐ.எஃப் -ன் முகுல் கருதுகிறார். "எங்கெல்லாம் முதலீட்டாளர்கள் உலக அளவிலான சாத்தியம் மற்றும் வேகமான வளர்ச்சி வாய்ப்பை கொண்ட நிறுவனங்களை காண்கின்றனரோ அங்கெல்லாம் ஆர்வத்துடன் முதலீடு செய்கின்றனர்” என்கிறார் முகுல். ஆனால் இந்த போக்கு நீண்ட காலம் தொடராது என்றும் எச்சரிக்கிறார். மேலே சொன்ன மூன்று நிறுவனங்களிலும் எஸ்.ஏ.ஐ.எஃப் முதலீடு செய்துள்ளது.

முதலீடு/வளர்ச்சி

விதை (சீட்) மற்றும் சீரிஸ் ஏ நிதி, முன்னணி 10 நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில் 46 சதவீதமாக இருக்கின்றன. எனினும் ஐடிஜி, இந்தியா கோஷண்ட் மற்றும் கலாரி போன்ற ஆரம்ப நிலை முதலீட்டாளர்கள் சீட் மற்றும் சிரீஸ் ஏ நிதி முதலீட்டில் கவனம் செலுத்துயுள்ளனர். உதாரணமாக ஐடிஜியின் 80 சதவீத முதலீடு ஆரம்ப நிலையில் இருக்கிறது.

தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நுகர்வோர் வர்த்தகத்தில் கவனம் செலுத்தி வரும் இந்தியா கோஷண்டின் நிறுவனர் மற்றும் பங்குதாரரான ஆனந்த் லூனியா இந்திய நுகர்வோர் தேவை பற்றி இனியும் கவலை இல்லை என்கிறார். "பெரிய அளவிலான ஒப்பந்தங்களில் கொஞ்சம் நெருக்கடி ஏற்படலாம், ஆனால் சிறிய அளவிலான ஒப்பந்தங்களில் ஆர்வம் குறையாது” என்கிறார் ஆனந்த்.

ஓலா போன்ற நிறுவனங்கள் பிந்தைய கட்ட முதலீட்டை எட்டியிருக்கும் நிலையில் செகோயா, எஸ்.ஏ.ஐ.எஃப் மற்றும் மேட்ரிக்ஸ் போன்றவை முதலீடுகள் மீது தொடர் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. ஏப்ரலில் ஓலா திரட்டிய 400 மில்லியன் டாலர் நிதி, டைகர் மற்றும் ஆக்சல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மேற்கொண்ட அதிக அளவிலான நிதியாகும். ஒலாவின் 400 மில்லியன் டாலர் நிதி திரட்டல் அதன் ஐந்தாவது சுற்றாகும். சர்வதேச நிறுவனங்களான சாஃப்ட்பேங்க், ஜிஐசி, பால்கான் எட்ஜ் மற்றும் ஸ்டெட்வியூ தவிர டைகர் மற்றும் ஆக்சல் பங்கேற்றன.

ஷாப் க்ளூஸ் மற்றும் அர்பன் லேடர் போன்ற இ- காமர்ஸ் நிறுவனங்கள் அடுத்த கட்ட நிதியை பெற்றதால் வளர்ச்சி கட்ட ஒப்பந்தங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வரும் மாதங்கள்

முதலீட்டாளர்கள், ஒப்பந்தங்கள் மந்தமாகும் என்று கருதவில்லை. வர்த்தகம், உள்ளடக்கம், சமூகம் மற்றும் கேம்ஸ் ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் மொபைல் ஆதிக்கம் செலுத்துகிறது. ஃபிண்டெக், கல்வி மற்றும் சாஃப்ட்வேர் சேவை ஆகிய பிரிவுகளிலும் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.

இந்த பத்து முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்களில் முன்னிலை வகித்தாலும் இவர்களில் யார் வெற்றி நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். "எண்ணிக்கையை விட தரமே முக்கியம்” என்கிறார் கலாரி கேபிடல் நிர்வாக இயக்குனர் வாணி கோலா. "2009ல் நாங்கள் ஒரு முதலீடு தான் செய்தோம். அது ஸ்னேப்டீல்” என்றார்.