பணியிலமர்த்துவோர் குழந்தை பராமரிப்பிற்கான முழுச்செலவையும் ஏற்க வேண்டும் – அரசு அறிவிப்பு!

0

மகப்பேறு நன்மைகள் சட்டம், 1961-ன் பிரிவு 11A புதிய பகுதியின்படி குறைந்தபட்சம் 30 பெண் ஊழியர்களையோ அல்லது 50 ஊழியர்களையோ கொண்ட அனைத்து நிறுவனங்களும் அதன் வளாகத்திற்குள் ஒரு மழலையர் காப்பகத்தையோ (Creche) அல்லது 500 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் ஒரு மழலையர் காப்பகத்துடன் இணைந்தோ செயல்படவேண்டும்.

பணியிலமர்த்துவோர் இணக்கம் சார்ந்த முழு செலவையும் ஏற்றுக்கொண்டு ஊழியர்களின் குழந்தைகளுக்குத் தேவையான பராமரிப்பை வழங்கவேண்டும் என்று RTI கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அரசாங்கம் உறுதிப்படுத்தியது. இதற்கு முன்பு மகப்பேறு நன்மைகள் சட்டத்தில் செலவுகளை யார் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடப்படவில்லை.

கார்ப்பரேட் ஆதரவில் செயல்படும் மிகப்பெரிய மழலை காப்பகமான ஃபவுண்டிங் இயர்ஸ் லெர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ப்ரியா கிருஷ்ணன் இந்த முடிவு எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும் என்கிற அச்சத்தை வெளிப்படுத்துகிறார். 

”பெண் ஊழியர்களுக்கு ஒரு வரமாகவும் அதிக பெண்கள் பணிகளுக்குத் திரும்ப உதவுவேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்ட இந்த சட்டமானது முறையான உத்தி சார்ந்த சிந்தனைகள் இல்லாத காரணத்தால் நடைமுறைப்படுத்துகையில் பெண்கள் பணியிலமர்த்தப்படும் முறையில் பின்னடைவையே ஏற்படுத்தும்.”

இந்த RTI பதில் மூலமாக துரதிர்ஷ்டவசமாக மகப்பேறு நன்மைகள் சட்டத்திற்கு இணங்க ஒட்டுமொத்த நிதிச்சுமையையும் கார்ப்பரேட்கள் ஏற்கவேண்டும் என்று கூறி கார்ப்பரேட்களின் நீண்ட நாள் அச்சத்தை உறுதிபடுத்தியுள்ளது.

”இந்த சட்டத்தினால் பெண் ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக பணியிலமர்த்துவோர் அதிகம் செலவிட நேரும். குறிப்பாக 25 முதல் 35 வயதுடைய பெண்களுக்கு தீங்கையே விளைவிக்கும். ஏனெனில் அவர்கள் தங்களது பணி வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டுவதற்கு முன்பாகவே திறமையான ஊழியர்களும் பணியிலமர்த்துவோருக்கு ஒரு நிதிச்சுமையாகவே பார்க்கப்படுகிறார்கள்.”

“மற்ற நாடுகள் voucher முறைகளையும் உதவித்தொகைகளை வழங்கும் முறையையும் பின்பற்றுகையில் இந்தியாவில் அரசாங்கம் நிதியாண்டின் மத்தியில் இதை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதைத்தவிர தனது பொறுப்பையும் பங்களிப்பையும் குறைத்துக்கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.”

”பெண்கள் பணியிமர்த்தப்படுவதற்கும் அந்த எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் பணியிலமர்த்துவோர் மட்டுமே பொறுப்பேற்றுக்கொள்ளமுடியாது.”

எனினும் குழந்தைகள் பராமரிப்பிற்குத் தேவையான ஆதரவை வழங்கும் நிறுவனங்களில் பெண் ஊழியர்கள் அதிக திருப்தியுடன் இருப்பதையும் பல்வேறு ஆண் ஊழியர்களும் இதை பயன்படுத்திக்கொள்வதையும் பார்க்கமுடிகிறது. ஸ்நேப்டீலில் பணிபுரியும் வைபவ் அவரது அலுவலக வளாகத்தினுள் குழந்தை பராமரிப்பு மையம் அமைந்துள்ளதால் தனது குழந்தையை தினமும் பணிக்குச் செல்கையில் உடன் அழைத்துச் செல்கிறார். அவரது மனைவி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். வசதியாக இருக்கும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளார். வைபவ் கூறுகையில், 

“மழலையர் காப்பகத்திலுள்ள ஊழியரை என்னால் எளிதாக அணுகமுடியும். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் என்னை உடனடியாக அழைக்கலாம். இதனால் நானும் என்னுடைய மனைவியும் எந்தவித அழுத்தத்தையும் உணராமல் எங்களது மகளை அங்கு விட்டுவிட்டு பணிபுரிகிறோம்,” என்றார்.

மழலையர் காப்பகம் மாலை 6.30 மணிக்கு மூடப்படுவதால் வைபவ் அலுவலகத்தைவிட்டு கிளம்ப நேரமாகும் சூழல்களில் மனைவியிடம் முன்னரே தெரிவித்துவிடுவார். அவர் காப்பகத்திற்கு வந்து குழந்தையை கூட்டிக்கொண்டு செல்கிறார்.

ஜாக்ரம் க்ரூப்பின் தலைவர் அபூர்வா புரோகித் கூறுகையில்,

நடுத்தர மட்டத்தில் இருக்கும் பெண் ஊழியர்கள் பலர் குழந்தை பராமரிப்பிற்கான ஆதரவு கிடைக்காததால்தான் வேலையை விட்டுவிடுகின்றனர். பெண்கள் தாய்மார்களாக மாறும் காலகட்டத்தில் அவர்களுக்கு உதவி அந்த இக்கட்டான வருடங்களில் அவர்களுக்கு ஆதரவான பணிச்சூழலை அமைத்துக்கொடுத்தால் மிகச் சிலரே பணியை விட்டுச் செல்வார்கள். இதனால் பெண்களின் அடுத்ததடுத்த கட்ட வளர்ச்சி தடைபடாமல் பாலின வேறுபாடுகள் மறைந்து உயர் பதவிகளுக்குச் செல்லமுடியும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்