புவியீர்ப்பு விசைக்கெதிராய் பறக்கும் காவ்யா!

0

நம் விமான சேவை அமைப்புகள் எல்லாம் பக்காவாக இருக்கிறது. ஆனால் இத்தனை தெளிவாய் இருக்கிற விமான அமைப்பில் எப்படி விபத்துக்கள் நடக்கிறதென்பதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால், நாம் இதை இப்படிப் பார்க்கலாம், ந்யூட்டனின் விதிப்படி, மேலே செல்லும் பொருட்கள் அனைத்தும் புவியீர்ப்பு விசையின் காரணமாய் கீழே வந்துத்தானே ஆக வேண்டும். விமானங்கள் அந்த விதிக்கு எதிராகத் தானே பறந்துக் கொண்டிருக்கின்றன. நாம் இயற்கைக்கு எதிராக பறப்பதும் கூட காரணமாக இருக்கலாம்” - இனி, அண்ணாந்து விமானத்தைப் பார்க்கும் போதெல்லாம், இது எனக்கு நினைவுக்கு வந்துக் கொண்டே இருக்கும்.

புவியீர்ப்பு விசை, அடிப்படையில், உங்களை கீழே இழுக்க மட்டுமே செய்கிறது அல்லவா? எனில், உங்களை கீழிருந்து வீழ்த்துபவர்கள் (வீழ்த்துபவைகளை) புவியீர்ப்பு விசையாக மட்டுமே நினைத்து, எழுந்து நிற்க உங்களால் முடியுமா? முடியும் என்று காட்டியுள்ளார் காவ்யா!

காவ்யா, விமானியாக பொறுப்பேற்பதற்கு முன்னரே, தன் பத்தொன்பதாம் வயதிலேயே தனியாளாக விமானத்தை வெற்றிகரமாக ஓட்டி, தரையிறக்கிய நம் மதுரை பொண்ணு!

“பறப்பது அவ்வளவு இஷ்டமா” என்பதற்கு பதிலாய் அவர், குழந்தையைப்போல கைகள் விரித்து ‘ரொம்ம்ம்ம்ப...’ என்பதில் மனது நிறைகிறது.

"பலத் தடைகளை கடந்து தான் சென்றுக் கொண்டிருக்கிறேன்... ஆனாலும் அவ்வளவு எளிதில் அதை விட்டுக் கொடுப்பதாய் இல்லை” என்னும் காவ்யா, தற்போது,பெங்களூரில், விமானியாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மாணவி.

பிறப்பும், படிப்பும்

மதுரையில் பிறந்து, டி.வி.எஸ். மேல்நிலப்பள்ளியில் ப்ளஸ் டூ வரை பயின்ற காவ்யா, விமானி ஆக எந்த பட்டப்படிப்பும் தேவையில்லாததால், குறிப்பாக பட்டப்படிப்பு என எதுவும் படிக்காமல், நேரடியாக பயிற்சியில் சேர்ந்துவிட்டார். காவ்யாவின் மதுரை வீட்டில் அம்மா, அப்பாவோடு எட்டாவது படிக்கும் குட்டித் தங்கையும் இருக்கிறாள்.

விமானத்தில் பறப்பதை நினைத்தாலே, கழுத்தருகே இதயம் துடிப்பது போல நமக்குத் தோன்றும். பின்பு ஏகப் பொறுப்புகள் இருக்கும் விமானி எப்படி உணர்வார்? சரி, ஒரு விமானத்தை, யார் உதவியும் இன்றி, தனியே ஓட்ட வேண்டிய நிலை வந்தால்?

சோலோ- சாதனை

விமானியாக பயிற்சி எடுக்கும் மாணவர்கள், ‘சோலோ’ பயணம் செல்வது கட்டாயம். தனியே விமானம் ஓட்டிய அனுபவம் பற்றி காவ்யாவிடம் கேட்ட போது,

“தனியாக விமானம் ஓட்டியபோது எனக்கு பத்தொன்பது வயது. பயிற்சிக் காலத்தில் ‘சோலோ’ ஓட்ட பயிற்சிக் கொடுப்பதும் ஒருப் பகுதி. பயிற்சி காலத்தில் மட்டும் தான் தனியாக போக அனுமதிப்பார்கள். பயிற்சி முடிந்த பிறகு, தனியே விமானம் ஓட்ட வாய்ப்பில்லை. ஆனால், எதாவது அவசர கால தேவைக்காக தனியாகப் போக வேண்டியது வரலாம்.

ஒரு விமானத்தில் இரண்டு விமானிகள் இருப்பார்கள் அதில் ஒருவருக்கு எதாவது மருத்துவ உதவி தேவைப்படும் சூழல் நேர்ந்தாலோ, விபத்து நேர்ந்தாலோ, இரண்டாவது பைலட் தான் விமானத்தை கட்டுப்படுத்த வேண்டும். வேறு யாரிடமும் உதவிக் கேட்க முடியாது. அதற்காகத் தான் ‘சோலோ’ பயிற்சி”

பெங்களூரில், செயல்படாமல் இருந்த ஜக்கூர் விமானப் பயிற்சிப் பள்ளி, அண்மையில் திறக்கப்பட்டது. அதற்கு முன்னரே பலர் சோலோ ஓட்டியிருந்தாலுமே, கடந்த ஆறு வருடத்தில் ‘பெண்’ சோலோ ஓட்டியதில்லையாம். கடந்த ஆறு வருடத்தில், ஜக்கூர் விமானத் தளத்தில், சோலோ ஓட்டிய முதல் பெண், என்பது, காவ்யாவின் சாதனை.

“முதல் முறையாக விமானத்தில் அமர்ந்த போது, விமானியாகத் தான் அமர்ந்தேன். அதற்கு முன்னர், மற்ற பயிற்சி விமானங்களில் பயணியாக போனதில்லை. அப்படி, முதல் முறையாக பறந்த போது, வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிப் பறப்பது போல இருந்தது. பிறகு, நான் விமானம் ஓட்டப் பயின்று, வேகமாக டேக் ஆஃப் செய்யும் போது, பயிற்சியாளர்கள் பயந்து, 'காவ்யா... வாட் ஆர் யூ டூயிங்' எனக் கத்தினார்கள், என முதல் முறை பறந்த அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறார்.

இன்று, ஏர்லைன்களில் இருக்கும் நிபந்தனைப்படி, இருநூறு மணி நேரம் விமானம் ஓட்டியிருந்து, அதில், நூறு மணி நேரங்களாவது தனியாக ஓட்டியிருந்தால் தான் பணிக்கு சேர முடியும். காவ்யா, இதுவரை 52 மணி நேரங்கள் ‘சோலோ’ ஓட்டியிருக்கிறார்.

பெங்களூரில் பயிற்சி

பயிற்சிக் காலம் எப்படிப் போகிறதென்றதற்கு, “அரசுப் பயிற்சிப் பள்ளியில் தான் இருக்கிறேன். பயிற்சிக் காலம் மெல்ல நகர்கிறது. தனியார் பள்ளியில் இருந்திருந்தால், வேகமாக இருந்திருக்கும். என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.

சில சமயங்களில், பணம் இல்லாத காரணத்தினால் தான் நான் இன்னும் பயிற்சிக் காலத்தை முடிக்காமல் இருக்கிறேன் என்றும் கூட எனக்குத் தோன்றும். என்னுடன் பயின்றவர்கள் எல்லாம் பறக்கும் போது, நான் கீழிருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதாய் இருக்கும்.”

காவ்யாவிடம், இந்த சாதனைக்குப் பிறகு இருக்கும் மனநிலையைப் பற்றிப் பேசிய போது, “இண்டியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கையில் என்னைப் பற்றி வந்த பிறகு, மதுரையில் வேறு பல பத்திரிக்கைகளிலும் என்னைப் பற்றியக் கட்டுரை வந்தது. சூரியன் எஃப்.எம், ரேடியோ மிர்ச்சி அலுவலகங்களுக்கு எல்லாம் பேட்டிக்காக சென்றேன். என்னை ஊக்கப்படுத்த ஆட்கள் நிறையவே இருக்கிறார்கள்.

பயிற்சி முடிவதற்கு முன்னரே, இவையெல்லாம் நடப்பதனால், கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. இது வழக்கமானது இல்லை. விமானிப் பயிற்சியில், ஒரு முறை நீங்கள் விமானத்தை செலுத்தியிருந்தாலே, நீங்கள் விமானி தான். ஆனாலும், பயிற்சி முடிந்து, பதவியேற்றப் பிறகு இது எல்லாம் நடந்திருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்” என்கிறார்.

சவால்கள்

“நான் ஒரு தலித். என்னைப்போன்ற குடும்பப் பின்னணிக்கொண்ட பெண்களுக்கு இருக்கும் முதல் சவாலே பொருளாதாரம் தான். பணம் இல்லாமல் இந்தத் துறையில் நுழையவே முடியாது. ஆனால், நான் வெறும் ஆர்வத்தை மட்டும் வைத்துக் கொண்டு நுழைந்தேன். இடையில் பண நெருக்கடி வராமல் இருந்திருந்தால் இந்நேரம் என் பயிற்சியே முடிந்து, வேலையில் சேர்ந்திருப்பேன். பண உதவிக்காக அரசிடம் விண்ணப்பித்து இருந்தேன். இரண்டு வருடங்கள் ஆகியும் அது இன்னும் கிடைக்கவில்லை,” 

எனத் தான் கடந்து வரும் சவால்களை பகிர்ந்துக் கொள்கிறார். "எனக்கிருக்கும் கவலைகளை பிறருக்குச் சொல்வதில் உடன்பாடில்லை. நான் கஷ்டப்படுகிறேன் எனத் தெரிந்தால், வீட்டில் அம்மாவும் அப்பாவும் கவலைப்படுவார்கள்".

கடத்தப்பட்ட ஒரு விமானத்தில், பல உயிர்களைக் காப்பாற்றிய நீர்ஜா பானட்டின் கதை படமாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?

அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால், அதைப் போல சிக்கலான சமயங்களில் சாமர்த்தியமாக செயல்பட வேண்டும் என யோசிப்பேன். சமீபத்தில், பத்து மாதங்கள் முன் இருக்கலாம், மஹாராஷ்ட்ராவில், பயிற்சியில் இருந்த விமானி ஒருவர், அவசரமாக தரையிறக்க வேண்டியதால், ஒரு ஃப்ளை ஓவர் மீது விமானத்தை இறக்கியிருக்கிறார். விமானத்தில் கோளாறு இருந்த போதிலும் அவர் சாமர்த்தியமாக ஃப்ளை ஓவரில் தரையிறக்கியது தான் சாதனை. எதிர்காலத்தில், இதைப் போலவே நானும் திறமையாக சவாலான சந்தர்ப்பங்களை சாகசமாக எதிர்கொள்ள வேண்டும் என ஆசை இருக்கிறது” என்கிறார் சாகச விரும்பியாய்!

“துபாயில் இருக்கும் உறவினர்கள், எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்போது, அவர்கள் நடந்துக் கொண்ட விதம் வித்தியாசமாய் இருந்தது. வழக்கம் போல இல்லாமல், கொஞ்சம் தலைக்கனத்துடன் நடந்துக் கொண்டார்கள். நீங்க எல்லாம் ஃப்லைட்லயே போக முடியாது என்பது போல இருந்தது, அவர்களின் பேச்சு. அந்த வயதிலேயே, விளையாட்டாய் ஒரு வைராக்கியம் தோன்றியது. அதன் வெளிப்பாடு தான், இன்றைய வெற்றி”, என தன் சிறுவயதிலேயே விமானி கனவு இவர் மனதில் வித்திட்ட காரணியை பகிர்கிறார்.

இந்தியாவில் விமானம் ஓட்ட அதிகப்பட்ச உயரம், கடல் மட்டத்திலிருந்து, 45,000 அடிகள். 45,000 அடிகளையும், நிச்சயம், விரைவில் பறந்துச் சென்றடைவார் காவ்யா!

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற ஊக்கமளிக்கக்கூடிய பெண்களின் கதை:

உலகின் அழகிய தாய்!

கொரூரம் என்ற அடையாளத்தை மாற்றி வெற்றிக்கண்ட லிஸியின் தன்னம்பிக்கைக் கதை!


வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Stories by Sneha