நோய் கண்டறிந்தபின் அதன் சிகிச்சை முறைகளின் மாற்று ஆலோசனைகளை வழங்கும் OpinionX

மருத்துவ உதவி வழங்கும் இந்தத் தளம் தவறான சிகிச்சைகளை குறைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு முறை மூலம் மூன்று அல்லது நான்கு மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கலவையாக வழங்குகிறது.

0

நம் அனைவருக்கும் வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று ஆரோக்கியமான வாழ்க்கை. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனினும் ஒரு குறிப்பிட்ட நோய்க்காக மருத்துவரை ஆலோசிக்கும்போது முதல் கட்டமாக நோயைக் கண்டறிந்ததும் சில சமயம் நாம் திருப்தியடைவதில்லை. நமது சந்தேகங்களையும் பயத்தையும் தீர்த்துக்கொள்ள பல பதில்களை நாம் எதிர்நோக்குவோம். நாம் இரண்டாம் கட்டமாக வேறொரு மருத்துவரிடம் மாற்றுக் கருத்து கேட்க வேண்டுமா? வேறு ஏதேனும் சிறப்பான மற்றும் குறைந்த செலவிலான சிகிச்சைகள் உள்ளதா?

இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான தீர்வுதான் OpinionX. சௌரப் போதாஸ், உதய் அக்காராஜ் ஆகிய இருவரும் இணைந்து இதை உருவாக்கியுள்ளனர். இது ஒரு மருத்துவ நுண்ணறிவுத் தளம். இந்தத் தளம் தவறான சிகிச்சைகளையும் மருத்துவத் தவறுகளையும் குறைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு முறை வாயிலாக மூன்று அல்லது நான்கு மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கலவையாக வழங்குகிறது. OpinionX அக்டோபர் மாதத்தின் மத்தியில் வலைதளம் வாயிலாகவும் பின்னர் செயலி வாயிலாகவும் அறிமுகமாக உள்ளது.

இது எவ்வாறு செயல்படும்?

நோயாளி நிபுணர்கள் குழுவிடமிருந்து ஒற்றை அறிக்கையாக ஆலோசனைகளைப் பெறலாம். குறைந்த பட்சம் பத்தாண்டுகள் அனுபவமுள்ள மூன்று மருத்துவர்களின் கருத்துக்கள் அதில் அடங்கியிருக்கும். பூனேவிலிருந்து துவங்கப்படுகிறது. ஏற்கெனவே OpinionX தளத்தை உருவாக்க உதவும் வகையில் மூன்று புற்றுநோய் மருத்துவர்கள் மருத்துவ ஆலோசகர்களாக இணைந்துள்ளனர். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் அதிக மருத்துவர்கள் இணைக்கப்படுவார்கள்.

உதய், சௌரப் ஆகிய இருவரும் பயனாளிகள் குறித்து ஆராய்ந்தனர். மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுடன் இரண்டாம் கட்ட மாற்று ஆலோசனைக்கான தேவை குறித்து உரையாடியதில் அப்படிப்பட்ட தேவை நிலவுவதை உணர்ந்தனர்.

24 வயதான சௌரப் போதாஸ் பொறியியல் பின்னணி கொண்டவர். காக்னிசண்ட் நிறுவனத்தின் பணியை 2017-ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார். ஒரு மனிதனின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும், ஏதாவதொரு வகையில் மதிப்பை கூட்டும் விஷயத்தில் ஈடுபடவேண்டும் போன்ற ஆர்வம் காரணமாகவே ராஜினாமா செய்தார். குறிப்பிட்ட நோய் எனக் கண்டறிந்த பிறகு சரியான சிகிச்சைக்காக தனது நண்பர்களும் குடும்பத்தினரும் சந்தித்த போராட்டங்களை சௌரப் நன்கறிவார். எனவே டிஜிட்டல் வாயிலாக மருத்துவ உதவியை வழங்கி தீர்வளிக்கவேண்டும் என்கிற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது.

OpinionX தளத்தில் நோயாளிகள் தங்களது ஸ்கேன் மற்றும் மருத்துவ ரிப்போர்ட்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு ஒருவரோடொருவர் கலந்தாலோசிக்காமல் இந்த ரிப்போர்ட்களை பார்வையிடுவார்கள். மூன்று மருத்துவர்களும் வழங்கும் ஆலோசனைகளையும் செயற்கை நுண்ணறிவு முறையில் கிடைக்கும் கருத்துக்களையும் கேஸ் இன்சார்ஜ் ஒருவர் ஒன்றிணைப்பார்.

OpinionX பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு முறை நோயாளியின் கேள்விகளுடன் ஒத்திருக்கும் அதே மாதிரியான 1,000க்கும் மேற்பட்ட கேஸ்களின் தரவுகளை ஆராயும். ஒரு முழுமையான பார்வையை வழங்குவதற்காக வயது, பாலினம், பழைய மருத்துவ சிகிச்சைகளின் பின்னணி, நோய் கண்டறியப்பட்ட நிலை போன்ற மாறக்கூடிய தன்மையுள்ள விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். மருத்துவக் குழுவின் ஆலோசனைகளுடன் செயற்கை நுண்ணறிவு இணையும்போது சிகிச்சைகளில் ஏற்படக்கூடிய தவறுகள் 90 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும் நோயாளி உண்மையான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுப்பதற்கும் ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவித்தார் உதய்.

72 மணி நேரத்திற்குள் தொகுக்கப்பட்ட இரண்டாம் கட்ட மாற்று ஆலோசனையை நோயாளிக்கு வழங்கவேண்டும் என்பதை இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதைப் பெற்றுக்கொண்டபின் நோயாளி தன்னுடைய கவலை குறித்து கேஸ் இன்சார்ஜிடம் கேள்வியெழுப்பலாம். குழுவிலிருக்கும் மருத்துவர்கள் நோயாளியின் முன்னேற்றம் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

டிஜிட்டல் மருத்துவ உதவிக்கான தேவை

நோய் கண்டறிந்த பிறகு நோயாளிக்குக் கிடைக்கவேண்டிய முறையான நம்பகமான சிகிச்சையின் தேவையை தீர்த்துவைக்கிறது OpinionX. இந்தியாவில் தவறான டயாக்னைஸ் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கிடைக்கவில்லை. இருப்பினும் சில இறப்பு எண்ணிக்கை குறையலாம்.

நியூயார்க்கைச் சேர்ந்த 32 வயதான உதய் அக்காராஜு BOND.AI நிறுவனத்தின் சிஇஓ. செயற்கை நுண்ணறிவு துறையில் ஏழு வருடங்களுக்கும் மேலான அனுபவமிக்கவர். OpinionX போன்ற ஒரு தளத்தை துவங்குவதற்கு உந்துதளித்த தனது தனிப்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

2014-ம் ஆண்டு உதயின் மாமாவிற்கு ஆரம்ப நிலை தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தினார். அதன் காரணமாக அவரது நாக்குப் பகுதியில் பாதியளவு அகற்றப்பட்டது. இதனால் அவரால் பேச இயலாமல் போனது. அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அவரது வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மருத்துவர்கள் தெளிவுபடுத்தவில்லை என்றார் உதய். 

”தெளிவாக விளக்கப்படவில்லை. ஆனால் எங்களுக்கு நம்பிக்கை அளித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு வேறொரு மாற்று ஆலோசனை பெற்றுக்கொண்டோம். அந்த மருத்துவர் நாங்கள் அவருக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சையே தேவையற்றது என்றும் அந்த அறுவை சிகிச்சையும் முறையாக செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.” என்றார்.

உதய்யின் மாமா முன்னாள் இராணுவ அதிகாரி. சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றியவர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரால் பேசவோ முறையாக சாப்பிடவோ முடியவில்லை. அவரது நிலை குறித்து அறிந்தும் மருத்துவர்கள் புற்றுநோயை எதிர்த்து போராடவே மருந்துகள் அளித்தனர். பேசும் திறனையோ உணவு உட்கொள்ளும் திறனையோ மேம்படுத்த எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இறுதியாக 2015-ம் ஆண்டு அவர் இறந்து போனார்.

இந்த நிகழ்விற்குப் பிறகு இந்நோய் காரணமாக பிழைத்துக்கொண்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து ஆராயத் துவங்கினார் உதய். உயிர் பிழைத்தவர்கள் வேறொரு மருத்துவரிடம் மாற்று ஆலோசனைகள், மாற்று தெரபிஸ்டுகள் மற்றும் ஏற்கெனவே இதே நோயினால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் ஆகியோரிடமிருந்து தகவல்களை சேகரித்தனர். அதனைக் கொண்டு புத்திசாலித்தனமாகவும் உண்மையின் அடிப்படையிலும் முடிவெடுத்தனர் என்பதை அந்த ஆய்வின் மூலம் கண்டறிந்தார் உதய்.

அறுவைச் சிகிச்சையின்போது மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை சிறப்பாகவே செயல்பட்டாலும் அவர்களுக்கிருக்கும் அறிவின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் இது முழுமையாக தனிநபர் தொடர்புடையதாகும். 

”இந்தத் துறையில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்வதால் மாற்று சிகிச்சை மற்றும் மாற்று அணுகுமுறைக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அத்தகைய மருத்துவர்கள் ஒரே சமூகமாக ஒன்றிணைந்தால் இந்த மாற்று சிகிச்சை சாத்தியப்படும்.” என்றார் உதய்.

உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நோய்கான சிகிச்சை முறையை தீர்மானிப்பதற்கு முன்னால் மருத்துவர்கள் குறைந்தபட்சம் இரண்டு சமகால மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறவேண்டும் என்கிற சட்டத்தை அரசாங்கம் கட்டாயமாக்கவேண்டும் என்று குறிப்பிட்டார் உதய்.

இக்குழுவினர் ஆன்லைன் நிதிதிரட்டுபவர் மூலம் நிதியை உயர்த்தி வருகின்றனர். முதலில் புற்றுநோயாளிகளுக்கு உதவி வழங்கி சேவையை அறிமுகப்படுத்த உள்ளனர். அடுத்த வருட துவக்கத்தில் இதய நோய், எலும்பியல் குறைபாடுகள், நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டவர்களுக்கும் சேவையை விரிவுபடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆங்கில கட்டுரையாளர் : மெஹர் கில்