மறக்கப்பட்ட இணைய முகவரிகளுக்கு புதிய வாழ்வு அளிக்கும் இணையதளம்! 

0

எளிமையே அழகு என்று சொல்லப்படுவது இணையதளங்களுக்கும் பொருந்தும். இணையதளங்களின் வடிவமைப்பு மட்டும் அல்ல, உள்ளடக்கத்திற்கும் இது பொருந்தும். அதாவது உள்ளடக்கத்தின் பின்னே உள்ள மைய ஐடியாவும் எளிமையானதாக இருந்தாலே போதுமானது, அந்த தளம் கவர்ந்திழுக்கும்.

டெட்.டொமைன்ஸ் இணையதளம் இதற்கான அழகிய உதாரணமாக அமைகிறது. இந்த தளத்தின் பின்னே உள்ள ஐடியா உலகை மாற்றக்கூடியது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. மறக்கப்பட்ட இணையதளங்களை அடையாளம் காட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நுழைந்தால், பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு செயல்வடிவம் பெறாமல் இருக்கும் இணைய முகவரிகளை வரிசையாக பார்க்கலாம். அந்த முகவரிகளில் உங்களுக்கு விருப்பமானதை வாங்கிக் கொள்ளலாம்.

ஆக, நல்லதொரு இணைய முகவரி தேவைப்படுபவர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். இணைய முகவரியில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு கூட இந்த தளம் நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும். அதன் அடிப்படை எண்ணம் எளிமையாக, அதாவது அழகாக இருப்பது தான் காரணம். அது மட்டும் அல்ல, கைவிடப்பட்ட இணைய முகவரிகளுக்கான வழக்கமான தளங்கள் போல் அல்லாமல் இது மாறுபட்டதாகவும் இருக்கிறது.

இணைய முகவரிகள், டொமைன் பெயர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றின் பின்னே பெரியதொரு சந்தை இருக்கிறது. கிட்டத்தட்ட ரியல் எஸ்டேட் போன்ற சந்தை என்று சொல்லலாம். ரியல் எஸ்டேட்டில் எப்படி வீட்டு மனைகளோ அதே போல, இணைய வெளியில் டொமைன் பெயர்கள் அமைகின்றன. குறிப்பிட்ட டொமைன் பெயர்களுக்கு தனி மதிப்பு உண்டு. பெரும்பாலும், ஒரு வர்த்தகத்தின் தன்மையை அல்லது அதன் நோக்கத்தை பளிச்சென உணர்த்தக்கூடிய டொமைன் முகவரிகள் எல்லோரையும் கவரக்கூடியதாக இருக்கும். அந்த காரணத்தினாலேயே அந்த முகவரிகள் மதிப்பு மிக்கதாக இருக்கும். ஒரு சில முகவர்கள் அவற்றின் எளிதாக கவரும் தன்மை காரணமாகவே மதிப்பு மிக்கதாக அமைகின்றன.

இது போன்ற இணைய முகவரிகளை துவக்கத்திலேயே பதிவு செய்ய முடிவதை அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி பதிவு செய்தவர்களில் பலர் தங்கள் முகவரியை பின்னர் பெரிய தொகைக்கும் விற்ற வெற்றிக்கதைகளும் இணைய உலகில் அநேகம் இருக்கின்றன. இப்படி பின்னாளில் பணமாக்கலாம் என்ற உத்தேசத்தில் பலவித கணிப்புகளின் அடிப்படையில் இணைய முகவரிகளை பதிவு செய்து வைத்திருப்பவர்களும் இருக்கின்றனர். மிகப்பெரிய நிகழ்வுகளின் போது, ஒரு எதிர்பார்ப்பில் அந்த நிகழ்வு சார்ந்த பலவித இணைய பெயர்களை பதிவு செய்து வைத்துக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.

இவைத்தவிர, மகத்தான ஐடியா தங்கள் வசம் இருக்கும் ஊக்கத்தில் புதிய வர்த்தகம் அல்லது சேவைக்கான இணைய முகவரியை பதிவு செய்துவிட்டு, அதை செயலுக்கு கொண்டு வராமல் இருப்பதும் உண்டு. இவர்களில் பலர் பதிவு செய்த முகவரியை குறித்த காலத்தில் புதுப்பிக்காமல் விட்டுவிடுவதும் உண்டு. இவ்வளவு ஏன், வர்த்தக நிறுவனங்களே கூட உரிய நேரத்தில் முகவரிகளை புதுப்பிக்க மறந்துவிட்டு தவிப்பதும் உண்டு.

இப்படி மறக்கப்பட்ட முகவரிகளையும், விரைவில் காலாவதியாக உள்ள முகவரிகளையும் பட்டியல் போட்டுக்காட்டும் இணையதளங்களும் கூட இருக்கின்றன.

இந்த பின்னணியில் தான் ’டெட்.டொமைன்ஸ்’ தளம் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறது. இந்த தளம்; பதிவு செய்து இன்னமும் செயல்வடிவம் பெறாமல் இருக்கும் இணைய முகவரிகளை அடையாளம் காட்டுகிறது. இந்த முகவரிகளை அதன் உரிமையாளர்களே சமர்பிக்கும் வகையில் அமைந்திருப்பது தான் இதன் சிறப்பம்சம். உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள இன்னமும் பயன்படுத்தப்படாத இணைய முகவரிகளை இங்கு சமர்பிப்பத்துடன், அதன் பின்னே உள்ள நோக்கத்தையும் தெரிவிக்கின்றனர். அதாவது, எந்த காரணத்திற்காக அந்த குறிப்பிட்ட முகவரியை பதிவு செய்தனர் என்பதையும் தெரிவிக்கின்றனர்.

வெறும் இணைய முகவரிகளை அடையாளம் காண்பதைவிட, அவற்றின் பின்னே உள்ள நோக்கத்தையும் அறிந்து கொள்வது சுவாரஸ்யமகவே இருக்கிறது. உதாரணமாக, ஒருவர் contrib.in எனும் இணைய முகவரியை சமர்பித்திருக்கிறார். இணையத்திற்கான சிறிய பங்களிப்பாக இருக்கட்டுமே என்ற எண்ணத்துடன் இந்த முகவரியில் இணையதளத்தை துவக்க இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொருவர் http://readysetcam.com/ எனும் முகவரியை பதிவு செய்திருக்கிறார். காமிராவில் உங்கள் வாழ்க்கையை பதிவு செய்யத்தயாராக இருங்கள் என்று இந்த முகவரிக்கான எண்ணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொருவர் http://www.neatcowork.com/ எனும் முகவரியை சமர்பித்திருக்கிறார். இணைந்து பணியாற்றுவதற்கு வழி செய்யும் வசதியை நீங்களும் துவக்குங்கள் என இதற்கான ஐடியாவாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://iamhappy.today/ எனும் முகவரியை ஒருவர் சமர்பித்துள்ளனர். இதற்கான விளக்கமாக புன்னகைக்கான ஸ்மைலியை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி விதவிதமான இணைய முகவரிகளை பார்க்க முடிகிறது. அவற்றுக்கான ஐடியாக்களையும் பார்க்க முடிகிறது. இந்த ஐடியா பிடித்திருந்தால், முகவரியை சமர்பித்தவரை தொடர்பு கொண்டு அதை வாங்கி பயன்படுத்தலாம்.

பயன்படுத்தாத இணைய முகவரிகளை அறிந்து கொள்வது பெரிய விஷயமல்ல. ஆனால் அவை எந்த நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டன என்பதை தெரிந்து கொள்வது, இணைய உலகில் எப்படி எல்லாம் புதுமையாக யோசிக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது. இப்படி அருமையாக யோசித்துவிட்டு, ஏன் செயலில் காண்பிக்காமல் இருக்கின்றனர் எனும் கேள்வியும் எழலாம்.

அடுத்த பெரிய இணைய நிறுவனத்திற்கான வெற்றிகரமான எண்ணம் தங்களிடம் இருக்கிறது எனும் நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பில் அதற்கான இணைய முகவரியை பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் எழுதப்படாத கவிதையைப்போல அந்த எண்ணங்கள் செயலுக்கு வராமலே இருக்கின்றன.

இப்படி, அடுத்த மகத்தான நிறுவனமாகும் எனும் நம்பிக்கையில் பதிவு செய்த முகவரிகளை ஏன் இன்னமும் அடை காத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதை நீங்கள் செய்யப்போவதில்லை என நன்றாகத்தெரியும். எனவே அதை பகிர்ந்து கொள்ளுங்கள். அதை யாரேனும் வாங்கிக்கொள்ளலாம் அல்லது, இப்படியாவது அதை செயல்படுத்தும் ஊக்கம் உங்களுக்கு வரட்டும் என இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்று பல இணைய முகவரி உரிமையாளர்கள் முகவரிகளை இந்த தளத்தில் சமர்பித்து வருகின்றனர். இவர்களில் ஒரு சிலரேனும் மீண்டும் உத்வேகம் பெற்று தாங்கள் துவக்க நினைத்த இணையதளத்தை துவக்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த முகவரிகளை பார்ப்பவர்களில் யாரேனும் தங்களுக்குள் மின்னல் கீற்றாக உத்வேகம் பெற்று புதிய நிறுவனத்தை துவக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதில் சமர்பிக்கப்படும் முகவரிகளுக்கு வாக்களிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்து மறக்கப்பட்ட இணைய முகவரிகளை பகிர்ந்து கொள்ள வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம். மிக எளியமையான எண்ணம் தான். ஆனால் இது செயல்வடிவம் பெற்றிருப்பதை பார்த்தால் அருமையாக இருக்கிறது. வெற்றிகரமான பலதளங்கள் இப்படி உருவானவை தான். இதில் பட்டியலிடப்படும் முகவர்களுக்கு பின் கூட இத்தகைய ஆற்றல் இருக்கலாம்.

டெட்.டொமைன்ஸ் தளம் இணைய கண்டறிதலுக்கான பிராடக்ட் ஹண்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தளத்தை துவக்கியுள்ள டிமா (@FZTSH) எனும் உறுப்பினர், சக உறுப்பினர் ஒருவரிடம், அவர் வைத்துள்ள ஐந்து முன்னணி இணைய முகவரிகள் குறித்து கேள்வி கேட்டதாகவும், அதை அடுத்து பல டிவிட்டர் பயனாளிகள் தங்களிடமும் அது போன்ற பயன்படுத்தப்படாத முகவரிகள் இருப்பதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ள டிமா, இதன் விளைவாகவே மறக்கப்பட்ட இணைய முகவரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் உத்தேசத்துடன் இந்த இணையதளத்தை துவக்கியதாக தெரிவித்துள்ளார். கோடிங் அனுபவம் இல்லாத அவர், இதுவே தான் உருவாக்கிய முதல் இணையதளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதே போலவே வேறு ஒருவர் டாப் பை.டொமைன்ஸ் (TopFive Domains) எனும் இணையதளத்தையும் துவக்கியிருக்கிறார். இதில் பலரும் தங்களிடம் உள்ள ஐந்து சிறந்த இணைய முகவரிகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். புதிய முகவரிகளை கண்டறியவும், வாங்கவும் இந்த தளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.