ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு கணக்குச் சொல்லும் 'ஸ்மார்ட்ப்ரோ'

0

எஸ்எம்எஸ் பிளாக்கரை உருவாக்கிய, ஆப்டினோ மொபைல் டெக் தற்போது 'ஸ்மார்ட்ப்ரோ' SmartBro எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்கள் தாங்கள் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள இந்தச் செயலி உதவும். ப்ரீபெய்ட் டேட்டா பிளானின் வேலிடிட்டி, அவர்களின் பயன்பாட்டுக் கட்டணம் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை நீக்குவதற்கு இந்தச் செயலி உதவும் என ஆப்டினோ நம்பிக்கை தெரவிக்கிறது. ஒரு டேட்டா பேக்கில் தாங்கள் எவ்வளவு செலவழித்திருக்கிறோம் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வதால் அவர்களது பணம் மிச்சமாகும். இந்த நோக்கத்தில்தான் ஸ்மார்ட்ப்ரோ வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல. ஸ்மார்ட்ப்ரோ மூலமாக ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைப் பராமரிக்க முடியும். உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் தனது நட்பு வட்டத்தில் உள்ள குடும்பத்தினர் ஒருவருக்கோ அல்லது நண்பர் ஒருக்கோ ரீச்சார்ஜ் செய்ய முடியும்.

இந்தச் செயலியை வடிவமைக்க 18 மாதங்கள் பிடித்தது. சாகர் பெட்முத்தா, அமோல் பெனார் எனும் ஆப்டினோ பொறியாளர்கள் இதை வடிவமைத்தனர். ஏற்கனவே இந்த நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, எஸ்எம்எஸ் பிளாக்கரின் வெற்றியைப் போல ஸ்மார்ட் ப்ரோ பத்து மடங்கு வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும் என நம்புகிறது ஆப்டினோ. இதுவரையில் ஸ்மார்ட்புரோ செயலியை 24 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். செயலி உலகில் ஆப்டினோவின் முதல் பிரவேசம் இது.

“ப்ரிபெய்டு சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையை இந்த செயலி போக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” என்கிறார் சாகர். தங்களது செயலி வாடிக்கையாளர்களுக்கு உகந்த திட்டங்களை தானாகவே பரிந்துரைக்கிறது என்கிறார் அவர்.

ஆப்டினோ குழு
ஆப்டினோ குழு

வளர்ந்து வரும் சந்தையில் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள வாய்ப்புக்களை முழுமையாக ஆய்வு செய்ததற்குப் பிறகுதான் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டது. இந்தியாவில் செல்போன் பயன்பாட்டாளர்களில் 95 சதவீதம் பேர் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள்தான். 10 கோடி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் சாதாரண ஸ்மார்ட் போன்களைத்தான் பயன்படுத்துகின்றனர். 2020ல் 40 கோடிப் பேர் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறது ஆப்டினோ.

வளர்ச்சிக்கான திட்டங்கள்

ஆப்டினோவை தற்போது நான்கு நபர் குழுதான் நிர்வகிக்கிறது. அந்தக்குழுவை விரிவாக்கவும் நிதி ஆதராத்தைப் பெருக்கவும் தனது தயாரிப்புகளை வளர்க்கவும் ஆப்டினோ திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் டேட்டா விஞ்ஞானிகளும், யூசர் இன்டர் பேஸ் பொறியாளர்களும் ஆப்டினோ குழுவில் இணைவார்கள். பல்வேறு மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் ஆப்டினோ அவர்களின் விளம்பரப் பயன்பாட்டிற்கு, தனது செயலியில் இருந்து பெறப்படும் தரவுகளை பயன்படுத்த விரும்புகிறது. பேமென்ட் கேட்வே மற்றும் முன்னணி ரீச்சார்ஜ் நிறுவனங்களுடனும் கைகோர்த்து செயலாற்றவும் ஆப்டினோ திட்டம் வைத்திருக்கிறது. தங்களது செயலியின் அளவு 2.3 எம்பிதான் எனச் சொல்லும் சாகர், ஸ்மார்ட் போன்களின் நினைவகத்தில் தங்களது செயலிக்கு மிகக் குறைந்த இடமே போதும் என்கிறார்.

“பல புதிய நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தை முயற்சிக்கின்றன. இந்தத் துறையில் உருவாக்கும் தரவுகளை நீண்ட கால அடிப்படையில் பணமாக்க முடியும்” என்கிறார் ஸ்டார்ட்டப் எக்சீட் நிறுவனர் வி.பாலகிருஷ்ணன்.

போட்டிகள் பற்றிக் கவலையில்லை

ஸ்மார்ட் ப்ரோவுக்கு போட்டியாளர்கள் உண்டு. ப்ரீபெய்ட் பேக் பில்லுக்காக முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட மப்பில் நெட்வொர்க் ஒரு போட்டியாளர். லட்சக்கணக்கான தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி மப்பிள். அது தவிர பில்பச்சோ, ஸ்மாட் ஆப் போன்ற நிறுவனங்கள் உள்ளன. ஆனால் எத்தனை போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் ஆப்டினோ கவலைப்படவில்லை. காரணம் உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பெரிய அண்ட்ராய்ட் சந்தையில் வெறும் ஆறு நிறுவனங்கள் மட்டுமே ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சேவை ஆற்றி வருகின்றன. கடைசியாக மொபைல் ஆப்பரேட்டர்களுக்குப் பயனளிக்கும் நிபுணத்துவத்துடன் டேட்டா சேவைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது ஆப்டினோ. எதிர்காலத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்தி விடலாம் என்ற அசையாத நம்பிக்கையில் இருக்கிறது இந்த நிறுவனம்.

செயலி பதிவிறக்கம் செய்ய: SmartBro

ஆக்கம்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா