2010-ல் ஒரு இயற்கை அங்காடியில் தொடங்கி இன்று 3 பன்பொருள் அங்காடிகள் நிறுவி லட்சங்களில் ஈட்டும் முன்னாள் ஐடி ஊழியர்!

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பொருட்களுக்கான விழிப்புணர்வு பெரிதும் இல்லாத காலத்திலும், துணிவுடன் அதில் தொழில் தொடங்கி இன்று அதை பெரிதளவில் விரிவாக்கம் செய்துள்ளார் அருண் மோகன்.

0

இன்று இயற்கை விவசாயமும், இயற்கை அங்காடிகளும் ஓர் தொழில் போக்காக இருந்தாலும் கூட 5 வருடங்களுக்கு முன்பு அதை பற்றிய விளிப்புணர்வோ அல்லது அதை ஒரு தொழில் யோசனையாகவோ எவரும் பார்க்கவில்லை. 2010 மற்றும் 11களில் ஆர்கானிக் பொருட்கள் என்பது ஒரு பிம்பமாகவே இருந்தது. ஆனால் அன்றைய காலகட்டத்திலே இயற்கை வளம் மீது பற்றுக்கொண்ட ஐடி ஊழியர் இயற்கை அங்காடியை நிறுவி, இன்று ஒரு சிறந்த தொழில்முனைவராய் முன்னேறியுள்ளார்.

அருண் மோகன்
அருண் மோகன்

அருண் மோகன் சென்னையைச் சேர்ந்த ஓர் ஐடி ஊழியர்; ஆனால் 2011 தனது ஐடி வாழ்க்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு இயற்கை அங்காடியை நிறுவி தன் தொழில்முனைவுப் பயணத்தை துவங்கிவிட்டார். 7 வருடங்கள் முன் துவங்கப்பட்ட ’விதை அங்காடி’ இன்று 3 பெரும் பல்பொருள் அங்காடியாக வளர்ந்துள்ளது.

“நான் ஐடி ஊழியராக இருந்தாலும் கூட விவசயாத்தின் மீது ஆர்வம் இருந்தது. அப்பொழுது நம்மாழ்வார் உடன் இணைந்து களத்தில் இறங்கி இயற்கை விவசயாத்தை பற்றி தெரிந்துக் கொண்டேன்...” என்கிறார் அருண்.

ஆரம்பத்தில் தன்னார்வத்தால் நம்மாழ்வாரை பின்பற்றினாலும் அதன் பின் அதை ஒரு தொழிலாக மாற்றும் சிந்தனை இவருக்கு தோன்றியது. ஆனால் அப்பொழுது இயற்கை அங்காடி மற்றும் இயற்கைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் இடத்தில் இல்லை, அதனால் இதை தொழிலாக செய்ய முடியுமா என்ற தயக்கம் அருணுக்கும் அவரைச் சுற்றியுள்ள நண்பர்களுக்கும் இருந்தது. இருந்தாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலாவது இயற்கை அங்காடி ஒன்றை நிறுவ வேண்டும் என முடிவு செய்தார் அருண்.

இயற்கை அங்காடியின் தொடக்கமும்; சந்தித்த சவால்களும்

ஏழு வருடம் ஐடி-யில் பணிபுரிந்த அருண் தனது இரு நண்பர்களுடன் இணைந்து 2011ல் ’விதை இயற்கை பன்பொருள் அங்காடி’ ஒன்றை அடையாரில் நிறுவினார். தான் இத்தனை வருடம் பணிபுரிந்த சேமிப்பில் இருந்து ஒரு தொகையையும், தனது இரு நண்பர்களின் சேமிப்பு தொகையையும் சேர்த்து மொத்தம் 10 லட்ச முதலீட்டுடன் தங்களது முதல் அங்காடியை நிறுவினார்.

“ஒரு நம்பிக்கையுடன் அங்காடியை திறந்தாலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்து பொருட்களை அப்பொழுது எங்களால் தர முடியவில்லை. மற்ற பன்பொருள் அங்காடியில் வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் ஆனால் இயற்கை அங்காடியில் அந்த வசதி இல்லை,”

என தான் முதலில் சந்தித்த சவாலை பகிர்கிறார் அருண். அங்காடியை நிறுவும் முன்பு தானும் தனது நண்பர்களும் சில கேள்விகளுடன் நோடிசை அடையார் சுற்றுபுறத்தில் கொடுத்து கணக்கெடுப்பு நடத்தினர். அதில் நல்ல வரவேற்பு கிடைக்க அதன் பின்னரே அங்காடியை நிறுவினர்.

பிராண்டுகள் மீது அதிக நம்பிக்கை இல்லாததால்; நேர்மையான இயற்கைப் பொருட்களை மட்டும் வழங்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்ததால் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பொருட்களை பெற்றனர். இயற்கை உணவு பொருட்களை பெற முடிந்த அருணுக்கு மக்கள் எதிர்பார்க்கும் ஊட்டசத்து மற்றும் அழகுசாதன பொருட்களை பெற முடியவில்லை.

முதலில் சமையலுக்குத் தேவையான அனைத்து இயற்கை பொருட்களையும் விநியோகம் செய்து, வாடிக்கையாளர்களுக்கு இதில் இருக்கும் ஊட்டச்சத்து பற்றி எடுத்துரைத்துள்ளனர். தங்களது அங்காடியிலே இயற்கை மருத்துவர்களை அழைத்து வந்து இயற்கைப் பொருட்களை பற்றிய விழிப்புணர்வை நடத்தினர்.

துணை நிறுவனரின் பிரிவும்; படிப்பினைகளும்

அங்காடி நிறுவி ஆறு மாதத்திற்குள் சில சந்தர்பத்தால் தனது இரு நண்பர்கள் விலக, தானே ஒருவராக அங்காடியை நடத்தும் நிலையில் இருந்தார் அருண்.

“கொள்கை சார்ந்த ஒரு தொழில் என்பதால் லாபம் ஈட்ட எனக்கு சில வருடங்கள் ஆனது. கடையை நிறுவி நான்கு வருடம் கழித்து தான் ப்ரேக்-இவன் புள்ளியை எனது நிறுவனம் தொட்டது,” என்கிறார் அருண்.

தொழில் தொடங்கி ஒரு வருடம் வரை பணிக்கு சென்றுவந்த அருண், வேலையில் இருந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தப்போதும் பணியில் இருந்து விலகி முழு மூச்சாக தொழிலில் இறங்கிவிட்டார்.

தொழில் துவங்கி மூன்று வருடம் எந்த லாபம் இன்றி அங்காடியை நடத்தி வந்தார். தனது அங்காடிக்கென வழக்கமான வாடிக்கையாளர்கள் இருந்தாலும் கூட பெரியதாக லாபம் ஈட்டும் வகையில் தொழில் அமையவில்லை.

“எந்த தொழில் எடுத்தாலும் உடனடியாக வெற்றிக்கனியை சுவைத்து விட முடியாது. கஷ்டத்திலும் குறைந்தது 3 வருடமாவது தொழிலை தொடர வேண்டும். அதன் பின் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் வியாபாரம் நடக்கும்,” என்கிறார்.

இயற்கை அங்காடியின் வளர்ச்சி:

நான்காம் வருடம் ப்ரேக்-இவன் புள்ளியை தாண்டி லாபம் ஈட்டத் துவங்கிய அருண் அதில் இருந்து திரும்பவில்லை. அதனை தொடர்ந்து இரண்டு கிளைகளை திறந்து, 3 பெரும் அங்காடிகளின் நிறுவனர் ஆனார். தற்பொழுது இன்னும் இரண்டு அங்காடிகளை திறக்க மும்முரமாக முயற்சித்து வருகிறார்.

“ஆர்கானிக் என்றாலும் கூட பிராண்டுகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை அதனால் நான் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெரும் பொருட்களின் அசல் தன்மையை வாடிக்கையாளர்களுக்கு நிரூபிக்க லேப் டெஸ்ட் செய்கிறேன்...”

ஆராய்ச்சி முடிவுகளை பொருட்களோடு வழங்குவது மூலம் அறிவியல் சார்ந்த ஆதாரத்தை வழங்க முடிகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை உயரும் என்கிறார் அருண்.

இதோடு நின்று விடாமல் தொழிலை மென்மேலும் வளர்க்க புதுமைகளை தன் அங்காடியில் புகுத்தியுள்ளார் அருண். அழுகு சாதன பொருட்களிலும் உண்மையான இயற்கை தயாரிப்புகளை மட்டுமே வைக்க வேண்டும் என்ற கொள்கை இருந்ததால் பழங்குடி மக்கள் சிறு தொழிலாக தொடங்கிய இயற்கை அழகு சாதன பொருட்களை தனது கடையில் எடுத்து வந்தார் அருண்.

பழங்குடியனர் ஒரு சிறிய பிராண்டாக அதை வளர்க்க, தற்பொழுது அவர்களின் தயாரிப்புகளுக்கென தனி வாடிக்கையாளர்கள் இருப்பதாக தெரிவிக்கிறார் அருண். தற்பொழுது ஆர்கானிக் அல்லாத பன்பொருள் அங்காடியில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் இவரது விதை இயற்கை அங்காடியிலும் கிடைக்கும்.

“எங்களது கடையில் எவர் சில்வரில் இருக்கும் அனைத்து சமையல் பாத்திரங்களும் மண் பாத்திரத்தில் கிடைக்கும். இதை செய்யும் குயவர்களிடம் இருந்து நேரடியாக இந்த பொருட்களை பெறுகிறோம்.”

பிரசர் குக்கர், தவா, டிப்ஃபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் என அனைத்தையும் மண் பாத்திரத்தில் வைத்துள்ளனர். இதில் சமைத்து உண்டால் ஊட்டச்சத்தும் சுவையும் கூடும் என்கிறார் அருண். மேலும் நமது தமிழ் பாரம்பரியத்தை நம் மக்களுக்கு நினைவூட்டும் என்கிறார். இந்த கோடைக்காலத்தில் மண் பாத்திரங்கள் மக்களை அதிகம் ஈர்ப்பதால் பொதுநலத்துடன் தன் தொழிலையும் உயர்த்துகிறார் அருண்.

புதுமைகள் இருந்தால் தான் தொழில் வளர்ச்சி அடையும் என்கிறார் இந்த தொழில் முனைவர். மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டும் அருண், 30 சதவீதம் வரை லாபம் ஈட்டுகிறார்.

தொடக்கத்தில் தொழில் நமக்கும் வருவாய் ஈட்டவில்லை என்றாலும் 4 வருடம் பொறுமையுடன் இருந்தால் நமது விடா முயற்சிக்கான பலனை நம் தொழில் தானாக நமக்கு தரும் என முடிக்கிறார் அருண். 

Related Stories

Stories by Mahmoodha Nowshin