புதுமையும் தொழில்நுட்பமும் விவசாயிகளை சென்றடைய உதவும் ஸ்டார்ட் அப்!

0

ரஜத் வர்தன், அசுடோஷ் திவாரி இருவரும் பண்ட்நகர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். இவர்கள் விவசாய வணிகத் துறையில் படித்தனர். விவசாயத் துறையின்  வளர்ந்து வரும் தொழில்நுட்பமும் புதுமைகளும் விவசாயிகளைச் சென்றடையவேண்டும் என்கிற நோக்கத்துடன் இவர்கள் AgroNxt நிறுவனத்தை 2016-ம் ஆண்டு துவங்கினர்.

”இந்தப் பகுதியில் மிகப்பெரிய வளர்ச்சி உள்ளபோதும் இத்தகைய தொழில்நுட்பங்களின் பலன்கள் விவசாயிகளைச் சென்றடைவதில்லை. இதற்கு முக்கியக் காரணம் இறுதி பயனரான விவசாயிகள் தொழில்நுட்பத்தை மெதுவாகவே ஏற்றுக்கொள்கின்றனர். அத்துடன் தனிநபர்கள், நிறுவனங்கள், ஆராய்ச்சி கூடங்கள் போன்ற புதுமை படைப்போரால் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கவோ புதுமையான தொழில்நுட்பங்களின் பலன்கள் விவசாயிகளை முறையாகச் சென்றடைவதற்குத் தேவையான பயிற்சியை அளிக்கவோ முடிவதில்லை,” 

என்றார் AgroNxt இணை நிறுவனர் அசுடோஷ்.

தொழில்நுட்பம் விவசாயிகளிடையே மெதுவாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த இடைவெளியை உணர்ந்த AgroNxt விவசாயம் தொடர்பான புதுமைகளை விவசாயிகள் அணுக உதவுகிறது. ஆய்வுக்கூடங்களில் இருந்து நேரடியாக விவசாயிகளிடம் எடுத்துச்சென்று விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுகிறது.

தற்கால தேவை

உலகில் பல்வேறு விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கும் நிலையில் விவசாய சமூகத்திடையே உற்பத்தித் திறன் எப்போதும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. தரவு உள்ளீடுகள் அதிகரிப்பு, செயற்கைக்கோள் படங்கள், தொழில்நுட்ப உதவி ஆகியவை விவசாயம் தொடர்பான நிலையற்ற தன்மையை குறைக்கும் வலிமை கொண்டவை.

விவசாய சமூகத்தினரைச் சென்றடைந்து அவர்களுக்கு பயிர் காப்பீட்டில் உதவவும் நீர்பாசனம் மற்றும் தொழிலாளர் செலவுகளை சேமிக்க வானிலை தரவுகளை ஆய்வுசெய்யவும் அரசாங்கம் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து செயல்படுகிறது. இருப்பினும் விவசாயக் கடன்கள், மோசமான உற்பத்தி, தரம் குறைவான விளைச்சல், அறுவடைக்கு முன்பும் பின்னரும் ஏற்படும் அதிக இழப்புகள் போன்றவை ஒரு ஹெக்டருக்கும் குறைவான நிலம் கொண்டிருக்கும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் விவசாய தொழில்நுட்ப புரட்சியில் இருந்து எட்டாத் தூரத்திலேயே இருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

”மாற்றம் நிகழ்கிறது. ஆனால் மெதுவாக உள்ளது. இதற்கு முன்பு அறுவடை செய்வதற்கும், இட மாற்றத்திற்கும் உதவக்கூடிய இயந்திரங்கள் வடிவிலேயே தொழில்நுட்பம் இருந்துவந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் சேவைகளுக்கு உதவுகிறது,” என்றார் 31 வயதான அசுடோஷ்.

இந்த இடைவெளியை நிரப்ப விரும்பினர். அத்துடன் விவசாய சமூகத்திற்கு தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்த்து இந்தத் தொழிலை லாபகரமாக மாற்றவேண்டும் என்பதே இவர்களது கனவு. இந்த காரணங்களுக்காகவே ரஜத் மற்றும் அசுடோஷ் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த பன்னாட்டு நிறுவன பணியை 2016-ம் ஆண்டு விட்டு விலகினர்.

”R&D மற்றும் ஆய்வு தொடர்பான பல்வேறு ப்ராடக்டுகளுக்கான சேவையளிக்கும் தளத்தை உருவாக்குவதற்கு சுமார் ஓராண்டு எடுத்துக்கொண்டோம்,” என்று அசுடோஷ் நினைவுகூர்ந்தார்.

கடந்த இரண்டாண்டுகளில் இவ்விருவரும் ஒரு தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கியுள்ளனர். இதில் வழக்கமான விவசாய முறைகளை துல்லியமான விவசாயமாக மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் சேவையளிக்கப்படுகிறது. உற்பத்தியையும் மண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் அனைத்து ப்ராடக்ட்களும் கவனம் செலுத்துகிறது.

பஞ்சாபில் இருக்கும் டார்ன் தாரான் பகுதியைச் சேர்ந்த 30 வயதான நவ்ரூப் சிங் போன்றோர் AgroNxt குழுவிடம் இருந்து நிகழ்நேர ஆலோசனை சேவைகளையும் விவசாய நிலம் சார்ந்த ஆதரவையும் பெறுகின்றனர்.

"ஒவ்வொரு விவசாயியைப் போன்றே நானும் முன்பு நெல் மற்றும் கோதுமையை மட்டுமே முழு நேரமாக பயிரிட்டு வந்தேன். AgroNxt செயலி வாயிலாக அவர்களது வழிகாட்டலையும் சாகுபடி நுட்பங்களையும் பின்பற்றி மிளகாய் பயிரிட்டு முயற்சித்தேன். முந்தைய பயிர்களுடன் ஒப்பிடுகையில் 70 சதவீத நேரத்திலேயே நான்கு மடங்கு லாபம் பெறுகிறேன்,” என்றார்.

AgroNxt சேவை மாதிரி

மொஹாலியைச் சேர்ந்த AgroNxt விவசாயிகளுக்கு உண்மையில் மதிப்பைக் கூட்டக்கூடிய புதுமைகளை தேடுகிறது. இந்த புதுமையைப் பொருளாகவோ அல்லது சேவையாகவோ உள்ளூரில் உருவாக்குகிறது. இந்த பொருள் அல்லது சேவை AgroNxt பார்ட்னர்களின் விநியோக சானல் பயன்படுத்தி விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. இவர்களது யூட்யூப் சானல் இந்த புதுமைகளை பயனருக்கு உகந்த விதத்தில் அவர்களது சொந்த மொழியில் ஒலி மற்றும் காட்சி வடிவில் காண்பிக்கிறது. இந்த சானலுக்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர்.

மேலும் தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய டிஜிட்டல் ஆலோசனையை விவசாய சமூகத்திற்கு வழங்கி விவசாயிகள் தொழில்நுட்பத்தை புரிந்துகொள்வதை AgroNxt உறுதிசெய்கிறது.

”நாங்கள் விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஒரு அணுகுமுறையை உருவாக்கியுள்ளோம். இது நிலையாகவும் புதுமையாகவும் மலிவாகவும் இருக்கும் விதத்தில் உருவாக்கியுள்ளோம்,” என்றார் அசுடோஷ்.

AgroNxt வழங்கும் ப்ராடக்ட் அல்லது சேவையில் இருந்து மதிப்பை உருவாக்க இயந்திரக் கற்றல், புவிசார் ஆய்வு, பிக் டேட்டா போன்ற சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

மேலும் விவசாய தனிநபருக்கு வலுவான தகவல் சேவைகளை துல்லியமான மற்றும் மதிப்பு சார்ந்த பகுப்பாய்வு வடிவில் வழங்குகின்றனர். மண், இடுபொருட்கள், பூச்சிக்கொல்லி, நீர்பாசனம் போன்றவை தொடர்பான தரவுகள் உருவாக்கப்படும். இந்தத் தரவுகள் விவசாயிகளுக்கு ஆலோசகர்களாகவே செயல்படும்.

இக்குழுவினர் விவசாயிகளுக்கு சேவைகளை வழங்க இரு முக்கிய அம்சங்கள் அடங்கிய மாதிரியைப் பின்பற்றுகின்றனர்.

1. உற்பத்தி அதிகரிப்பு

உற்பத்தியை அதிகரிக்க தர மதிப்பீட்டிற்கும் தண்ணீர், விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை விவேகத்துடன் பயன்படுத்துவதற்கும் உதவக்கூடிய புதுமைகள் விரும்பி தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதே போல் உற்பத்தியை அதிகரிக்க மரபணு மாற்றப்பட்ட விதைகள் (GM) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களையும் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். விவசாயிகள் பழங்கள், காய்கறிகள், பூக்கள், மீன்கள், கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை உள்ளிட்டவற்றிற்கு மாறவும் வழிகாட்டுகின்றனர்.

2. டிஜிட்டல்மயமாதல் மற்றும் நிதி உள்ளடக்கம்

மத்திய அரசின் டிஜிட்டல்மயமாக்கும் முயற்சி இணையம் மற்றும் மொபைல் பயன்பாட்டை ஊக்குவித்துள்ளது. அதில் பங்களிக்கும் விதத்தில் AgroNxt வலுவான பயிற்சி திட்டங்கள் வாயிலாக விவசாயிகள் தொழில்நுட்பத்தை அணுக உதவுகிறது.

”ஸ்மார்ட்ஃபோன்களை வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமல்லாமல் அவை இல்லாத விவசாயிகளும் தங்களது பிரச்சனைக்கு மலிவான புதுமையான தீர்வுகளைக் கண்டறிய பயிற்சியளிக்கிறது,” என்றார்.

தொழில்நுட்பம் வாயிலாக வருவாயை அதிகரித்தல்

விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக போராடுபவர்களாக இல்லாமல் லாபகரமான விவசாய தொழில்முனைவோராக மாறவேண்டும் என்கிற நோக்கத்துடன் புதுமை, மலிவு விலை, களத்தில் உடன் பணியாற்றுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி AgroNxt ப்ராடக்டுகளையும் சேவைகளையும் வழங்குகிறது.

இந்த ஸ்டார்ட் அப்பின் ப்ராடக்ட் மற்றும் சேவைகள் பின்வருமாறு:

1. இ-ஃபார்ம் NXT கார்ட் - டிஜிட்டல் மண் ஆரோக்கியம், நீர்பாசன சேவைகள், இடுபொருள் பயன்பாடு, மண் சார்ந்த பரிந்துரைகள் போன்ற டிஜிட்டல் விவசாய சேவைகளை மலிவு விலையிலான சந்தா மாதிரி வாயிலாக வழங்குகிறது.

2. Raiz Optimisation தொழில்நுட்பம் – ரசாயங்களல்லாத மண் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து ப்ராடக்ட் லைன்.

3. சிறு கருவிகள் – நிலத்தில் தொழிலாளர் திறனை மேம்படுத்தக்கூடிய விவசாய கருவிகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

4. இலவச ஆலோசனை மற்றும் டிஜிட்டல் விரிவாக்கம் – AgroNxt மொபைல் செயலி வாயிலாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இலவச டிஜிட்டல் ஆலோசனை வழங்கப்படுகிறது.

முறையான பயிர் பாதுகாப்புப் பொருட்களைப் பயன்படுத்தினால் பூச்சி தாக்குதலால் ஏற்படும் பயிர் இழப்பு குறைக்கப்பட்டு பயிர் உற்பத்தி 25-50 சதவீதம் வரை அதிகரிக்கும் என FICCI’s Next Generation Indian Agriculture – Role of Crop Protection Solutions குறிப்பிடுகிறது.

AgroNxt இடுபொருட்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைத்து விவசாய உற்பத்தியை அதிகரிக்க முயல்கிறது. இதனால் ஒரு ஏக்கருக்கான சாகுபடிக்கான செலவு குறைக்கப்பட்டு விவசாய லாபம் அதிகரிக்கப்படும்.

"அதாவது ஒரு விவசாயி சராசரியாக ஒரு மாதத்திற்கு விவசாயம் மற்றும் கால்நடை வாயிலாக 3,843 ரூபாய் வருவாய் ஈட்டினால், AgroNxt இந்த வருவாயை குறைந்தபட்சமாக 20 சதவீதம் அதிகரிக்கச் செய்யும். அதாவது ஒரு மாதத்திற்கு 769 ரூபாய் அதிகரிக்கும்,” என்றார் அசுடோஷ்.

வருங்கால திட்டம்

AgroNxt ஐஐடி கான்பூரால் இன்குபேட் செய்யப்பட்டு நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. பெங்களூரு, சிக்மா சோஷியல் ஸ்டார்ட் அப் ஆக்சலரேட்டர் திட்டத்தால் ஆக்சலரேட் செய்யப்படுகிறது. இது பஞ்சாபில் ஆண்டின் சிறந்த ஸ்டார்ட் அப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் இண்டியாவாலும் சத்தீஸ்கர் அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

க்ராப்இன் டெக்னாலஜீஸ், ஆக்சென் ஃபார்ம் சொல்யூஷன்ஸ், சேட்ஷ்யூர், Agricx Lab, அக்ரோஸ்டார், க்ரிஷிஹப் போன்ற பிற நிறுவனங்கள் விவசாய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் கால் பதித்திருந்தாலும் AgroNxt வணிக மாதிரி தனித்துவமானது என்கிறார் அசுடோஷ்.

”சிறந்த துறை பார்ட்னர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் போட்டியை தவிர்க்கவும் பார்ட்னர்களிடையேயான விற்பனையில் சிக்கல்களைத் தவிர்க்கவும் பல்வேறு பார்ட்னர்களை உருவாக்கக்கூடாது. இவ்விரண்டு கொள்கைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். இதனால் உள்ளூரில் செயல்படும் பிற நிறுவனங்களுடன் போட்டியிடுகிறோம். எங்களது ப்ராடக்டுகள் தனித்துவம் வாய்ந்ததாகவும் புதுமையாகவும் உள்ளது. எங்களது போட்டியாளர்கள் வழங்குவது தரக்குறைவான தீர்வுகளாகும்,” என விவரித்தார்.

2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாய் இருமடங்களாக வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கத்தில் பங்களிக்க விரும்புகிறார் அசுடோஷ்.

”இந்தியாவில் ஒரு இளைஞன் பட்டப்படிப்பு முடிந்ததும் தந்தைவழி நிலத்தில் கோதுமையும் நெல்லும் சாகுபடி செய்வது குறித்தே சிந்திப்பார் என்று நினைத்தேன். ஆனால் தற்போது அதே நபர் உலகளவிலான ப்ராண்டாக செயல்பட்டு ஜெர்பரா சாகுபடிக்கான வாய்ப்புகளையும் ஆராயமுடியும்,” என்றார். 

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா