அம்மாவின் திட்டில் இருந்து தப்பிக்க, இயந்திரம் ஒன்றை உருவாக்கிய 10 வயது மாணவன்!

ஜூஸ் தரையில் சிந்திவிட்டால் அம்மாவிடம் திட்டு வாங்காமல் இருப்பதைத் தவிர்க்க 10 வயது அர்மன் குப்தா, ரிமோட்டினால் இயங்கக்கூடிய ஈரப்பகுதிகளை சுத்தம் செய்யும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.

2

ஒரு பத்து வயது குழந்தை தரையில் ஜூஸை சிந்திவிட்டால் என்ன செய்யும்? மளமளவென யாரும் பார்ப்பதற்குள் அந்த இடத்தை சுத்தம் செய்துவிடும். அல்லது தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும். இந்த இரண்டு சூழல்கள் மட்டுமே நம் நினைவிற்கு வரும் அல்லவா? 

ஆனால் அர்மன் குப்தா இந்தச் சூழலால் ஈர்க்கப்பட்டார். சர் ஐசக் நியூட்டனின் வாழ்க்கையில் ஆப்பிள் பங்களித்தது போலவே இந்தச் சூழலும் ரிமோட்டால் இயங்கக்கூடிய சுத்தம் செய்யும் இயந்திரத்தை அவர் உருவாக்குவதற்கான வாய்ப்பை ஆராய வைத்தது.

”என் அம்மா திட்டுவார் என பயந்தேன். அருகில் வாக்யூம் கிளீனர் இருக்கிறதா என சுற்றுமுற்றும் பார்த்தேன். அது உலர்வான குப்பைகளை சுத்தம் செய்யவே பயன்படும் என்பதையும் ஈரமான பகுதியில் பயன்படுத்த முடியாது என்பதையும் உணர்ந்தேன். இதுவே என்னை சிந்திக்க வைத்தது,” என்கிறார்.

அர்மனின் புதுமையான படைப்புகளை நோக்கிய பயணம் இங்கிருந்துதான் துவங்கியது. இன்று ஐந்தாம் வகுப்பு மாணவரான இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சோமய்யா ரிசர்ச் இன்னோவேஷன் இன்குபேஷன் டிசைன் லேபரேட்டரியில் (RIIDL’s) தங்களது படைப்பை காட்சிப்படுத்திய புதுமை படைத்தோரில் இளம் நபராவார்.

பயணம்

அர்மன் மும்பை, சோமைய்யா வித்யாவிஹார் மாணவர். அவருக்கு எப்போதும் ரோபோடிக்ஸில் அதிக ஆர்வம் இருந்து வந்தது. அவரது விளையாட்டுகள் அனைத்தும் மெக்கானிக்ஸ் சார்ந்ததாக இருந்தது. வெவ்வேறு சாதனங்களைக் கொண்ட சிறு பொம்மைகளைக் கொண்டே விளையாடுவார். அவரது ஆர்வத்தை அறிந்த அவரது பெற்றோரான மனிஷி, நிதின் குப்தா இருவரும் அர்மனை அவரது பள்ளியில் அமைந்திருந்த இன்குபேஷன் டிசைன் லேப்பில் சேர்த்தனர்.

”தீபாவளி விடுமுறையின்போது எனக்கு சலிப்பாக இருந்தது. அப்போது நான் டிசைன் லேப் சென்று இன்குபேஷன் மையத்தில் உள்ள வழிகாட்டிகளுடன் பணியாற்றினேன். நாள் முழுவதும் அங்கே செலவிடுவேன்,” என அர்மன் விவரித்தார்.

விடுமுறைக்குப் பிறகும் அர்மன் தனது வகுப்பு முடிந்ததும் தொடர்ந்து அந்த மையத்திற்குச் சென்றார். காலை ஆறு மணிக்கு பள்ளிக்குத் தயாராவார். பள்ளி முடிந்ததும் மூன்று மணி முதல் மாலை ஏழு மணி வரை இன்குபேஷன் மையத்தில் பணியாற்றுவார். வீடு திரும்பியதும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் படிப்பார். இரவு 9.30 மணிக்கு படுக்கச் செல்வார். மேலும் வார இறுதி நாட்களை இன்னோவேஷன் மையத்திற்காகவே தன் நேரத்தை அர்ப்பணிப்பார்.

இவ்வாறு தொடர்ந்து பணிகளில் மும்முரமாக ஈடுபடும்போதும் அர்மன் சற்றும் களைப்படையவில்லை. மேம்படுத்தப்பட்ட இயந்திரம் தயாரானதும் முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்பட அவர் விரும்புகிறார்.

எனினும் ஆறு வயதான அவரது சகோதரர் அவரது சாதனங்களை உடைத்துவிடுவதே தற்சமயம் அவர் சந்திக்க நேரும் மிகப்பெரிய சவாலாகும்.

இயந்திரம்

அர்மனின் புதுமையான கண்டுபிடிப்பான ’தி மாப்பிங் மெஷின்’ சுத்தம் செய்து அதே சமயம் இடத்தை துடைத்து உலர்வாக வைத்திருக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனியாக அகற்றும் விதத்திலான ஸ்பாஞ்சுகளுடன்கூடிய இந்த இயந்திரம் டேபிளின் அடிப்பகுதி, தரை, ஓரங்கள் என வெவ்வேறு இடங்களை சுத்தம் செய்வதற்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இயந்திரம் நகரக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதால் பராமரிப்பதும் எளிதாகிறது.

”வீடு, அலுவலகம் மட்டுமின்றி தெருக்களை சுத்தம் செய்யவும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். இது பிரதமர் மோடியின் ’ஸ்வச் பாரத் அபியான்’ திட்டத்தில் பெரும் பங்களித்து மனித உடல் உழைப்பைக் குறைக்கும்,” என்றார்.

மனிதர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும்போது சந்திக்கும் பிரச்சனைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள அர்மன் வீட்டுவேலை செய்யும் பல்வேறு நபர்களுடன் உரையாடினார். இந்த திட்டத்தை நவம்பர் மாதம் துவங்கி ஒரு மாதத்தில் நிறைவு செய்தார்.

இளம் கண்டுபிடிப்பாளர்

இதற்கு முன்பு அர்மன் தனது மற்றுமொரு கண்டுபிடிப்பை கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் காட்சிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. இதில் முன்னணி ஐந்து கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவராவார்.

இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புதுமையான கண்டுபிடிப்பாளர்களுக்கான (grassroot innovators) நிகழ்வான ‘மேக்கர் மேலா’ என்கிற நிகழ்வு வாயிலாக அர்மன் தனது அடிப்படையான மாதிரியை மேம்படுத்தி நுகர்வோருக்கு ஏற்ற தயாரிப்பாக உருவாக்க உதவக்கூடிய முதலீட்டாளர்கள் மற்றும் கார்ப்பரேட்களுடன் இணைய விரும்புகிறார்.

தொழில்நுட்ப ஆர்வலர்கள், கிராஃப்டர்கள், கல்வியாளர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், அறிவியல் க்ளப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், மாணவர்கள், வணிக ரீதியாக தயாரிப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்துபவர்கள் போன்றோர் மேக்கர் மேலாவில் பங்கேற்பர்.

இந்த இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன் அவரது அடுத்த முயற்சியை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருப்போம்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL