உணவகங்களில் சலுகைகளை அள்ளி வழங்கும் பாக்கெட்இன் செயலி!

0

இந்தியாவின் உணவுத் தொழில்நுட்பத்துறை தன் சோதனைக்காலத்தில் உள்ளது. முன்னணி நிறுவனங்களான ஸோமேட்டோ(Zomato), டைனிஅவ்ல்(TinyOwl) போன்ற நிறுவனங்கள் தன் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்துவருகின்றன. ஆனால், இந்த பிரச்னைகளை எல்லாம் தாண்டி உணவு தொழில்நுட்பத்துறை இந்தியாவில் வளர்ந்துவரும் துறைகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட, பார்ட்டி பண்ண, டோர் டெலிவரி ஆர்டர் செய்ய யாருக்குத்தான் பிடிக்காது? அதோடு, கொஞ்சம் தள்ளுபடிகளும் சேர்ந்தால் நமக்கு கொண்டாட்டம்தானே.

உணவகங்களுக்காக, உணவுப்பிரியர்களுக்காக புதிது புதிதாய் ஐடியாக்கள் யோசித்து செயல்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் இளைஞர்கள். உணவகங்களை இணையமயமாக்கியதில் ஸோமேட்டோவின் பங்கு முக்கியமானது. ஆனால் போகவேண்டிய தூரம் இன்னும் நிறையவே இருக்கிறது. அதனால், புதிய நிறுவனங்களுக்கு இந்தத் துறையில் நிறையவே வாய்ப்புள்ளது.

உணவகங்களில் சென்று உணவருந்தும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நகரத்தில் வாழும் ஒரு இந்தியர், ஒரு மாதத்திற்கு சராசரியாக நான்கு முறை ஹோட்டல்களில் உணவருந்துவதாகவும் 1500லிருந்து 2000 ரூபாய் வரை அதற்காக செலவழிப்பதாகவும் தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம். இதபோக, மதிப்பு கூட்டப்பட்ட வரி, சேவை வரி, சேவைக் கட்டணம் ஆகியவை வேறு இருக்கின்றன. அவற்றை எல்லாம் சேர்த்தால் மேலும் 30 சதவீதம் வரை பில் உயரும்.

இதனாலேயே உணவகங்களில் தள்ளுபடிகளையும், சலுகைகளையும் எதிர்ப்பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

ஆனால் அப்படியான தள்ளுபடிகள் வழங்கும் உணவகத்தை தேடி கண்டுபிடிப்பது சுலபமல்ல. மணிக்கணக்கில் தேடி தள்ளுபடி கூப்பன்களை கண்டுபிடித்தாலும் அவை காலாவதியாகிவிடும் வாய்ப்புகளும் நிறையவே இருக்கிறது. அதுபோக, இந்தமாதிரியான தள்ளுபடி கூப்பன்களை எந்த அளவிற்கு நம்புவது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த மாதிரியான தள்ளுபடிகளை வழங்குவதில் ஈஸிடைனர்(Eazydiner), டைன்அவுட்(Dineout) ஆகிய தளங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் அவை நிலையான தள்ளுபடிகளையே வழங்குகின்றன.

வளர்ந்து வரும் இந்த உணவுத் தொழில்நுட்பத்துறையின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் 'பாக்கெட்இன்' (Pocketin). இந்த செயலி, எந்தெந்த உணவகங்களில் என்னன்ன சலுகைகள் ஆகியவற்றை நொடிகளில் தெரிவிப்பதோடு, அங்கே டேபிள் புக் செய்யவும் பயன்படுகிறது.

“கல்லூரியில் படிக்கும்போது அடிக்கடி வெளியே சென்று சாப்பிடுவோம். மாணவ பருவத்தில் காசு புழக்கம் குறைவாகத்தானே இருக்கும். எனவே சலுகைகள், தள்ளுபடி தரும் உணவகங்களை தேடிச் செல்வோம். ஆனால் அப்படியான உணவகங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாய் இருந்தது. எங்களுக்கு நிறைய உணவகங்களின் மேலாளர்கள் பழக்கம் என்பதால் ஒவ்வொருவருக்கும் போன் செய்து, அன்றைய தள்ளுபடி குறித்து விசாரிப்போம். ஆனால், இப்படிச் செய்வது சலிப்பாய் இருந்தது” என்கிறார் இந்த செயலியை வடிவமைத்தவர்களுள் ஒருவரான அனிருத்.

இந்தப் பிரச்னையை தீர்க்க, ஒரு தளத்தை நிர்மாணித்தார்கள். வாடிக்கையாளரின் பட்ஜெட் மற்றும் உணவருந்தும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் சலுகைகள் வழங்கும் உணவகங்கள் பற்றிய பட்டியலை எடுத்தார்கள்.

“இப்போது ஒவ்வொரு உணவகமாய் போன் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எங்களின் செயலி மூலமாகவே நீங்கள் விரும்பும் சலுகைகளை பெறலாம்” என்கிறார் அனிருத்.

பாக்கெட்இன் நம்பமுடியாத அளவிற்கு தள்ளுபடிகளை வழங்குகிறது. உணவகங்கள் பிஸியாய் இருக்கும் நேரங்களைவிட சாதாரண நேரத்தில் சென்றால் நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு சலுகைகள் கிடைக்கும்.

அதுபோக, உங்களுக்கு இன்னும் அதிகமாக தள்ளுபடி வேண்டுமென விரும்பினால் இந்த செயலி மூலம் அதை கோரிக்கையாக வைக்கலாம். பாக்கெட்இன் குழு அந்த தள்ளுபடியை பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பார்கள். இந்தத் தள்ளுபடிகள் அனைத்துமே நூறு சதவீதம் நம்பிக்கைக்குரியவை. இதற்காக எந்தவிதமான கூப்பனும் நீங்கள் எடுத்துச் செல்ல தேவையில்லை. நீங்கள் வெறுங்கையை வீசிக்கொண்டு சென்றால் போதும். ஹோட்டல் நிர்வாகத்திற்கு உங்களைப் பற்றிய தகவல் முன்னமே தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே டேபிளில் இருந்து சர்வர் வரை எல்லாமே ரெடியாக இருக்கும்.

பாக்கெட்இன் செயலி இந்த ஆண்டு பட்டம் பெற்ற மூன்று இளம் பொறியியாளர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்திய சுயதொழில் துறை இத்தகைய இளம் மாணவர்களின் வருகையால் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

அனிருத் தாப்பர் பல்கலைக்கழக பட்டதாரி ஆவார். ஷிட்ஜும், ராகுலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள். இந்த இளம் வயதிலேயே சுயதொழில் செய்கிறார்களா? இவர்களை எவ்வளவு தூரம் நம்புவது? என சிலர் கேள்வி எழுப்பலாம். இதற்கு இந்த இளைஞர்களின் பதில் என்னவாக இருக்கும்?

“கல்லூரி மாணவர்களின் ஆற்றலும் உற்சாகமும் ஈடு செய்ய முடியாதது. தைரியமாய் ரிஸ்க் எடுக்கும் துணிச்சலும், எந்த அளவிற்கும் இறங்கி வேலை செய்யக்கூடிய உறுதியும் இளைஞர்களிடம் மட்டும்தான் இருக்கின்றன” என பதில் சொல்கிறார் ஷிட்ஜ்.

சுயதொழில் தொடங்க வயது ஒரு தடையில்லை என்பது இவர்களின் கருத்து. கல்லூரி நாட்களிலேயே உணவகங்களுக்காக நிறைய ப்ராஜக்ட்கள் செய்திருப்பதால் இந்தத் துறையில் லாப நஷ்டங்கள் அனைத்தும் இவர்களுக்கு அத்துப்படி. இதனாலேயே தேடி வந்த வேலை வாய்ப்புகளை துறந்துவிட்டு சுயமாய் தொழில் செய்ய களத்தில் இறங்கிவிட்டார்கள். ராகுல் அமேசானில் கிடைத்த வேலையையும், அனிருத் பிராக்டோவில் கிடைத்த வேலையையும் துறந்திருக்கிறார்கள்.

செயல்பட தொடங்கிய மூன்று மாத காலத்திற்குப் பின் இப்போது வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றுவருகிறது பாக்கெட்இன். நூறு உணவங்களுக்கும் மேல் இடம்பெற்றிருக்கும் இந்த செயலியை இதுவரை ஐந்தாயிரம் பேர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

இந்த செயலி மூலம் இதுவரை 550க்கும் மேலான பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றின் மொத்த மதிப்பு 12 லட்சம் ரூபாய். மாதத்திற்கு சராசரியாய் நான்கு முறை வெளியே உணவருந்தும் நடுத்தர வர்க்கத்தினர்தான் இந்த செயலியின் முக்கிய வாடிக்கையாளர்கள். ஆனால் இந்த சராசரி அளவு மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான். சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் இந்த சராசரி முப்பத்தைந்தாக இருக்கிறது.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் நிதியுதவியோடுதான் இந்த செயலி தொடங்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட முதலீடு வர இருக்கிறது. அடுத்த ஓராண்டிற்குள் மூன்று நகரங்களையும் சேர்த்து 42 கோடி ரூபாய் அளவிற்கு இரண்டு லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதே இந்த நிறுவனத்தின் குறிக்கோள்.

ஆக்கம்- பர்தீப் கோயல் | தமிழில்- சமரன் சேரமான்