நமக்கு 'இறுதிச்சுற்று' கற்றுத் தரும் 10 வெற்றி வியூகங்கள்!

0

'ஸ்போர்ட்ஸ் - டிராமா' வகையில் மிகச் சிறந்த படங்களில் இருந்தும் நாம் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, தொழில் - வேலை - நிர்வாகம் சார்ந்த உத்திகளையும் பாடங்களையும் எளிதில் படிக்க முடியும். எல்லாப் படங்களிலும் இது சாத்தியமில்லை. முழுக்க முழுக்க விளையாட்டை மட்டுமே மையப்படுத்தி நேர்மையாக செதுக்கப்பட்ட படங்களில் மட்டுமே இது சாத்தியம். அந்த வகையில், அரிதினும் அரிதாக தமிழில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கட்டிப்போட்டிருக்கிறது 'இறுதிச்சுற்று'.

இயக்குனர் சுதாவின் அர்ப்பணிப்பு மிக்க ஆக்கம், மாதவன், ரித்திகா, நாசர் உள்ளிட்டோரின் கச்சிதமான நடிப்பு, சந்தோஷ் நாராயணின் சிலிர்க்க வைக்கும் இசை என படக்குழுவின் பக்காவான கூட்டு உழைப்பில் வெற்றி பெற்றிருக்கிறது இறுதிச்சுற்று. விளையாட்டு வீரர்களின் எழுச்சியும், தொழில்முனைவர்களின் வளர்ச்சியும் விடாமுயற்சி, புது உத்திகள், மேலாண்மைத் திறன்கள் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதே.

இந்த அடிப்படையில், 'இறுதிச்சுற்று' நமக்கு 10 முக்கிய வெற்றி வியூகங்களை எடுத்துச் சொல்கிறது. இப்படத்தைப் பார்க்கும்போது, கதையுடன் தொடர்புடைய குறிப்பிட்ட காட்சிகள் - சம்பவங்களின் மூலம் பாடங்களை உணருவர். 

அவ்வாறு உணர்ந்த வியூகங்களின் குறிப்பிடத்தக்க 10 அம்சங்களின் தொகுப்பு இதோ... எந்ததெந்த வியூகங்கள், எந்தக் காட்சிகளில் இருந்து எடுத்தாளப்பட்டது என்று சட்டென அறியும் கில்லிகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

1. பின்னடைவுகளைச் சந்திக்கப் பழகுங்கள்:

அரசியல், சமூகம், பொருளாதாரம், தனிநபர்கள் உள்ளிட்ட எந்தக் காரணங்களால் பின்னடைவுகள் ஏற்பட்டாலும், அதைக் கண்டு உற்சாகத்தை இழக்காமல் நேருக்கு நேர் சந்திக்கப் பழகுங்கள். எந்த சாதகங்களும் இல்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டாலும், ஒட்டியிருக்கும் மிகச் சில வாய்ப்புகளையும் பயன்படுத்துங்கள். இந்த அணுகுமுறையால் பின்னடைவுகளைப் பின்னுக்குத் தள்ளுவது சாத்தியமே.

2. ஒழுங்குகளை ஒதுக்காதீர்கள்:

எவ்வித ஒழுங்குகளும் தேவைப்படாதச் சூழலுக்குத் தள்ளப்பட்டாலும் நீங்கள் கடைபிடித்து வரக்கூடியதும், உங்கள் துறை - தொழிலுக்கு அவசியமானதுமான ஒழுங்குகளைப் பின்பற்றத் தவறாதீர்கள். அவ்வாறு நீங்கள் பின்பற்றக்கூடிய ஒழுங்குமுறைதான் உங்கள் தொழிலிலும் பணிகளிலும் ஈடுபாடு ஏற்படுவதற்கான தூண்டுதலை உண்டாக்கும்.

3. தெரிவுகளில் தேவை கவனம்:

உங்களுக்கான குழுவோ, உங்களுக்குத் தேவையான உதவியாளர்களோ, உங்களுக்குத் தேவையான நிபுணர்களோ, உங்களுக்குத் தேவையான ஊழியர்களோ எவராக இருப்பினும், அவர்களது பின்னணி, திறன்கள், தகுதிகளை அறிந்து கவனத்துடன் தெரிவு செய்யுங்கள். உண்மையில் ஈடுபாட்டுடன் உழைப்பவர்களுக்கும், ஈடுபாட்டுடன் உழைப்பது போல் பாவனை செய்பவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிந்து தேர்வு செய்யுங்கள்.

4. இழப்பதற்குத் தயங்காதீர்கள்:

பிற்காலத்தில் பலன் நிச்சயம் என்று உறுதிபட நம்பும் பட்சத்தில், உங்கள் உழைப்பையும் மூலதனத்தையும் செலவு செய்வதற்கோ, தற்காலிகமாக இழப்பதற்கோ தயங்காதீர்கள். சரியான நோக்கத்துடன் செலவிடும் எந்த உழைப்பும் பொருளும் வீண் ஆகாது. அதன் மூலம் உடனடி லாபமோ அல்லது எதிர்காலத்தில் லாபம் ஈட்ட வழிவகுக்கும் அனுபவமோ கிடைப்பது உறுதி.

5. உங்கள் குழுவின் தேவையை பூர்த்தி செய்வீர்:

உங்களுக்குக் கீழே பணிபுரியும் நபர்களின் சொந்த தேவைகளை அறியுங்கள். அது அவர்களது குடும்பம் சார்ந்த தேவைகளாக இருக்கலாம். அந்தத் தேவைகளை அவர்களே எளிதில் பூர்த்தி செய்வதற்கான வழிகளை வகுத்துத் தாருங்கள். அல்லது, அந்தத் தேவைகள் பூர்த்தியாக எந்த வகையிலும் உறுதுணையாக இருங்கள். அவ்வாறு அவர்களின் சொந்தத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும் பட்சத்தில், அவர்களின் சிந்தனைகளும் உழைப்பும் தொழில் ரீதியில் மட்டும் குவிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம். அதுவே, உற்பத்தித் திறனை வெகுவாகக் கூட்டும். குறிப்பாக, சொந்தப் பிரச்சினைகளை அவ்வப்போது கேட்டறிந்து உண்மையான அக்கறையுடன் அவற்றைக் களைய முயற்சி செய்யுங்கள்.

6. அப்டேட்டாய் இருத்தல் அவசியம்:

ஒரு விளையாட்டு வீரர், வீராங்கனைக்கு தினமும் உடற்பயிற்சியும் விளையாட்டுப் பயிற்சியும் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே எந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்கும் அத்தகைய அன்றாடப் பயிற்சிகள் தேவை. அதுவே, ஒரு குறிப்பிட்ட தொழிலிலோ அல்லது துறையிலோ ஒருவர் அப்டேட்டாய் இருப்பதற்கு துணைபுரியும். நிர்வகிப்பவர்கள் தங்கள் துறை சார்ந்த புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வதுடன், தங்களுக்குக் கீழே உள்ளவர்களையும் அதைச் செய்ய வகை செய்ய வேண்டும். அதற்கு உரிய நேரத்தையும், செலவுகளையும் கொடுப்பதுகூட எதிர்காலத்தில் பலன் தரக்கூடிய நல்ல முதலீடுதான் என்பதை உணர வேண்டும்.

7. பாத்திரம் அறிவதும் வெற்றி சூத்திரமே:

உங்கள் குழுவில் உள்ளவர்களின் தனித் திறன்கள், ஆர்வம், அர்ப்பணிப்பு மனோபாவம் முதலானவற்றை ஆராய்ந்து அறிந்திடுங்கள். அதற்கு ஏற்றபடி பதவிகளையும், வசதிகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தாருங்கள். வேலை செய்பவர்களுக்கு அதிக வேலையும், சும்மா இருப்பவர்களுக்கு சொகுசு வசதிகளும் அளிக்கும் போக்கு பலன் தராது. வேலை செய்பவர்களுக்கு உரிய பலன் போய் சேர்ந்தால், அவர்களின் அர்ப்பணிப்பு இரு மடங்கு ஆகும். 'எனக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை' என்று வெற்று அனுபவத்தின் அடிப்படையில் உங்களை எவரேனும் அணுகினால், அவர்கள் முகத்துக்கு நேரே அவர்களது செயல்பாடுகளைப் பட்டியலிட மறந்திடாதீர்கள். அதுபோன்ற இடங்களில் சமாளிக்க முற்படுவது பாதக விளைவுகளையே ஏற்படுத்தும்.

8. வாய்ப்புகள் பலவிதம்:

நீண்ட கால இலக்கோ அல்லது குறுகிய கால இலக்கோ எதுவாக இருந்தாலும் அதை அடைவதற்கு உரிய வாய்ப்புகளை முதலில் அறிந்து வையுங்கள். பின்னர், ஒவ்வொரு வாய்ப்பையும் மிகச் சிறப்பாக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கைகொடுக்காமல் போய்விட்டது என்பதற்காக சோர்ந்து விடாதீர்கள். அதே இலக்கை அடைவதற்கு உரிய வாய்ப்புகளைத் தேடி சென்றோ அல்லது உருவாக்கியோ முழு மூச்சுடன் முயற்சி செய்தால் நல்ல பலன் உறுதி.

9. உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள்:

தொழில், வேலை என்று வரும்போது, தனிப்பட்ட உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் மிக முக்கியம். இது எளிதான காரியம் அல்ல. 'அலுவலகத்துக்குப் புறப்பட்டவுடன் வீட்டையும், வீட்டுக்குக் கிளம்பியவுடன் அலுவலகத்தையும் மறந்திடுங்கள்' என்று சொல்வது உண்டு. இதைச் சொல்வது எளிது; ஆனால் செய்வது கடினம். மகிழ்ச்சியோ, கவலையோ, துயரமோ எதுவாக இருந்தாலும் அதை முழுமையாக வெளிப்படுத்தாமலும், அத்தகைய உணர்வுகளால் பாதிக்காமலும் நம் கடமைகளைச் செய்யுங்கள். இது கடினம்தான். எனினும், உரிய நேரத்தில் உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டால், உங்கள் செயலின் விளைவுகளும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்

10. சரியான இடங்களில் சரியான உத்திகள்:

எல்லா இடங்களிலும் எல்லாவிதமான உத்திகளையும் கையாள்வது என்பது பாதக விளைவுகளுக்கே வித்திடும். எந்த இடத்தில் எந்த உத்தியைக் கையாண்டால் உரிய பலன் கிடைக்கும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். உற்பத்தி, விற்பனை, சந்தைப்படுத்தல் முதலான எல்லா பிரிவுகளிலும் வெற்றியைத் தரும் உத்திகளை அறிந்து வைத்திருப்போம். அந்த உத்திகளை காலத்துக்கும், சூழலுக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, போட்டி நிறுவனங்களின் போக்குகளின் அடிப்படையில் நம் உத்திகளை சரியான நேரத்தில் சரியானபடி மாற்றி களம் காண்பது முக்கியம்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற ஊக்கம் அளிக்கக்கூடிய சினிமா கட்டுரைகள்

உங்களுக்காக நீங்களே போராடத் தயாராக வேண்டும்: சன்னி லியோன்' நமக்கு கற்று தந்த வாழ்க்கை தத்துவம்

'ஓடாத' சினிமாவுக்கும் உண்டு உலக மார்க்கெட்: வெற்றிமாறன் சொல்லும் வெற்றி மந்திரம்!

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்