ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், பழங்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் ஸ்டார்ட் அப்!

0

டெய்லி2ஹோம் (Daily2Home) ஸ்டார்ட் அப் 2014-ம் ஆண்டு அதுல் சௌஹன், சித்தார்த் சிங், கபில் சாஹு, ரவி தத் ஷர்மா ஆகிய நிறுவனர்களால் நிறுவப்பட்டது. ஆக்ராவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் சுயநிதியில் இயங்கி விவசாய தொழில்நுட்பப் பிரிவில் செயல்படுகிறது. ஃப்ரெஷ்ஷான காய்கறிகளை வாடிக்கையாளர்களின் வீடுகளில் விநியோகம் செய்து விவசாயிகளுக்கு நிலையான வருவாயை ஈட்டித் தருகிறது.

சமையலறையில் ஃப்ரெஷ்ஷாக விளைந்த பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பதில் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படும். இதில் ஆரோக்கியம் சார்ந்த பல நன்மைகள் உள்ளது. சுவையும் சிறப்பாக இருக்கும். ஆனால் நம்மைப் போன்ற நகரவாசிகளுக்கு ஃப்ரெஷ்ஷான காய்கறிகளும் பழங்களும் கிடைப்பதில்லை. நமக்கு கிடைப்பதைக் கொண்டே திருப்தியடையவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஆக்ராவைச் சேர்ந்த டெய்லி2ஹோம் போன்ற சில ஸ்டார்ட் அப்கள் இந்தப் பகுதியில் செயல்படத் துவங்கியுள்ளது. இந்த விவசாய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் ஆக்ரா மற்றும் மதுரா நகரில் இணையம் வாயிலாக ஆர்டர் செய்ததும் ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்கி வருகிறது.

கபில் சாஹு மணிப்பால் பாங்க் ஆஃப் பரோடா பயிற்சி நிறுவனத்தில் ப்ரொபேஷனரி அதிகாரிக்கான பயிற்சியாளராக இருந்தார். அப்போதுதான் அவருக்கு 2014-ம் ஆண்டின் துவக்கத்தில் அதுல் சௌஹனின் அறிமுகம் கிடைத்தது. ஒத்த சிந்தனையுடைய நபர்களான இவர்கள் எளிதாக ஒன்றிணைந்து தங்களது தொழில்முனைவுக் கனவு குறித்து விவாதிக்கத் துவங்கினர். 

”அதுல்; வேளாண் வணிகத்தில் முதுகலை பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிந்தித்தார். ஐஐஎம் அஹமதாபாத்தில் படித்த நாட்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விநியோக சங்கிலி முறையாக இல்லை என்பதையும் இதன் காரணமாக உணவுப் பொருட்கள் வீணாவது குறித்தும் படித்துள்ளார்,” என கபில் விவரித்தார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து அதுலின் நண்பரான சித்தார்த் சிங்கை அவர்களது முயற்சியில் இணைந்துகொள்ளுமாறு கேட்டனர். CAT பயிற்சி நாட்களில் இருந்தே அதுலுக்கு பரிச்சயமானவர் சித்தார்த். செயல்திட்டத்தை இறுதியாக முடிவு செய்தபிறகு மூவரும் இணைந்து 2015-ம் ஆண்டு தங்களது தொழில்முனைவுப் பயணத்தைத் துவங்கினர். அதுலின் மற்றொரு நண்பரான ரவி தத் ஷர்மா ஆரம்பத்திலிருந்து அவருக்கு உதவி வந்தார். 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் இவரும் முழு நேரமாக இணைந்துகொண்டார்.

இந்தப் பிரிவில் சிறு நகரங்களில் யாரும் செயல்படவில்லை என்பதை உணர்ந்தபோது அதுவே குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது. அப்போதுதான் டெய்லி2ஹோம் உருவானது. ஆக்ரா அதுலின் சொந்த ஊராக இருப்பதால் எளிதாக உதவி கிடைக்கும் என்று அந்தப் பகுதியே சோதனை முயற்சிக்குத் தேர்ந்தெடுக்கபட்டது.

அதுல் உணவு தொழில்நுட்பப் பொறியாளர் மற்றும் ஐஐஎம் அஹமதாபாத்தில் வேளாண் வணிக பட்டதாரி. கட்டி லாஜிஸ்டிக்ஸ் (Gati Logistics) நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். சித்தார்த் ஐஐஎம் லக்னோவில் வேளாண் வணிக பட்டதாரி. ஐஐஐடி ஜபல்பூர் முன்னாள் மாணவரான கபில் சாஹூ பேங்க் ஆஃப் பரோடாவில் ஒராண்டு பணிபுரிந்துள்ளார். ரவி ஆரம்பகட்டத்திலேயே முதலீடு செய்திருந்தாலும் பிறகுதான் இணைநிறுவனராக முறையாக இணைந்துகொண்டார்.

நிறுவனர்கள் அல்லாது 20-க்கும் அதிகமான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்கள் பகுதி நேரமாகவும் முழு நேரமாகவும் பணியாற்றுகின்றனர்.

இதுவரை கடந்து வந்த பாதை..

ஆரம்பத்தில் இந்நிறுவனம் பி2சி வணிகமாகவே செயல்படத் துவங்கியது. நாள் ஒன்றிற்கு 50 வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கத் துவங்கி இந்நிறுவனம் வளர்ச்சியடைந்து தற்போது 500 பி2சி வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்து வருகிறது. பி2பி பிரிவில் தி அக்‌ஷய பாத்ரா ஃபவுண்டேஷன், சப்வே, பிண்ட் பல்லூச்சி, சாகர் ரத்னா, கோலி வடா பாவ் உட்பட 90 வாடிக்கையாளர்கள் உள்ளனர். 2015-ம் ஆண்டு மே மாதம் பி2பி செயல்பாடுகள் துவங்கப்பட்டது.

பொருட்கள் அந்தந்த பகுதியை அடைந்ததும் அங்கிருந்து இறுதியாக வாடிக்கையாளரிடத்தில் விநியோகம் செய்யப்படுவது, அதிக தூரம் இருப்பினும் குறைவான ஆர்டர் அளவு இருப்பினும் தரமான சேவை வழங்கப்படுவதை உறுதிசெய்வது போன்றவையே ஆரம்பகால சிக்கல்களாக இருந்தது. குறைவான விலையிலான பொருட்களை வாங்குவது மற்றொரு பிரச்சனையாக இருந்தது. மேலும் விவசாயிகளிடம் கிடைக்கும் பொருட்கள் குறிப்பிட்ட பருவகாலத்திற்குரியதாகும். அதுல் கூறுகையில்,

 ”இந்த சவால்களை எதிர்கொள்ள முதலில் ஒரு குளிரூட்டப்பட்ட அறையை (cold room) அமைத்தோம். அத்துடன் நகரம் முழுவதும் உள்ள உள்ளூர் மளிகை கடைகளுடன் இணைந்து செயல்படுவதற்கான நெட்வொர்க்கை உருவாக்கினோம். இதனால் எங்களது டெலிவரி தொலைவு இரண்டு கிலோமீட்டருக்குள் இருக்கும் அளவிற்கு குறைந்தது. எங்களது நடவடிக்கைகளை மேலும் சிறப்பானதாக்க தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தோம். மேலும் எங்களது பி2பி வணிகத்தில் செயலி சார்ந்த ஆர்டர் செய்யும் முறை வெற்றிகரமாக இருந்தது."

எவ்வாறு செயல்படுகிறது?

மூன்று வகையான டெலிவரி உள்ளது. எக்ஸ்பிரஸ் டெலிவரி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மணி நேரத்தில் பொருட்கள் டெலிவர் செய்யப்படுவதை உறுதிசெய்கிறது (குறைந்தபட்ச ஆர்டர் அளவு 200 ரூபாய்). சாதாரண டெலிவரியில் இரண்டு மணி நேரமாகும் (குறைந்தபட்ச ஆர்டர் அளவு எதுவும் இல்லை). வாடிக்கையாளர் முன்னரே ஆர்டர் செய்திருந்தால் மறுநாள் காலையில் பொருட்கள் டெலிவர் செய்யப்படும். ஐந்து சதவீத தள்ளுபடியும் கிடைக்கும்.

வருவாய் மற்றும் எதிர்கால திட்டம்

நிதியாண்டு 17-18-ல் நிறுவனத்தின் வருவாய் 1.98 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஃப்ரெஷ் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான இந்திய சந்தை அளவு 200 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுவதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த Freshokartz, ஹூப்ளியைச் சேர்ந்த Freshbozz Ventures போன்ற சில வேளாண் ஸ்டார்ட் அப்கள் இரண்டாம் நிலை நகரங்களில் கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் ஜிடிபி-யில் விவசாயம் 15 சதவீதம் பங்களிக்கிறது. இதில் 30 சதவீதம் காய்கறிகள் மற்றும் பழங்கள் சார்ந்ததாகும்.

தற்போது டெய்லி2ஹோம் நான்கு மளிகை ஸ்டோர்களுடன் இணைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்நிறுவனம் ஆக்ராவில் 20-க்கும் அதிகமானோருடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. 

“நாங்கள் ஏற்கெனவே மதுராவில் எங்களது செயல்பாடுகளைத் துவங்கியுள்ளோம். இந்த நிதியாண்டில் ஜெய்ப்பூர், லக்னோ, இந்தூர், போபால் ஆகிய பகுதிகளில் செயல்பாடுகளைத் துவங்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார் கபில். 

மேலும், ”நிதியாண்டு 2019-ல் பி2சி பிரிவில் நாள் ஒன்றிற்கு 2,000 வாடிக்கையாளர்கள் என்கிற வீதத்தில் வாடிக்கையாளர் தொகுப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதே போல் பி2பி பிரிவில் சுமார் 150 வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். நிதியாண்டு 2019-க்கான வருவாய் இலக்கு 10 கோடி ரூபாயாகும். 2020-ம் ஆண்டுக்குள் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட விரும்புகிறோம்.”

வேறுபடுத்தும் காரணி

“பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் சிறப்பான விளைச்சலை கொடுக்கும் விவசாயிகளையும், பொருட்களின் சுவை, அளவு உள்ளிட்ட அதன் தனித்துவமான தன்மையை பராமரித்து சிறப்பான விளைச்சலை வழங்கும் விவசாயிகளையும் ஆதரித்து ஊக்குவித்து வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வாயிலாக விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறோம். அப்படிப்பட்ட பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் போன் வாயிலாக ஆர்டர் கொடுக்கலாம் அல்லது எங்களது பார்ட்னர் மளிகை ஸ்டோர்களில் வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டத்தை வரும் நாட்களில் மேம்படுத்த உள்ளோம்.

"தற்போது இரண்டு விவசாயிகளை மட்டுமே ஆதரித்து ஊக்குவித்து வருகிறோம். ஆனால் மழைக்காலத்தில் ஆக்ரா பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விளைச்சல் அதிகரிக்கும் சமயத்தில் 40 விவசாயிகள் வரை ஆதரிக்கிறோம்,” என்றார் கபில். 

இவ்வாறு உள்ளூர் விவசாயிகளை வாடிக்கையாளர்களிடையே ஆதரித்து ஊக்குவிப்பதுதான் இந்த ஸ்டார்ட் அப்பின் தனித்துவமான அம்சமாகும். விவசாய உற்பத்தி சந்தை குழு (APMC) மண்டியில் விவசாயிகளை கண்டறிகிறோம். அங்கிருந்து அவர்களுடன் இணைந்து கொள்கிறோம். அவர்களது விவசாய நிலத்திற்குச் சென்று அவர்களது செயல்முறைகளைக் கண்டு இணைப்பை உறுதிப்படுத்துகிறோம்,” என்றார் அதுல்.

கடந்த மூன்றாண்டுகளில் இந்நிறுவனத்தின் வணிக மாதிரி பி2சி ஆக வாடிக்கையாளர்கள் வீட்டில் டெலிவர் செய்யும் நிறுவனமாக செயல்படத் துவங்கி காய்கறிகள் மற்றும் பழங்களின் விநியோக சங்கிலியை நிர்வகிக்கும் நிறுவனமாக மாறியுள்ளது. ஃப்ரெஷ் காய்கற்கள் மற்றும் பழங்களை குறைவான கட்டணத்தில் டெலிவர் செய்வதில் குறிப்பாக இரண்டாம் நிலை நகரங்களில் விநியோகம் செய்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர் : சமீர் ரஞ்சன் | தமிழில் : ஸ்ரீவித்யா