சென்னையை சேர்ந்த ஆரோக்கிய ஸ்னாக் ஸ்டார்ட்-அப் ’SnackExperts’ இரண்டாம் கட்ட முதலீடை பெற்றது!

1

சந்தையில் கிடைக்கும் நம்கின் வகைகளால் அதிருப்தி அடைந்த சென்னையைச் சேர்ந்த மூன்று ஆரோக்கியப் பிரியர்கள் ஒன்று சேர்ந்து தொடங்கிய அரோக்கிய வகை ஸ்னாக்குகள் விற்பனை செய்யும் 'ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ்' (SnackExperts) தங்களது இரண்டாம் கட்ட நிதி அதாவது ப்ரீ சிரீஸ்-ஏ முதலீட்டை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் அதன் நிறுவனர்கள். 

நிறுவனம் தொடங்கி மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ’ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ்’, நிறுவனத்தில் முதல் கட்ட முதலீடு செய்திருந்த ரவி குருராஜ், அஜீத் குரானா, தாஹா நபி, ஸ்ரீனிவாசன் மற்றும் விசி கார்த்திக் ஆகியோர் நல்ல முறையில் வெளியேறியதும், இவர்களுக்கான இரண்டாம் கட்ட நிதி தற்போது கிடைத்துள்ளது. 

புதிய முதலீட்டாளர்களான தீப்தி ரஞ்சன் பட்னாயக் (அல்ட்ரேட் குழும தலைவர்), ஷோபித் ஆனந்த் தாஸ் (ஜிஎம்- அல்ட்ரேட் குழுமம்), ரோஹித் ஆனந்த் தாஸ் (பார்ட்னர் லீட் லா) மற்றும் நவ்னீத் க்ருஷ்ணா (வேதிக் ஃபோக்ஸ், நிறுவனர்) ஆகியோர் இணைந்து வெளியிடப்படாத நிதியை அளித்துள்ளனர் என்று ‘ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ்’ தெரிவித்துள்ளது. 

"நாங்கள் செயல்பாடுகளில் லாபம் ஈட்டத் தொடங்கி, லாபத்தை வளர்ச்சிப் பாதையில் முதலீடு செய்யும் நிலையில் உள்ளோம். எங்களின் வாடிக்கையாளரான ஷோபித், எங்கள் பிசினஸ் மாடலில் நம்பிக்கை ஏற்பட்டதால் ஸ்னாக் எக்ஸ்பர்ட்சில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளார். அவர் இந்த முயற்சியை எடுத்து தற்போது எங்கள் மேலாண்மை குழுவிலும் விரைவில் இணைகிறார்,” 

என்றார் நிறுவனர் அருள் முருகன். கிடைத்துள்ள இரண்டாம் கட்ட நிதியைக் கொண்டு ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ், தங்கள் பேக்கேஜிங், மற்றும் ஸ்னாகின் தரத்திற்கு பயன்படுத்தி, சந்தையில் ஒரு அழுத்தமான இடத்தை பிடித்து, அதிக வாடிக்கையாளர்களை சென்று அடைவதே திட்டம் என்கின்றனர்.  

முதலீடு பெற்றதை பற்றி பகிர்ந்து கொண்ட அருள் முருகன்,

“நிதியை விட எங்கள் இலக்குக்கு கிடைத்துள்ள சான்றிதழ் என்றே இந்த முதலீடை பார்க்கின்றோம். FMCG துறையில் வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பும் எதிர்காலமும் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். நம் அணுகுமுறை புதுமையாக இருந்தால் அதற்கான வரவேற்பு சந்தையில் எப்பொழுதும் இருக்கிறது,” என்றார். 

மேலும் விளக்கிய அருள், இது வெறும் நிதி முதலீடு அல்ல, தொழிலுக்கான ஸ்ட்ரடஜிக் முதலீடு என்றார்.

முதலீடு பெற பல தொழில்முனைவர்கள் முயற்சித்தும், தங்கள் தொழிலை விரிவுப்படுத்த நிதி இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனர்கள் கூறும் அறிவுரை என்ன என்று கேட்டப்போது,

“நாம் பொருளாதாரத்தை பெருக்கவும், வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தவும் கவனம் செலுத்த வேண்டும். முதலீடு கிடைக்கிறதோ இல்லையோ, நம் இலக்கு இரண்டு-மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தை லாபகரமாக ஆக்கவேண்டும் என்பதில் இருக்கவேண்டும். இது எல்லா துறைகளுக்கும் பொருந்துமா என எனக்கு தெரியவில்லை, ஆனால் நாங்கள் இதைத் தான் பின்பற்றிவருகிறோம்,” என்றார் அருள். 

லாபத்துடன் இயங்கிவரும் ஸ்னாக் எக்ஸ்பர்ட்சுக்கு இந்த நிதி வருங்காலத்தில் வரவிருக்கும் எதிர்ப்பார்க்காத சிக்கல்களை சமாளிக்க உதவியாக இருக்கும் என்று நிறுவனர்கள் நம்புகின்றனர். மேலும் முதலீட்டாளர்கள் அனைவரும் இந்திய சந்தையில் ஆழ்ந்த அனுபவமிக்கவர்கள் என்பதால் நல்லமுறையில் இது செல்லும் என்றனர். 

Snack Experts உருவான கதையை படிக்க: ஆரோக்கிய நொறுக்குத்தீனிகளை அளிக்கும் சென்னை 'ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ்'