ஆண்கள் ஃபேஷன் ஆடைகள் வாடகைக்கு தரும் நிறுவனம் நிறுவிய ஈரோட்டைச் சேர்ந்த ஷ்வேதா!

0

பெங்களூருவைச் சேர்ந்த ’கேண்டிட்நாட்ஸ்’ (CandidKnots) என்கிற ஸ்டார்ட் அப் ஷ்வேதா பொத்தார் என்பவரால் 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆன்லைன் வாடகை பிரிவில் செயல்படும் இந்நிறுவனம் ஆண்களுக்கான டிசைனர் ஆடைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

இந்திய சில்லறை வர்த்தகத்தில் ஃபேஷன் அதிக லாபம் தரும் பிரிவு. இந்தியாவில் தற்போது 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஃபேஷன் மற்றும் வாழ்க்கைமுறைப் பிரிவு அடுத்த ஐந்தாண்டுகளில் 15-20 சதவீதம் வளர்ச்சியடையும் என ஆன்லைன் ஃபேஷன் சந்தைப்பகுதியான மிந்த்ராவின் (Myntra) ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் ஆன்லைன் ஃபேஷன் வாடகை தளங்கள் Chanel, Sabyasachi போன்ற ஆடம்பர ப்ராண்டுகளிடம் இருந்து பெண்கள் மலிவு விலையில் டிசைனர் ஃபேஷன்களை பெறுவதை எளிதாக்கியுள்ளது. ஈரோடு பகுதியைச் சேர்ந்த விஐடி பட்டதாரியான ஷ்வேதா பொத்தார், ஸ்டார்ட் அப்பில் ஈடுபட தீர்மானித்தபோது இந்தப் பகுதி அவரது கவனத்தை ஈர்த்தது. 2016-ம் ஆண்டு ஃபர்னிச்சர் வாடகை முக்கியப் பிரிவாக செயல்பட்ட சமயத்தில் ஆன்லைன் ஃபேஷன் வாடகை பகுதியில் செயல்பட தீர்மானித்தார்.

ஷ்வேதாவின் குடும்பம் ஆடை வணிக பின்னணி கொண்டது என்பதால் சூரத் முதல் கொல்கத்தா வரை இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஃபேஷன் மற்றும் துணி சந்தையுடன் ஏற்கெனவே இணைப்பு இருந்தது. 

”இந்தச் சேவையை நான் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் இதற்கான வாடிக்கையாளர் தொகுப்பும் சந்தையும் உள்ளது என்பதையும் நான் அறிவேன். ஆனால் என்னுடைய குடும்பத்தினர் வாடகை பிரிவு சார்ந்த சந்தையில் செயல்படுவது குறித்து அதிக நம்பிக்கையின்றி இருந்தனர். கூட்டு நுகர்வு மாதிரியின் (sharing economy) வளர்ச்சி குறித்து அவர்களை சம்மதிக்கவைக்க வேண்டியிருந்தது.”

’கேண்டிட்நாட்ஸ்’ ஷ்வேதாவின் சேமிப்புத் தொகையான 10 லட்ச ரூபாயைக் கொண்டு சுயநிதியில் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஃபேஷன் ஆடைகளுக்கான ஆன்லைன் வாடகை தளமாக பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன்லைன் பேஷன் வாடகை பிரிவில் Flyrobe, Liberent போன்ற அங்கீகரிக்கப்பட்ட பிரபல நிறுவனங்கள் செயல்படும்போதும் பெண்கள் தேர்வு செய்யமுடியாமல் தவிப்பதை ஷ்வேதா உணர்ந்தார்.

பெண்கள் ஃபேஷனில் அதிக ஆர்வம் காட்டும் நிலையில் ஆண்கள் பெரும்பாலான சமயங்களில் அதிகம் சிந்திக்காமல் கருப்பு சூட்டையே தேர்ந்தெடுப்பார்கள். ஆன்லைன் வாடகை பகுதியில் ஆண்களுக்கான ஃபேஷனில் சாத்தியக்கூறுகள் இருப்பதை உணர்ந்த ஷ்வேதா அந்தப் பகுதியில் கவனம் செலுத்தினார்.

”ஆடைகளைப் பொருத்தவரை பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் அதிகம் சிந்திக்கமாட்டார்கள் என தரவுகள் தெரிவிக்கிறது. கேண்டிட்நாட்ஸ் ஏற்கெனவே பெண்களைக் காட்டிலும் அதிக ஆண்களைக் கவர்ந்து வருகிறது. மேலும் பெண்களுக்காகவே பிரத்யேகமாக இயங்கும் ஃபேஷன் வாடகை ஸ்டார்ட் அப்கள் மூடப்பட்டுவிட்டது. எனவே ஆண்கள் ஃபேஷனில் கவனம் செலுத்த தீர்மானித்தேன். லாபகரமாக செயல்பட்டு வருகிறோம்,” என்றார் ஷ்வேதா.

பல ஆன்லைன் வாடகை தளங்கள் மூடப்பட்டதால் ஆரம்பத்தில் கேண்டிட்நாட்ஸ் உடன் இணைய பல வடிவமைப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. எனினும் இரண்டாண்டுகளில் இந்த ஸ்டார்ட் அப் ஆறு வடிவமைப்பாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தியது. அத்துடன் கிளாசிக் வடிவமைப்புகளுக்காக நிறுவனத்திற்குள்ளாகவே அமைக்கப்பட்ட ஒரு சொந்த ப்ராண்டும் உள்ளது.

கேண்டிட்நாட்ஸ் சிறப்பு தருணங்களுக்கான மற்ற துணைப்பொருட்களுடன் டக்சிடோஸ், சூட், ஷர்வானி, ப்ளேசர்ஸ், பண்டி, பந்த்கலா, இந்திய-மேற்கத்திய கலவை ஆடைகள் போன்றவற்றையும் வழங்குகிறது. 45 வயதிற்கும் குறைவான ஆண்களை இலக்காகக் கொண்டுள்ளது.

28 வயதான ஷ்வேதா Akamai, ஹெச்எஸ்பிசி, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார்.

சுயநிதியுடன் இயங்கி விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது

டிசைனர் ஆடைகளின் உண்மையான விலையிலிருந்து 10-15 சதவீத தொகைக்கு வாடகை அடிப்படையில் கிடைக்கும். நீங்கள் ஒவ்வொரு சிறப்புத் தருணத்திலும் வெவ்வேறு ஆடைகள் அணிந்தாலும் ஒரே ஒரு ஆடையின் விலையைக் காட்டிலும் குறைவாகவே நீங்கள் செலவிட நேரிடும்.

தொழில்முனைவோர் பலர் ஸ்டார்ட் அப்பை அறிமுகப்படுத்தும் சமயத்திலேயே நிதி உயர்த்துவார்கள். ஆனால் ஷ்வேதா முதலில் லாபத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டார். 

“ஒரு நிறுவனராக தனியாகவே செயல்படுவதால் நிதி உயர்த்த எனக்கு நேரமில்லை. ஒரு குழுவை நியமித்திருந்தபோதும் நிறுவனத்தில் ஆரம்ப கட்டத்தில் செயல்முறைகளை அமைப்பது தொடர்பான பணிக்கு என்னுடைய முழு நேர ஈடுபாடு அவசியமாக இருந்தது,” என்று யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார்.

தற்போது ஷ்வேதாவின் குழுவில் 12 பேர் உள்ளனர். என்ஐடி திருச்சி முன்னாள் மாணவரான 24 வயது ரிஷி பொத்தார் ஷ்வேதாவின் சகோதரர். இவர் ப்ராடக்ட் டெவலப்மெண்ட் குழுவை வழிநடத்துகிறார். விஐடி-யைச் சேர்ந்த 27 வயதான புனீத் ஜெயின் மார்கெட்டிங் தலைவராக பொறுப்பேற்று பாணிகளைத் தொகுக்க உதவுகிறார்.

ஷ்வேதா ஆரம்ப நாட்களை நினைவுகூர்ந்தார். 

“எனக்கு மென்பொருள் பொறியியல் பின்னணி உள்ளது. உடலுழைப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் உரையாடுவது மாறுபட்ட அனுபவமாக இருந்தது. பொதுவாக நான் அதிக சுதந்திரம் கொடுப்பேன். ஆனால் தற்போது சிறு விஷயங்களையும் கட்டுப்பாட்டில் கொண்டுவர கற்றுக்கொண்டு அதற்கேற்ப என்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளேன்,” என்றார்.

பரந்த வாடிக்கையாளர் தொகுப்பு

ஒருவர் அடுத்தவருக்கு பரிந்துரைக்கும் முறையே இந்த வணிகம் வெற்றியடைய உதவியதாக தெரிவிக்கிறார் ஷ்வேதா. ”திருமணங்கள் அதிகம் நடைபெறும் காலகட்டத்தில் எங்களது பழைய வாடிக்கையாளர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருகின்றனர். ஒரே திருமணத்திற்கு குடும்பத்தின் ஒவ்வொருவரும் ஆடைகளை வாடகை அடிப்படையில் எடுத்துச்செல்கின்றனர். இது நிச்சயம் செலவைக் குறைத்து அவர்களுக்கு பலனளிக்கிறது,” என்றார் ஷ்வேதா.

திருமணங்கள் மட்டுமின்றி திருமணத்திற்கு முன்பு எடுக்கும் புகைப்படங்கள், பேஷன் ஷோக்கள், சந்திப்புகள், மாநாடுகள், நேர்காணல்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள், கல்லூரி விழாக்கள், ஆண்டு விழாக்கள் போன்றவற்றிற்கு ஆண்கள் ஆடைகளை வாடகை முறையில் பெற்றுக்கொள்கின்றனர். லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோக அமைப்பும் இவர்களது நிறுவனத்திற்குள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளது. துணி, நிறம், பேட்டர்ன், விலை என இவர்களது ஆடைத் தொகுப்பு தரவுகள் சார்ந்தும் வாடிக்கையாளர்களின் கருத்து மற்றும் தேவைகள் சார்ந்தும் தொகுக்கப்படுகிறது.

இன்று ஒரு ஆண்டிற்கு சுமார் 6,000 ஆர்டர்கள் பெறுகின்றனர். சராசரி ஆர்டர் அளவு 1500 ரூபாயாகும். கடந்த பன்னிரண்டு மாதங்களில் இவர்களது விற்றுமுதல் சுமார் 80 லட்ச ரூபாயாகும். இதில் 40 சதவீத வாடிக்கையாளர்கள் ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள்ளாகவே இவர்களது சேவையைப் பெற மீண்டும் வருகின்றனர்.

உத்திகள்

பெங்களூருவில் கேண்டிட்நாட்ஸின் ஸ்டோர் உள்ளது. இது ஷோரூமாக இல்லாமல் அலுவலகம் போன்றே செயல்படுகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் வாடகைக்கு எடுப்பதற்கு முன்பு ஆடைகளை முயற்சி செய்து பார்க்கலாம். வலைதளம் வாயிலாக பெறும் ஆர்டர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ராடக்டை வெவ்வேறு அளவுகளில் அனுப்பி வைக்கின்றனர். அலுவலகத்திற்கு வருகை தருவோரில் 95 சதவீதம் பேர் இவர்களது ப்ராடக்டை வாங்குவதாக தெரிவித்தார் ஷ்வேதா. 

”எங்களது வாடிக்கையாளர்களில் 40 சதவீதம் பேர் அலுவலகத்திற்கு வருகின்றனர். இவர்களே அடிக்கடி அன்லைனிலும் வருகை தருகின்றனர்,” என்றார்.

கேண்டிட்நாட்ஸ் பெங்களூருவில் மூன்று மணி நேரத்தில் இலவச டெலிவரி வழங்குகிறது.

ஆர்டரை ரத்து செய்வதும் திரும்ப அளிப்பதும் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஏனெனில் கேண்டிட்நாட்ஸ் ஒவ்வொன்றையும் பல்வேறு அளவுகளில் வைத்துள்ளது. நிறுவனத்திற்குள் அமைக்கப்பட்ட வடிவமைப்புகளில் ஒரு சில வாடகை பரிவர்த்தனைகளிலேயே செலவு ஈடுசெய்யப்பட்டுவிடுவதே இத்தகைய வாடகை மாதிரியில் செயல்படுவதால் கிடைக்கும் நன்மையாகும். அதன் பிறகு தொடரும் வணிகம் அனைத்தும் லாபமே.

இந்த ஸ்டார்ட் அப் ஏற்கெனவே லாபகரமாக செயல்பட்டு வருகிறது. டெல்லி மற்றும் மும்பை பகுதியில் விரிவடைய நிதி உயர்த்த திட்டமிட்டு வருகிறது. கேண்டிட்நாட்ஸ் சந்தா சேவையை துவங்கவும் திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : அதிரா ஏ நாயர் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL