தொலைந்த கனவை மீட்ட ஐயர்ன்வுமன் வினோலி ராமலிங்கம்!

உலகம் முழுவதிலும் மிகவும் கடினமான ஒருநாள் போட்டியாக பார்க்கப்படும் ’ஐயர்ன்மேன் ட்ரையத்தலான்’ல் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்து 2 முறை சாதனை படைத்துள்ளார் சென்னைப் பெண் வினோலி ராமலிங்கம்.

0

சிறு வயதில் பெண் குழந்தைகளுக்கு இருக்கும் கனவு அவர்கள் வளரும் சூழல், கல்விக்கு முக்கியத்துவம், படித்து முடித்தபின் வேலை என்று சிதைந்து விடுகிறது. பெண்மைக்கான இந்த எல்லா கடமைகளும் முடிந்த பின்னர் குடும்பத்தினருக்காகவே பின்னால் இருந்து இயக்கி வாழ்க்கையின் மீதி ஜீவனை போக்கிவிடுவர் பெண்கள். இவற்றில் இருந்து மீண்டு தங்களது கனவை நிறைவேற்றிக் கொள்பவர்கள் சிலரே.

எதேச்சையாக செய்த ஒரு விஷயம் வினோலி ராமலிங்கம் வாழ்க்கையில் அப்படியொரு மேஜிக்கைத் தான் செய்திருக்கிறது. உலகிலேயே மிகவும் கடினமான ஒரு நாள் விளையாட்டு நிகழ்ச்சியாக பார்க்கப்படும் ட்ரையத்தலானை இரு முறைகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடித்து சாதனை படைத்துள்ளார் வினோலி. 

படஉதவி : முகநூல் பக்கம்
படஉதவி : முகநூல் பக்கம்

வினோலியைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் ஐயர்ன்மேன் ட்ரையத்தலான் என்றால் என்ன என்று பார்க்கலாம். ஏனெனில் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி எத்தனை கடினமானது என்பதை தெரிந்து கொண்டால் தான் வினோலி 33 வயதில் இதனை எப்படி வெற்றியானதாக்கிக் கொண்டார் என்பது புரியும். 

ஐயர்ன்மேன் ட்ரையத்தலான் என்பது 180 கி.மீ சைக்கிளிங், 42 கி.மீ ஓட்டம், 3.8 கி.மீ நீச்சல் ஆகியவற்றை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும். இதெல்லாம் தூசி என்று நினைக்கிறீர்களா? அங்க தான் ட்விஸ்ட் உலக ட்ரையத்தலான் கழகம் நடத்தும் இந்த 3 போட்டிகளையும் ஒரே நாளில் 17 மணி நேரத்தில் முடித்துக் காட்ட வேண்டும். இப்போது புரிகிறதா எவ்வளவு கடினம் என்று. சரி இப்போது வினோலி இந்த வெற்றியை அடைய எத்தனை சிரமப்பட்டார் என பார்க்கலாம்...

பெரம்பலூர் மாவட்டம் ஒகலூரைச் சேர்ந்த வினோலி பள்ளிப் பருவத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களாக வாங்கிக் குவித்துள்ளார். இளம் வயதிலேயே அவருக்குள் ஒரு விளையாட்டு வீரர் இருந்த போதும் அந்த எண்ணங்களை குழி தோண்டி புதைத்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். பள்ளி, கல்லூரிப் படிப்புகள் முடிந்து பட்டம் பெற்ற பிறகு தஞ்சாவூரில் தனியார் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.

படித்து முடித்து வேலையிலும் சேர்ந்த பின்னர் திருமண ஏற்பாடுகள் நடக்க ராகேஷை மணந்து கொண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்து குடும்பம் நடத்தத் தொடங்கியுள்ளார் வினோலி. வினோலிக்கு வினேஷ் என்ற மகனும் இருக்கிறார் அவர் தற்போது 2ம் வகுப்பு படித்துவருகிறார்.

மே மாதம் 2016ம் ஆண்டில் அவருடைய வீட்டு வாசலில் கிடந்த துண்டு பிரசுரத்தில் இருந்த செய்தி வினோலி வாழ்க்கையை புரட்டிப் போட்டது. சென்னையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒட்டியம்பாக்கத்தில் தனியார் அமைப்பு ஒன்று நீச்சல் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது, அதில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார் வினோலி.

”நீச்சல் போட்டியில் நான் கலந்து கொண்டதற்கு முக்கியக் காரணம் வேலைப் பளுவின் காரணமாக இருந்த அழுத்தம் நீங்க வேண்டும் என்பதே, ஆனால் தண்ணீருக்குள் குதித்த அந்த நொடியில் எனக்கு மிகவும் பிடித்த நீச்சலை நான் எவ்வளவு இழந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் வினோலி.
படஉதவி : முகநூல் பக்கம்
படஉதவி : முகநூல் பக்கம்

இதனைத் தொடர்ந்து நீச்சல் பயிற்சியை தினமும் எடுக்கத் தொடங்கியுள்ளார். திருமணம், குழந்தைப்பேறு காரணமாக குண்டாகிப் போன உடலை மீண்டும் இளைக்கச் செய்வது வினோலிக்கு பெரிய சவாலானதாக இருந்துள்ளது. ஏனெனில் பயிற்சி தொடங்குவதற்கு முன்னர் வினோலியின் உடல் எடை 80 கிலோ. எனினும் நம்பிக்கையை இழக்கவில்லை 3 மாதத்தில் நடக்க உள்ள ட்ரையத்தலான் போட்டியில் பங்கேற்க பதிவும் செய்துவிட்டதால் விடாமுயற்சியோடு போராடி இருக்கிறார்.

வினோலியின் பொழுது அதிகாலை 3.30 மணிக்கே தொடங்கிவிடும். அவரது வீடு அமைந்துள்ள மாடம்பாக்கம் அருகில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து இல்லாத அதிகாலை சமயத்தில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியை எடுத்து வந்துள்ளார். வினோலியின் கணவர் ராகேஷ் அவருக்கு துணையாக காரில் தனது மகனை தூங்க வைத்துக் கொண்டே வினோலி பயிற்சிக்கு உந்துதல் அளித்துள்ளார். வினோலியின் பயிற்சிகள் முடிக்க காலை 6.30 முதல் 7 மணி வரை ஆகிவிடும் அதுவரை வினேஷ் காரிலேயே தூங்கி எழும்பவும் வினோலி பயிற்சியை முடிக்கவும் சரியாக இருக்கும்.

பயிற்சி முடித்த கையோடு வீட்டிற்கு வந்து சமையல் வேலைளை செய்து முடித்துவிட்டு, வினேஷையும் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது வீட்டில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர் பணிக்காக சென்றிருக்கிறார் வினோலி. பணி முடிந்து திரும்பும் போது வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் வேளச்சேரியில் உள்ள அரசு நீச்சல் பயிற்சி கூடத்திற்கு சென்று நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்டு அதன் பின்னரே வீட்டிற்கு சென்று மற்ற வேலைகளை பார்த்திருக்கிறார். படிப்பதற்குள்ளாகவே நமக்கு தலை சுற்றுகிறதே வினோலி தினமும் இதையே தான் வழக்கமாக செய்து வந்திருக்கிறார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்ற முதல் போட்டி வினோலிக்கு தோல்வியையே தந்தது, எனினும வினோலியின் நீச்சல் நுணுக்கங்களை பார்த்து வியந்த ஏற்பாட்டாளர்கள் மேலும் கடினமாக நீச்சல் பயிற்சி எடுக்க ஊக்கமளித்துள்ளனர். 

ஓராண்டுக்குப் பிறகு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற அரை மற்றும் முழு  ஐயர்ன்மேன் ட்ரையத்தலான் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். அந்த நிமிடத்தில் இனி விளையாட்டு தான் தனது வாழ்க்கை என்று தீர்மானித்தவர் பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார்.

படஉதவி : முகநூல் பக்கம்
படஉதவி : முகநூல் பக்கம்
பெண் என்பதால் சாதிக்க முடியாது கனவுக்கு முற்றுப்புள்ளி தான் என்றும், குடும்பச் சூழல், வேலைப்பளுவையும் காரணமாக நினைத்து தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் பெண்களுக்கு மத்தியில் குடும்பம், பணி என எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் நம்பி களமிறங்கிய வினோலி இன்று உலகம் வியக்கும் வீரர்கள் பட்யலில் சேர்ந்திருக்கிறார். 

சென்னையில் இருந்து இதுவரை பெண்கள் யாருமே இந்த போட்டிகளில் பங்கேற்காத நிலையில் முதன்முதலில் சொந்த முயற்சியில் சர்வதேச நாடுகளில் நடக்கும் ஐயர்ன்மேன் ட்ரையத்தலான் போட்டியில் பங்கேற்றிருக்கிறார் இவர்.

2017 செப்டம்பரில் பார்சிலோனாவில் நடைபெற்ற ஐயர்ன்மேன் ட்ரையத்தலான் போட்டியில் வினோலி பங்கேற்றுள்ளார். சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 2,500 போட்டியாளர்கள் பங்கேற்ற அந்த போட்டியில் 3 விளையாட்டுகளையும் கொடுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரத்தில் அதாவது 14 மணி நேரம் 53 நிமிடங்களில் நிறைவு செய்திருக்கிறார். 

முதன்முறையாக அப்போது தான் நான் வெட் ஸ்விம் ஆடையை பயன்படுத்தினேன், இது என்னுடைய உடலை வெப்பமாக வைத்திருந்தது அதோடு போட்டி நடக்கும் நாட்டின் வெப்பநிலை பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்ததால் எளிதாக இருந்தது என்கிறார் வினோலி. 

வினோலியின் இரண்டாவது ஐயர்ன்மேன் போட்டியானது செப்டம்பர் மாதம் இத்தாலியில் நடந்துள்ளது. போட்டியை 15 மணி நேரம் 27 நிமிடங்களில் நிறைவு செய்துள்ளார். ஹவாயில் ஆண்டுதோறும் நடக்கும் ஐயர்ன்மேன் போட்டிக்காக தன்னைத் தயார் படுத்தி வருகிறார் வினோலி.

மேலும் பல வெற்றிகளுக்கு பெற இந்த சூப்பர்வுமனுக்கு வாழ்த்துக்கள்...

Related Stories

Stories by Priyadarshini