லாபகரமான நிறுவனத்தை விற்றுவிட்டு உபெர் டிரைவர் ஆன கோடீஸ்வரர் பால் இங்கிலீஷ்!

0

நீங்கள் ஒரு கோடீஸ்வரர்... வீட்டு வாசலில் வரிசைக் கட்டி நிற்கும் உயர்ரக கார்கள்... இந்த சொகுசு வாழ்க்கையை 'உபெர்' டிரைவர் ஆவதற்கு நீங்கள் விட்டுக் கொடுப்பீர்களா??

பால் இங்கிலிஷ் இதைத்தான் செய்துள்ளார். நம்ப முடிகிறதா?? 'கயாக்' எனும் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த இவர், தனது லாபகரமான பயண தேடல்தள நிறுவனத்தை 1.78பில்லியன் டாலருக்கு Priceline என்ற நிறுவனத்திற்கு 2012இல் விற்றுவிட்டு, இன்று உபெர்x- டெஸ்லா(உயர்ரக) காரின் ஓட்டுனராக உள்ளார்.  

தன்னுடைய 90 சதவீத பணி சம்பந்தமான சந்திப்புகள் தொழில்நுட்பம் சார்ந்த அல்லது, கார்ப்பரேட் மேலாளர்களுடன் இருந்ததை உணர்ந்தார் பால். அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த ஒரு நாள் இரவு தீடிரென இந்த ஓட்டுனர் எண்ணம் உதிக்க, நடுஇரவு முதல் 2மணி வரை தன் டெஸ்லா காரில் சுற்றிவந்தார். 

"அன்று ஹாலோவீன் நைட் என்பதால், நான் வாம்பயர் வேடத்தில் இருந்தேன்... காரை அவ்வாறே ஓட்டிச்சென்றேன்... மக்கள் என்னைப் பார்த்து சிரித்தனர்," என்று கூறினார் பால்".

பால், தான் யார் என்பதை தன் பயணிகளிடம் சொல்லிக்கொள்வதில்லை. யாரேனும் கேட்டாலும், தான் ஒரு பொறியாளர் என்று சொல்லிக்கொள்கிறார். தன் பயணிகளின் பலவித அனுபவங்களை, கதைகளை கேட்டுக்கொண்டு வண்டி ஓட்ட அவர் விரும்புகிறார். பயணிகள் கூறுவதில் முக்கிய தகவல்கள் இருந்தால், அதை உடனடியாக தனது புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்கிறார் பால். 

பாலை பொறுத்தவரை, இந்த அனுபவம் ஒரு ஆராய்ச்சி என்கிறார். தன்னுடைய புதிய முயற்சி 'லோலா' வின் தொடக்கத்திற்காக செய்வதாக கூறுகிறார். மக்கள் பயணத்தைப் பற்றி என்ன சிந்திக்கிறார்கள்? எப்படி புக் செய்கிறார்கள்? என்று உற்று கவனிக்கிறார். அதன் அடிப்படையில் தன் தொழிலில் சில மாற்றங்களை செய்ய விழைகிறார். கயாக் தளத்தில் மாற்றங்களையும் கொண்டுவர இந்த ஓட்டுனர் அனுபவம் உதவும் என நினைக்கிறார். 

ஒருமுறை, 13 வயது சீனாவைச் சேர்ந்த பள்ளி சிறுமி பாஸ்டனுக்கு வந்திருந்து, அங்குள்ள சிறந்த பள்ளியில் சேர பாலின் டெஸ்லாவில் பயணித்தார். அந்த சிறுமி எம்.ஐ.டி யில் சேர உதவியாக இருக்கும் தரமான பள்ளியை தேடி வந்திருந்தார். பால் எம்.ஐ.டி யில் மேலாண்மை பள்ளியில், தொழில்முனைவு பாடங்கள் கற்பிக்கும் பகுதிநேர பேராசிரியர் என்று அந்த சிறுமி அறிந்துகொண்ட உடன் நம்பமுடியாமல் ஆச்சர்யத்தில் திளைத்தார். ஒரு உபெர் டிரைவர், உலக பிரபல கல்வியிடத்தில் பேராசிரியர் என்றால் யார் தான் நம்புவார்? ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத பால், 'நான் என் வாழ்க்கையை வாழ்கிறேன்' என்கிறார்.  

உபெரில் பயணிகள் எப்படி சேவையை அளவிடுகின்றனர் என்பதை புரிந்துகொண்டு, தன்னுடைய தொடக்க நிறுவனமான லோலா'வில் அதை அமல்படுத்த உள்ளார். 

4.97 ஸ்டார்கள் பெற்றுள்ள பால், முழு 5 ஸ்டார்களையும் பெறமுடியாதது பற்றி யோசித்து வருகிறார். லோலாவிலும் உபெர் போன்ற முறையை கொண்டுவர எண்ணும் பால், "என் ஏஜென்டுகள் போட்டியை சந்திக்கவேண்டும். அளவீடுகள் நம் சேவையை மேம்படுத்த உதவும்," என்ற நம்பிக்கை உடையவர். 

பாலில் அடுத்த இலக்கு என்ன தெரியுமா? தன் அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஒரு பாரில் கவுன்டருக்கு பின் நின்று வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் ஊற்றித் தரும் பணியில் சேர வேண்டுமாம். "இந்த பணியில் பலவித மனிதர்களை சந்திக்கமுடியும்... இதைவிட என்ன ஆனந்தம் இருக்கமுடியும்..." என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் இந்த பில்லியனர். 

ஆங்கிலத்தில்: சஞ்சனா ரே