'ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்': குடியரசுத் துணைத் தலைவர்

0

இந்திய ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைகளிலும் உலக வர்த்தகத்தில் உயர் வளர்ச்சியை பதிவு செய்துள்ள மின்சாரப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், தொலைத்தொடர்புக் கருவிகள் போன்ற சூர்யோதைய உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட புதியப் பொருட்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் இன்று 2018–ம் ஆண்டுக்கான இந்திய ஏற்றுமதியாளர்கள் இணையத்தின் ஏற்றுமதி சிறப்பு விருதுகளை வழங்கி அவர் பேசினார்.

"அதிநவீன துறைமுகங்கள், விமான நிலையங்கள், உற்பத்தி இடங்களை இணைப்பதற்கான உயர்தர நெடுஞ்சாலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதால் ஏற்றுமதிகள் விரைவாக வளரும்," என்றும் அவர் கூறினார்.

அடிப்படை வசதி, வேளாண்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு அரசு முக்கிய கவனம் செலுத்தி வருவதாக குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். இந்த நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரம் மேலும் வளர கட்டாயம் உதவும் என்றார். 

"இந்தியாவில் உற்பத்தித் துறைக்கு ஆதரவு அளிக்கும் 'இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்', அடிப்படை வசதி மேம்பாட்டில் அதிக கவனம், உள்நாட்டுத் தேவைகளை உயர்த்த எடுக்கப்பட்டுள்ள பல்முனை நடவடிக்கைகள் ஆகியன நமது பொருளாதாரத்தை, மேலும் வலுப்படுத்தும்," என்றார்.

பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசின் முக்கிய முடிவுகள் வரும் ஆண்டுகளில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். “இந்த நடவடிக்கைகள் காரணமாக ஏற்றுமதியாளர்கள் சந்தித்த தொடக்கநிலை கஷ்டங்கள் குறித்து நான் அறிந்துள்ளேன். எனினும் ஜி.எஸ்.டி. குழுவும் மத்திய அரசும் இத்தகைய தொடக்கநிலை துயரங்கள் குறித்து உணர்ந்திருப்பதாகவும் அவற்றை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்துவருகிறது, என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.