ரூ500, ரூ1000 தடை- சிறு, குறு தொழில்முனைவோர், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சந்திக்கப்போவது என்ன?

0

500ரூ, 1000ரூ நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு, பிஜேபி தனது அடிமட்ட தொண்டர்களான சிறுதொழில் புரிவோர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. கிட்டத்தட்ட 6 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட மொத்த வியாபாரிகள் உள்ள நம் நாட்டில், இனி அவர்கள் பண பரிவர்த்தனைகளை குறைத்துக்கொள்ள வேண்டிவரும். இவர்கள் தவிர அங்கீகாரம் இல்லாமல் பல லட்ச வியாபாரிகள் தொழில் புரிந்தும் வருகின்றனர். இவர்களில் பலர் சறக்கு வியாபாரம், விவசாய பொருட்கள் வியாபாரம் மற்றும் விநியோக தொழிலை செய்து வருகின்றனர். சில்லறை வர்த்தகம் சுமார் 900டாலர் பில்லியன் அளவில் உள்ளது என்று கணக்குகள் தெரிவிக்கின்றன. இதில் 10 பில்லியன் டாலர் அளவிற்கு கடனாக மாறும் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு, விற்பனை சந்தையில் தாமதமான பண வழங்கீடு முக்கியக் காரணமாக அமையும். ஏனெனில் இந்தியாவில் பெரும்பாலான சிறுதொழில் வர்த்தகர்கள் பண பரிவர்த்தனை மூலமே தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பதே உண்மை.

பெட்டிக்கடைகள் மற்றும் சிறு கடைகள் வரும் சில மாதங்களுக்கு பலத்த அடியை சந்திக்க நேரிடும். அவர்கள் சில்லறை மற்றும் நோட்டுகளை நம்பியே தொழில் புரிபவர்கள். புதிய நோட்டு அடித்து புழக்கத்தில் வரும்வரை அவர்களின் பாடு கடினமே. விற்பனை குறைந்து தினசரி வர்த்தகத்தில் மந்த நிலையை இவர்கள் சந்திப்பார்கள். கடைகள் பாதிக்கப்பட்டால், மொத்த வியாபாரிகளும் இதனால் பாதிப்படைவார்கள், குறிப்பாக பொருட்களுக்கான பணத்தை அளிப்பதில் சிக்கலை சந்திப்பார்கள். சிறு-குறு தொழிலாளர்கள், சில்லறை வர்த்தகர்கள், விவசாயிகள், ஆடை விற்பனையாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை தொழிலாளர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பொதுவாக 30 முதல் 60 நாள் வரை பொருட்களுக்கான பணத்தை செலுத்த அவகாசம் அளிக்கப்படும், ஆனால் தற்போது அது மேலும் 30 நாட்களுக்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் விளைவுகள் இதோ:

* சில வாரங்களுக்கு மளிகை பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும்

* சில்லறை வர்த்தகத்தின் லாபம் வரும் காலாண்டிற்கு மூன்றில் ஒரு பங்கு குறையும்

* தினசரி பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் இருப்பு அதிகரிக்கும்

* புதிய முறையில் விற்பனை பணத்தை பெற வழிகள் அமைக்கவேண்டும்

* குழப்பான இந்த சூழ்நிலையில் பெட்டிக்கடைகள் பெருத்த அடியை சந்திக்கும்

* சிறு ட்ரக் ஓட்டுனர்களும் ஒரு மாதத்திற்கு நஷ்டத்தை சந்திப்பர்

சிறு பெட்டிக்கடைகளை எடுத்துக்கொண்டால், ஒரு லட்சம் ரூபாய் விற்பனையில் 10 சதவீத லாபத்தை பெறுவார்கள், இவை பெரும்பாலும் 500ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை கொண்டு இருக்கும். இந்தியாவில் சுமார் 8 மில்லியன் பெட்டிக்கடைகள் உள்ளன, அவர்களின் வாடிக்கையாளர்கள் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிவிட்டு வரும்வரை காத்திருக்கவேண்டும். அதற்கு பின்னரே விற்பனை பரிவர்த்தனை பழைய நிலைக்கு தொடரும்.

“இந்த சிறு கடைகளே இந்திய பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு. அவர்கள் சில காலம் பாதிக்கப்படுவார்கள். இதற்காக வங்கிகள், ஒருங்கிணைந்த, எலக்ட்ரானிக் பேமண்ட் முறைகளை விரைவாக கொண்டுவரவேண்டும், என்று ஸ்நாப்பிஸ் நிறுவனர் ப்ரேம் குமார் கூறினார்.

பெட்டிக்கடைகள் மற்றும் மொத்த வியாபாரிகள் டிஜிட்டலை நோக்கி செல்லவேண்டும்

இந்தியாவில் கார்ட் முறையை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி 20 லட்சத்துக்கும் குறைவான இடங்களில் மட்டுமே ஏற்கப்படுகிறது. ஒருவரிடம் 100 ரூபாய் நோட்டு இல்லை என்றால், அவர் பணம் பரிவர்த்தனை செய்வதே கடினமாகிவிடும். அதன் காரணமாக உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை சக்கரம் பாதிக்கப்படும்.

இருப்பினும் இந்த சிக்கல்கள் தற்காலிகமானது தான். தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினால் பிரச்சனைகள் குறையும். ஆன்லைன் மூலம் வர்த்தகம், என்று தொழில்நுட்பத்தை நாடத்தொடங்கினால், பணம் செலுத்தும் முறைகள் செயல்பாட்டுக்கு வந்தால், கறுப்பு பணம் மற்றும் கள்ளநோட்டுகளின் புழக்கம் பெரும் அளவிற்கு கட்டுப்படுத்த முடியும். இதுவே டிஜிட்டல் இந்தியாவுக்கு வழி செய்யும்.

”பெட்டிக்கடைகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி மெல்ல நகர்வது நல்லது. வாடிக்கையாளர்களிடன் குறைந்த எண்ணிக்கை நோட்டுகள் இருப்பதால் டிஜிட்டல் பேமண்ட் முறை அவர்களின் விற்பனையை அதிகரிக்க உதவும். 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு வரும்வரையில் இந்த குழப்பங்கள் தொடரும் அதனால் இனி ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்ய கற்றுக்கொள்வது நம் எல்லாருக்குமே நன்மையை பயக்கும்.

ஆங்கிலத்தில்: விஷால் க்ருஷ்ணா