'மீம்'களுக்கு பின்னால் 'மீட்பர்'கள்: 'கோவளம்' மூர்த்தியும் அலைச்சறுக்கு நாயகர்களும்!

0

கனமழை வெள்ளத்தில் மிதக்கும் சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடி. ஓர் இளைஞர் சிறு படகில் வருகிறார். அவரை மறித்து கட்டணம் பெற்று ரசீது அளிக்கிறார் மற்றொரு இளைஞர். ஒரு ஜாலிக்காக எடுக்கப்பட்ட இந்த வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல். சற்றே ஆர்வத்துடன் ஆராய்ந்து பார்த்தபோது, அந்த மீம் (Meme) மக்களுக்குப் பின்னால் மீட்பர்களும், சமூக அக்கறையும் மிகுந்திருந்தது தெரிந்தது.

(கீழே உள்ள மீம் இல் உள்ள இடம் குளமோ, ஏரியோ அல்ல, சோழிங்கநல்லூர் சுங்க சாவடி)

"அலை மோதும் கடலோரம் அழகா உன் திருப் பாதம்..." - இப்படி நீண்டு ஒலிக்கிறது மூர்த்தி மேகவனின் காலர்ட்யூன்.

சோழிங்கநல்லூர், ஓஎம்ஆர் பகுதிகளில் மீட்புப்பணியில் குழுவாக ஈடுபட்டதைப் பற்றி தமிழ் யுவர்ஸ்டோரி மூர்த்தியிடம் உரையாடல் நடத்தியது. அது பற்றி கூறுகையில்...

சமீபத்தில் சென்னை நகரில் பெய்த மழையின் போது, இருப்பிடத்தை விட்டு வெளியேற முடியாத சுமார் 200 பேர்களுக்கு எங்கள் குழு உதவியது என்கிறார் மூர்த்தி.

அதைப் பற்றிப் பேசுகையில், "அத... அதைப் பற்றி எப்படி சொல்றது? அந்த வேலைய ரொம்ப ஜாலியா பண்ணோம். காப்பாத்த போறோம்னு உணர்வும் இருந்தது. ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கல்லூரி விடுதியில் சிக்கிய மாணவ - மாணவிகளை மீட்குமாறு போலீஸ் கேட்டுக்கொண்டது. உடனே படகுகளுடன் சென்று மீட்புப் பணியில் இறங்கி அவர்களைக் காப்பாற்றினோம்.

அதன்பிறகு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகில் மீட்டு பத்திரமான இடத்தில் இறக்கினோம். அந்த இடத்தருகே இருந்த டோல்கேட் உள்ள சாலை வெள்ள நீரில் மூழ்கி இருந்தது. அங்கு படகில் இருந்தபடி ரசீது பெறுவது போல் பசங்க நாடகமாடி, அதை வீடியோவாக்கினர். அதுதான் ஃபேஸ்புக், ட்விட்டரில் ஜாலியாக உலா வந்துகொண்டிருக்கிறது.

"மீட்புப் பணி என்பது அது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவம். எல்லாரும் க்ரூப்பா போய் பண்ணினோம். அதற்கு காசுக் கொடுப்பதாய் நெறைய பேர் சொன்னாங்க. நாங்க வேண்டாம்னு மறுத்துட்டோம்."

மேலும், மூர்த்தி மற்றும் அவரது குழு பற்றியும் அவரது பின்னணி என்ன என்பதை பற்றியும் நாம் வினவியபோது, அவரின் தொழில்முனைவை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்,

தமிழகத்தில் பலருக்கும் அறிமுகம் இல்லாத அலைச் சறுக்கு விளையாட்டை 'சோஷியல் சர்ஃபிங் ஸ்கூல்' (Social surfing school) மூலம் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் மூர்த்தி. சென்னை அருகே கோவளத்தின் மீனவ கிராமத்தில் பிறந்த மூர்த்தி, படித்தது செயின்ட் ஜோசஃப்ஸ் பள்ளியில்.

"ஆறாவது வரைக்கும்தான் ஸ்கூலுக்கு போனேன், அதுக்கப்புறம் படிக்க ஆர்வமில்லை. இந்த ஸ்போர்ட்ஸ் ரொம்ப இஷ்டம் இருந்ததால முழு ஆண்டு பரீட்சை எழுதாம எஸ்கேப் ஆயிட்டேன்" என்பவரிடம், இந்த விளையாட்டை யார் அறிமுகப்படுத்தியது எனக் கேட்டால்,

"சர்ஃபிங் எனக்கு அறிமுகப்படுதியது கடவுள்" எனச் சிரிக்கிறார்.

மீனவக் குடும்பத்தில் இருந்து...

"நான் மீனவக் குடும்பத்தை சேர்ந்தவன். கடலுக்கும் எங்களுக்கும் தொடர்பு அதிகமாக இருக்கும். சிறு வயதில், உடைந்த கதவுப் பலகையை வைத்து அலைகளில் விளையாடுவோம். நான் மீன் பிடிக்க போகும் அளவு வளர்ந்த பிறகு ஒரு நாள், ஜாக் ஹெப்னர்னு ஒருத்தரை சந்திச்சேன். இப்போ அவர் பெயரை சர்ஃபிங் சுவாமினு மாத்திக்கிட்டார்.

இந்தியாவில் முதல்முறையாக சர்ஃபிங் கிளப் தொடங்கியது அவர்தான். அவர் எங்களுடைய கிராமத்திற்கு வந்திருந்த போது, அவருடைய போர்டை பத்து நிமிடம் வாங்கி, நான் சர்ஃப் செய்ய ட்ரை பண்ணேன். நானே சுயமாக பெடல் செய்து நானே, ரெயிட் செய்து வந்தேன். அதனால் அவருக்கு என்னை பிடித்து விட்டது. ஆனால், பிறகு அவருடைய ஃபோன் நம்பரை தொலைத்து விட்டேன்.

ஆனால், சர்ஃபிங் மேல் இருந்த ஆசை மட்டும் குறையவில்லை. 2003-ல் 1500 ரூபாய் கொடுத்து, ஒரு போர்டு வாங்கினேன். அது ஒரு பழைய போர்டு. அது எங்கள் கிராமத்தில் இருக்கும் ஒரு பையனுக்கு, ஆஸ்திரேலியாக்காரர் ஒருவர் பரிசாய்க் கொடுத்தது. அந்த போர்டின் அருமை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அது வாங்கியதற்கு 'எதுக்கு இவ்ளோ காசு கொடுத்து வாங்குன'னு வீட்டில் சத்தம் போட்டார்கள்.

எங்களுடையது ஏழைக் குடும்பம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்து அப்பா, என் சிறு வயதிலேயே வீட்டை விட்டு போய்விட்டார். இன்னும் வரவில்லை. அம்மா, அவங்களோட அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. எனக்கு ஒரு அக்காவும், தங்கச்சியும். பாட்டி வீட்டில் தான் வளர்ந்தோம். 2003-ல் நான் போர்டு வாங்கி சர்ஃப் பண்ண தொடங்கிய போது, என்னை கிண்டல் செய்தார்கள், கோமாளிப் போல பார்த்தார்கள். ஆனால், என்னோட லட்சியம் அலையில நின்னுட்டு வரணும்கறது மட்டும் தான். நானே சுயமாக கற்றுக் கொண்டேன்.

அப்போது, 2008-ல் எனக்கு யோதம் அகம்-ங்கற ஒரு இஸ்ரயேலரோட அறிமுகம் கிடைத்தது. வாரக் கடைசில அவர்கூட சேர்ந்து சர்ஃப் பண்ணுவேன். நான் அவரிடம், 'நீங்க எனக்கு ஒரு போர்டு குடுங்க, நான் என்னிடம் இருக்கும் போர்டை வைத்து கிராமத்து சிறுவர்களுக்கு பயிற்சிக் கொடுக்கிறேன்'னு சொன்னேன்.

உடனே அவர், 'ஓகே, வெயிட் அண்ட் சீ'னு இங்கிலீஷ்ல சொன்னார். அவர் எனக்கு ஒரு போர்டு கொடுத்தார். அந்த போர்டின் மதிப்பு ஒரு லட்சம்.

வியக்கவைக்கும் நிபந்தனைகள்...

ஆறு மாதம் கழித்து வந்து, நிறைய சிறுவர்கள் சர்ஃப் செய்வதை பார்த்ததும், அவருக்கு என்னை மிகவும் பிடித்துப் போனது. பிறகு, அவர் என்னப் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்தார். அப்போது தான் எனக்கு சர்ஃபிங் பள்ளி தொடங்கணும்னு ஆசை வந்தது. 2010-ல யூட்யூப்ல அந்தப் படத்தோட ட்ரெயிலரை வெளியிட்டார். அந்த சமயத்தில் நிதி கிடைக்க கொஞ்சம் சிரமமாக இருந்தபோது, டிடி கம்பெனியின் நிறுவனர் எங்களுக்கு ஒரு வருடம் உதவி செய்வதாய் முன் வந்தார்.

2013 நவம்பர் மாதம் என் கனவு நனவானது. என் ஆசைப்படி நான் ஒரு சர்ஃபிங் ஸ்கூல் தொடங்கினேன். 

அதை வர்த்தக ரீதியாக இல்லாமல், சமூக நோக்கோடு நடத்த வேண்டும் என நினைத்தேன். அதனால், நான் போர்டு இலவசமாக கொடுப்பேன், வகுப்புகள் இலவசமாக நடத்துவேன், ஆனால், ஒரே நிபந்தனை என்னவென்றால், புகைப்பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது. இப்படி செய்வதன் மூலமாக இதைப் போன்ற பழக்கங்களுக்கு அடிமை ஆவதற்கு எதிராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.

எங்களிடம் வகுப்பெடுத்துக் கொள்ளும் ஐ.டி துறையில் இருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களிடம் வாங்கும் கட்டணத்தை வைத்து குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் கட்டுவேன். என் குழுவுடன் சேர்ந்து, கடற்கரையை சுத்தம் செய்வேன். வருடம் ஒரு முறை மருத்துவ முகாமும், கண் சிகிச்சை முகாமும் நடத்துவேன்."

ஒரு வருடம் உதவுவதாய் முன் வந்த ஸ்பான்சர், இன்று வரை மூர்த்திக்கு முழு ஆதரவாய் இருக்கிறார். சர்ஃபிங், விண்ட் சர்ஃபிங், கயக்கிங், ஸ்டாண்ட் அப் பெடலிங் போன்ற நீர் விளையாட்டுக்கள் மூர்த்தியின் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதுவரை மூன்று சர்வதேச போட்டிகளையும் ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறார் மூர்த்தி.

"கடைசியா நடத்துன போட்டியில், பாலி, இந்தோனேஷியா, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்டார்கள். 'இந்த பள்ளியை போல சிறப்பான இருப்பிடமும், கட்டமைப்பும் உடைய பள்ளி ஆசியாவிலேயே வேறெங்கும் இல்லை'னு சொன்னார்கள்" என தன் பள்ளியைப் பற்றிப் பூரிக்கிறார் மூர்த்தி.

இளைஞர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாலும், சமூக நோக்கொடு செயல்படுவதாலும் மூர்த்திக்கு, உள்ளுர் மட்டுமில்லாமல் வெளியூரிலும் நல்ல அபிமானம் உண்டு. எத்திராஜ் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி மற்றும் டெட் டாக்-ல் (TedTalk) பேசியிருக்கும் மூர்த்தியின் பள்ளிக்கு, முரளி விஜய், ஜீவா, பரத் போன்ற திரை நட்சத்திரங்களும் வருகிறார்களாம்.

மூர்த்தியின் ஃபேஸ்புக் பக்கம், Social SurfingSchool  

கோவளம் பாயின்ட் - ஆவணப் படத்தின் ட்ரெய்லர்

(படங்கள் உதவி: மூர்த்தி மேகவன்)