3 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ள கோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாயகன்!  

0

49 வயதான கோவையை சேர்ந்த யோகநாதன் பஸ் கண்டக்டராக பணியாற்றுகிறார், ஆனால் அவரது சாதனை என்பது அவரை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்துள்ளது. ஆம் கடந்த 30 ஆண்டுகளாக, யோகநாதன் 3 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை தமிழகம் எங்கும் நட்டுள்ளார் என்பதே அந்த சாதனை. தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் இந்த பணியை அவர் ஓயாமல் செய்துவருவது அவரை பிரபலமாக்கியுள்ளது. 

1980’களில் நீலகிரி பகுதிகளில், மரங்களை வெட்டுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்தார் யோகநாதன். அன்று தொடங்கிய இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வம் இன்றும் தொடர்கிறது. 

“என்னுடைய வார விடுப்பு நாளான திங்கள்கிழமை நான் மரம் நட சென்றுவிடுவேன். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழங்களுக்கு சென்று மரக்கன்றுகளை நடுவேன்,” என்று தி நியூஸ் மினிட் பேட்டியில் தெரிவித்துள்ளார் யோகநாதன். 

யோகநாதன் இதுவரை தமிழகம் முழுதுமுள்ள 3000 பள்ளிகளுக்கு சென்று மரக்கன்று நடுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஒவ்வொரு குழந்தை நடும் மரக்கன்றுவிற்கு அந்த குழந்தையில் பெயரையே வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போதுதான் தாங்கள் நட்ட மரக்கன்றை அவர்களே நன்கு பராமரிப்பார்கள் என்று கூறியுள்ளார். 

“உதாரணத்திற்கு, ராமு என்ற பையன் புங்கை மரக்கன்றை நடும் பொழுது, அந்த மரத்திற்கு ‘ராமு புங்கை’ என்று பெயரிடுவேன். அந்த மரக்கன்றை அந்த பையனின் சகோதரன் போல பாவித்து தினமும் தண்ணீர் ஊற்றச் சொல்வேன்,” என்றார். 

இந்த சமூக பணியினால் அடிக்கடி வேலைக்கு லீவு போடுவதால், யோகநாதனை இதுவரை 40 முறை  இடம் மாற்றம் செய்துள்ளனர். சொந்த பணிகளுக்காக தான் லீவு எடுக்கவில்லை என்றும் மரக்கன்றுகளை நடுவதற்காக பயணம் மேற்கொள்ளவே வேலைக்கு லீவு எடுப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார். 

பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள யோகநாதனை தற்போது பணி இடத்திலும் ஒன்றும் சொல்வதில்லை. அவரது நற்பணிக்கு ஆதரமாக இருப்பதாக கூறியுள்ளார். ‘இகோ வாரியர் அவார்டு’ , ‘மாநில சுற்றுச்சூழல் துறை விருது’, ‘சிஎன் என் - ஐபிஎன் ரியல் ஹீரோ விருது மற்றும் பெரியார் விருது என்று பல விருதுகளை அடுக்கியுள்ளார் யோகநாதன். 

கட்டுரை: Think Change India