’ஆக்சிலர் வென்சர்ஸ்’ அதன் சந்தை ஒருங்கிணைப்பு திட்டத்துடன் சென்னையில் கால் பதித்தது! 

0

நாட்டின் மிகப்பெரிய ஆக்சிலரேட்டர் திட்டத்தை நடத்திவரும், முக்கிய சீட் முதலீட்டாளர்களைக் கொண்ட நிறுவனமான ’ஆக்சிலர் வென்சர்ஸ்’ Axilor Ventures சென்னையில் அதன் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில், 65 இருக்கை வசதிகளைக் கொண்ட இடத்தில் தொழில்முனைவோருக்கான ஆக்சிலர் திட்டம் இயங்கும் என அறுவித்துள்ளனர்.

ஆக்சிலர் வென்சர்ஸ் சென்னையில் விரிவடைவது குறித்து அதன் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ கணபதி வேணுகோபால் குறிப்பிடுகையில் பெங்களுருவில் நடைப்பெறும் தங்களது ஆக்சிலரேடர் திட்டத்திற்கு சென்னையிலிருந்து குறைந்த அளவிலான விண்ணப்பங்களே வருவதால் சென்னையில் அதன் செயல்பாடுகளை விரிவடையச் செய்வதன் மூலம் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த விரும்புவதாக குறிப்பிட்டார்.

ஆக்சிலார் வென்சர்ஸ்-ன் திட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்
ஆக்சிலார் வென்சர்ஸ்-ன் திட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்
”தமிழகத்தில் சென்னை ஐஐடி உட்பட மிக அதிக அளவிலான இன்குபேட்டர்கள் உள்ளனர் என்றும், இந்த இன்குபேட்டர்களின் உதவியுடன் உருவாகியுள்ள ஸ்டார்ட் அப்களில் பெரும்பாலானோர் ஆக்சிலரேட்டர் திட்டத்துக்கு தயார் நிலையில் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். அந்த வகையில் இன்குபேட்டர்களின் உதவி பெற்ற பட்டதாரிகளை அணுகி தங்கள் திட்டங்கள் வாயிலாக கூடுதல் மதிப்புகளை ஸ்டார்ட்-அப்’களுக்கு வழங்க இந்த விரிவாக்கப் பணி வழிவகுக்கும்,” என்றார் கணபதி.

மேலும் இந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் உள்ளபோதும் ஸ்டார்ட் அப்கள் எளிதாக நிறுவனங்களை அணுகவும் நிறுவனங்கள் புதுமைகளை உருவாக்கவும் உதவும் வகையில் வலுவான ஒருங்கிணைப்பு இல்லை. அதேபோல் தலைச்சிறந்த விசி-க்களை ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் அணுகுவதும் கடினமாகவே உள்ளதால் முதலீடுகள் பெறுவதில் சவால்கள் எப்போதும் நிலவி வருகிறது என்றார். 

இந்த முக்கிய பிரச்சனையை களையும் வகையில் தங்கள் ஆக்சிலரேட்டர் திட்டத்தில் சேரும் ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள், ஒரு தெளிந்த பார்வையுடன் தலைச்சிறந்த விசி-க்களை சந்திக்கும் வாய்ப்பினை ஆக்சிலார் ஏற்படுத்தித் தரும் என்றார்.

”மேலும் இந்த சிக்கலுக்கான தீர்வாக ஆக்சிலர் வென்சர்ஸ் AXENT என்கிற அதன் சந்தை ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்ப நிலையில் இருக்கும் ஸ்டார்ட் அப்கள் பெரு நிறுவனங்களை அணுகவும் உடன் பணியாற்றவும் வாய்ப்பு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதற்காக நாட்டின் சில மிகப்பெரிய நிறுவனங்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளது,” என்றார் கணபதி.

ஆக்சிலர் நிறுவனத்தின் முதல்கட்ட விரிவாக்கப் பணிக்கு உகந்த இடமாக சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஆக்சிலர் வென்சர்ஸ் தலைவர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,

”நாட்டின் சிறந்த ஸ்டார்ட் அப்கள் மட்டுமல்லாமல் ஐஐடி மெட்ராஸ் போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களும் சென்னையில் உள்ளது. இந்த விரிவாக்கப் பணி கல்வி நிறுவனங்களுடனான எங்களது இணைப்பை வலுவாக்கும். அத்துடன் ஆழ்ந்த அனுபவமுள்ள இந்நிறுவனங்களிலிருந்து வெளிவரும் ஸ்டார்ட் அப்களில் நாங்கள் முதலீடு செய்வதற்கு சாத்தியமானவர்களைத் ஆராயவும் வாய்ப்பு கிடைக்கும்.”

இங்குள்ள வழிகாட்டிகளுடன் நாங்கள் ஒன்றிணையவும் வாய்ப்பு கிடைக்கும் என கூறிய அவர், ஏற்கெனவே ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்கள் ஆக்சிலர் வென்சர்ஸ் நிறுவனத்தின் ஆக்சிலரேடர் திட்டத்தில் பங்கேற்று சீட் நிதி வாயிலாக முதலீடும் பெற்றுள்ளனர் என்றார்.

ஆக்சிலர் வென்சர்ஸ் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கவிருக்கும் அதன் 7-வது ஆக்சிலரேடர் திட்டக் குழுவிற்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த 100 நாள் திட்டமானது ஆரம்ப நிலையில் உள்ள தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களின் நிறுவனர்கள் ஆர்வமாக எதிர்நோக்கும் திட்டமாக உருவாகியுள்ளது.

5 முக்கிய துறைகளில் செயல்படும் இவர்களின்  இந்த திட்டம்; நுகர்வோர், ஆழ்ந்த தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப், நிறுவனம், நிதி சார்ந்த தொழில்நுட்பம், சுகாதாரம் சார்ந்த தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்களில் கவனம் செலுத்துகிறது.

ஆக்சிலர் அதன் சந்தை ஒருங்கிணைப்பு திட்டமாக AXENT திட்டத்தை அறிமுகப்படுத்தியது. AXENT ஸ்டார்ட் அப்களுக்கான மிகப்பெரிய சந்தை ஒருங்கிணைப்பு முயற்சியாகும். முன்னணி விசி-க்கள், துறையின் முன்னணி பெருநிறுவனங்கள், சந்தை உத்திகளை கையாள உதவும் பார்ட்னர்கள் (go-to-market parters) மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்றவற்றை அணுகவும் இத்திட்டம் வாய்ப்பளிக்கும். இந்தப் பிரிவுகள் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனர்களை ஒருங்கிணைத்துள்ளதால் இது நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைப்பு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து ஆக்சிலர் வென்சர்ஸ் இணை நிறுவனர் எஸ்.டி.ஷிபுலால் குறிப்பிடுகையில்,

“கடந்த மூன்றாண்டுகளில் ஆக்சிலர் ஆக்சிலரேடர் திட்டம் ஆரம்ப நிலையில் இருக்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனர்களின் முன்னணி தேர்வாக உருவாகியுள்ளது. ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சி, அணுகுதல், முதலீடு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடைய உதவுவதால் இந்த திட்டம் மதிப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பட்டம் பெறும் ஸ்டார்ட் அப்கள் தங்களது வளர்ச்சியை மூன்று மடங்கு விரைவுப்படுத்தி ஆக்சிலரின் மிகப்பெரிய சந்தை ஒருங்கிணைப்பு முயற்சியை அணுகி, திட்டத்தின் இறுதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான நிதியை உயர்த்தலாம்,” என்றார்.

ஆக்சிலர் வென்சர்ஸ்

ஆரம்ப நிலையில் இருக்கும் ஸ்டார்ட் அப்களுக்கு ஆதரவளிக்கும் தளமாக விளங்குகிறது ஆக்சிலர் வென்சர்ஸ். இது இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சிலரேட்டர் திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. முன்னணி சீட் முதலீட்டாளர்களில் இவர்களும் ஒருவர். கடந்த மூன்றாண்டுகளில் 80-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்களுக்கு ஆதரவளித்துள்ளது. முப்பதுக்கும் அதிகமான ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளது. அக்சிலர் வென்சர்ஸ் நிறுவனத்தால் ஏற்கெனவே பயனடைந்த 200-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் ஒரே சமூகமாக இணைந்துள்ளனர்.